Sunday, March 3, 2013

சிங்கம் 65 விலை ஒரு App****al

தேவையான பொருட்கள் :
  • ஒரு சிங்கம்
  • சிங்கத்திற்கு கொஞ்சமாய் அ**சல் ஆசை
செய்யப்படும் முறை:

கத்தி வைக்கையில்
துள்ளி குதித்து ரத்தம்
எங்கும் சிதறும் என்று அஞ்ச வேண்டாம்

ஒன்று ஒன்றாகவா?
இல்லை வெந்நீரில் முக்கி ஒரே மூச்சகவா!
எப்படி ஆய்வது இதன் பிடரி முடியினை
ஐயம் வேண்டாம்

நீ விழாவிற்கு வந்து
வேடிக்கை பார்த்தால் மட்டும் போதும்
தானாய் வேடிக்கை காட்டும்
தானே வேடிக்கை ஆகும்

கருப்பனின் அருவாளை
எதிர்க்கொள்ளும் ஆடாய்
தாலியை தொட துணியும்
ஒரு இளைஞனாய் தன்னை
ஆயத்தபடுத்திக் கொள்ளும் சிங்கம்
ஒரே வித்தியாசம்
இதனிடம் வாழும் ஆசை இருக்கும்

சுவைக்கெல்லாம் வேண்டாம்
பார்த்தாலே மயங்கிடுவோம்
அப்படியோர் மசாலா தயாரித்து…
தன் குற்ற நிர்வாணத்தில் பூசிக்கொள்ளும்
பக்குவமாய் பருவம்வர காத்திருக்கும்
நடுநடுவே சுவை பார்க்கும்
சூடு சுரணை ஏற்ற உப்பும் காரமும்
எட்டிவிட்டதா சோதித்துக்கொள்ளும்…
 
புது கணவனுக்கு சமைக்கும்
மனைவியின் அக்கறையோடு
சிங்கம் தன்னை தயார் படுத்தும்…

தக்க சமயத்தில்
தங்க நிறத்தில் தன்னை தானே
வறுத்தெடுக்கும்…
ஊரெல்லாம் இதைபற்றி பேசும்
எத்திக்கும் இதன் வாசம் வீசும்
கூடி வந்து பூனையெல்லாம்  
வாய் புண்ணானாலும் பரவாயில்லை என
சிங்கத்தை கொஞ்சம் அள்ளி சுவை பார்க்கும்
வாய் முழுக்க அள்ளிக்கொண்டாலும்
வக்கனையாய் குறை சொல்லும்…

ஆறாயிரம் ஆறாகும்
ஆறே நாளில் காணாமல் போகும்
ஆனாலும்
அந்த நெயிட்டு வறுத்த மசாலா வாசமட்டும்
ஆறுமாசம் எங்கும் பேசும்…

தின்று சுவை பார்த்துவிட்ட
பூனையோ பசி தீரமால்
அடுத்த பந்தியிலும் நுழையும்…
போன பந்தி வறுவல் போல
இந்த பந்தியில் இல்லை என்று
இலை மூடி மொய் எழுதாமல் ஓடும்…

பின்குறிப்பு – ……………………………………………………………….. [என்ன எழுதனும்]

அடடே ஆச்சரியக் குறி – 4

முன்குறிப்பு – ஒரு கவிஞனின் கவிதைக்கு சோதனை எலிகள் நண்பர்கள் தான்… இங்கே என் தோழி… நன்றி தோழி…

வைவா கேள்விக்கு முழிக்கும்
என்ஜினீயர் மாணவன்  ஆகிறேன் 
“நல்லா இருக்கா?” என்று நீ கேட்கையில்

வானத்து வானவில்லிற்கே
ஏழு தான்…
அடி பூமியின் வானவில்லே
உனக்கு எல்லா வண்ணமும் அழகு…
 
அழகான உடைதான்
வாங்கவேண்டுமென்றால்
கடையையே வாங்கலாம் உனக்கு…
-    இப்படிக்கு trial அறை கண்ணாடி 
o.o.o

அவளுக்கோ இவளுக்கோ வைத்தால்
கடனே என நான் சிவப்பென்
உனக்கு வைத்தால் மட்டும் தான்
நான் வெட்கப்படுவேன்

உன்னை அழகென்றெல்லாம்
சொல்ல மாட்டேன்
வேண்டுமென்றால் இனி அழகை
உன் பெயர் சொல்லி வர்ணிக்க சொல்லிவிடுகிறேன்…

-    இப்படிக்கு நீ வைத்து கொண்ட மருதாணி
o.o.o

ஒரு கவிஞன் படிக்கும்
கவிதை நீ
நித்தம் ரசிக்கும் 
இசை நீ 
எந்தன் வயதில்
என் தாய் நீ
நான் கொஞ்சிக்
கொள்ளு(ல்லு)ம் பிள்ளை நீ   
என் காதை திருகும்
தோழி நீ
எவ்வளவு சொல்ல தீருமா?
நட்பென்ற சொல்லின் உயிர் மெய்  நாம்…
இது போதுமா? 

o.o.o

கவிதைக்கு பொய் அழகென்ற
அந்த கவியரசனை பொய்யாக்கி விட்டாய்
இங்கே மெய்யாய் இதோ…
-    இப்படிக்கு நான்
அடடே ஆச்சரியக்குறி – 1 | 2 | 3

Thursday, February 14, 2013

காதலித்து பார் v2.0

வைரமுத்து ஏற்கனவே காதலித்து பார் எழுதிட்டாரு Video or Lyrics. அதோட சுவைய தரத்த என்னால நெருங்க முடியுமா தெரியல. ஒரு சிறு முயற்சி... v2.0 . காதலித்து பார்...
காதலித்து பார்...
உன(ங்களு )க்கென ஒரு உலகம் உருவாகும்
திங்கள் கிழமைகூட பிடிக்கும்
24 மணிநேரம் நொடியாய் தீரும்
எஸ்களேசன் கடிதம் கூட கவிதையாய் தெரியும்
அவள் பெயர் கவிதையென்பாய்
வியர்வை நனைத்த சட்டையை வாசம் என்பாய்
ரிசார்ஜ் கடைக்காரன் நண்பன் ஆவான்
நீ account ல வச்ச கடன குடுக்காம இரு தெரியும்
வீட்டுக் கண்ணாடி அழும்
இன்றாவது உளறாமல் சொல் என்று திட்டும்
உன் உளறலில் உன் நண்பன் பைத்தியம் ஆவான்
கூடிய  சீக்கிரம் கொலை காரன் ஆவான்

கண்ணீர் ரசிப்பாய்
கண்ணீரோ முத்தமோ கைப்பேசி நனைப்பாய்
ஒவ்வொரு நிமிடத்தையும் ருசிப்பாய்
அறிவியல் கண்டிராத விந்தையெல்லாம்
உன் இதயம் காணக் காண்பாய்
உலகத்தின் கவிதைகளெல்லாம்
உனக்காக பேசக் காண்பாய்
தொண்டை குழியில் விழுங்கும் எச்சிலோடு
வார்த்தையையும் விழுங்கி தொலைப்பாய்
காதலித்து பார்...

பார்வைகளின் பற்களுக்கு
உயிரை உறிஞ்சக் கொடுப்பாய்
கூட்டத்தில் தொலைந்து போவாய்
தனிமையில் மீண்டு வருவாய்
பாலை காவல்காக்கும் பூனை ஆவாய்
உண்ணாமல் உயிர் வாழ்ந்து
அறிவியலை தலை பிய்க்க செய்வாய்
இறக்கைகள் இன்றி பறந்ததுண்டா?
புவி விசை கடந்ததுண்டா?
காதலித்து பார்

"ம், அப்புறம்! சொல்லு..." இதையே
மூன்று மணிநேரம் பேசியதுண்டா?
"ம்" என்ற மெய்யில் மொத்த உயிர் கண்டதுண்டா?
360 டிகிரிக்கு கண்கள் திரும்புமே அதற்காகவேனும்
ஓரக் கண் பார்வை, இதழோர சிரிப்பு, உரசி போகும் கூந்தல்
கெஞ்சி கெஞ்சி கேட்ட பின்பு
"ப்ச்" என்கிற ஓசை முத்தத்தில் சிலிர்த்ததுண்டா அதற்காகவேனும்
இரண்டு உயிர் சுமந்ததுண்டா?
உயிரெதும் இன்றி வாழ்ந்ததுண்டா ? அதற்காகவேனும்
காதலித்து பார்...
இன்னும் இன்னும்
வார்த்தைகளில் அடங்காத எவ்வளவோ வேண்டுமா
காதலித்து பார்

மதம், சாதி, கலாச்சாரம், நிறம், பணம்
எவர் வந்து எதிர்த்து நின்றாலும்
உயிரையே உருவி எடுத்தாலும்
காதல் உன்னை தூக்கி எறிந்தாலும்
காதலித்து பார்
சொர்க்கம் நரகம் இரண்டில் ஒன்று
இங்கேயே நிச்சயம்
காதலித்து பார்
[கடைசி வரிகள்... பல பொருள்கள்... காதலுக்கு பொதுவானதகயால் தாக்கம் அதிகம்.மன்னிக்கவும்.  நன்றி திரு.வைரமுத்து ]
சொர்க்கம் நரகம் இரண்டில் ஒன்று
இங்கேயே நிச்சயம்
காதலித்து பார் ... இந்த வரிகளுக்கு சொந்தகாரர் வைரமுத்து தாங்க. நான் இல்லை.

Sunday, February 10, 2013

நில் கவனி காதலி

 
படம் இங்கிருந்து
.
அடியே!
துணி சுற்றி போகும் மதியே!
பங்குனி பகலில் எனக்கு மட்டும்
அமாவாசை ஏனோ? நீ அறிவாய்!
 .
சீறி பாய வடிவமைத்தும்
யமஹா!
ஸ்கூட்டியிடம் தோற்கும் சுகம் தனியே  
mileage வர மட்டுகுதுன்னு slow ஆ போய்ட்டு பொய்ய பாரு
பெட்ரோல் தீர்ந்த பின்னும்
என் வண்டி ஓடுகிறதே
உன் ஈர்ப்பு விசையோ?
எந்த கம்பெனி வண்டிப்பா அது. எனக்கு ஒன்னு வாங்கி கொடுப்பா
நீ முன் நிற்பதென்றால்
பச்சை விளக்கு இன்று முழுக்க
எரியாமல் போனாலும் சரியே
 .
தலைக்கு போடு
இருதயத்திற்கு வேண்டாமடி கவசம்...
பெட்ரோல் விற்கும் விலையில்
எதற்கடி இரண்டு வாகனம்...
வா என் பின்னாடி இடம் காலிதான்
future planninga pa :P
.
.
.
.
.
.
.
இருங்கப்பா என்ன கிளம்பிட்டிங்க... இந்த போஸ்ட் கவிதை இல்ல... கவிதையோட கருவ பத்தினது... நான் இப்பதான் சென்னைல வண்டி ஓட்ட பழகுறேன். என்னோட சில அனுபவங்கள் இது. விக்கி பையன்ட கேட்டு பாத்தேன். அவன் சொல்றான் இந்த வண்டி ஒட்டுறவைங்க தான் பாதி விபத்துக்கு காரணமுன்னு [இங்க].
.
அப்டி என்னைய அவிங்களுக்கு பிரச்சன? அமெரிக்கா பசங்க sms அனுபிட்டே ஒட்டுவங்களாம். நாம பசங்களுக்கு தான் ஒரு நொடிக்கு ஒரு பைசா கொடுதிருக்காங்களே பேசிட்டே போகுது. அடேய் காதுல வயற மாட்டிட்டாவது பொய் தொலைய வேண்டியதுதான. அடுத்த தொல்லை இந்த பந்த பேர் வழி. ஒரு ஸ்கூட்டி பொய்ற கூடாது... இவிங்க வண்டி வளையும் படுக்கும் எந்திக்கும். வண்டி எரும மாடு (வண்டி மட்டுமா? :evil: ) மாதிரி இருந்துகிட்டு குரங்கு வேல செய்யும்.
.
இதுல mepz சிக்னல் ரொம்ப மோசம். சிக்னல் விழுந்தப்புறம் லைன கிராஸ் பண்றதுல மொத ஆளுங்க இந்த பொண்ணுங்க[licence, helmet கேக்காம விடுற மாமாவ சொல்லணும்]. சரி ஒன்னு ரெண்டு போறதால என்னனு கேக்குறிங்களா? அத follow பண்ணி பியர் ஸ்ட்ராங்கா லெஹரானு கேக்க ஒரு குரங்கு கூடவே வருதே அதுவும் பொய் சொருகும்.
.
அட இவிங்கள கூட மன்னிச்சுரலாம். இந்த 40 50 வயசு பார்ட்டி இருக்கே. போய்ட்டு இருக்கும்போதே ஜொள்ளு வழியுறேன்   அப்படினுட்டு வண்டிய கோணல ஓட்டி கடுப்பெத்துவாய்ங்க. அடுத்த கடுப்பு இந்த வண்டில ஜோடியா போறவைங்க. பேசிட்டு போறது; வேகமா பொய் சட்டுன்னு நிறுத்துறது இன்னும் எவ்வளவோ. சென்னைல மட்டும் தான் நீ ஒழுங்கா வண்டி ஓட்டுனாலும் திட்டுவைங்க ஹாரன் அடிச்சே கொன்றுவாய்ங்க.
.
சென்னை சாலை விதி...
>> சிகப்பில இருந்து பச்சை மாறும் 10 வினாடிகளுக்கு முன்னாள் நீ சிக்னல் கிராஸ் பண்ணலாம். இல்லை ன காது செவிடாகும் ஹாரனால.
.
>> உனக்கு போகனும்ன opposite lane ல வண்டிய விடலாம்.
.
>>ஹை பீம் போட்டு தான் headlight அ வச்சு வண்டி ஓட்டனும்
நீ ஹெல்மெட் போடாம போறது தப்பில்லா. ஆனா உன்ன நிறுத்தி வசூலிக்கிற மாமா பண்றது தப்பு.
.
இன்னும் எவ்வளவோ...கார் ஓட்டுறவங்க கத சொல்ல இது பத்தாது.
.
பாத்து போங்க [ரோட சொன்னேன்] பத்திரமா போங்க :)

க்ஆ-த்அ-ல் - 1

 
உயிர் மெய் இணைதலில
காதல் ஜனிக்கிறது...
உயிர் இனிக்கிறது
.
o.o.o
.
பொம்மைக்காய் அடம்பிடித்தழுது
மிட்டாயில் ஆறுதலாகிவிடும் பிள்ளையாய்
என் தேவை உன் காதலாகினும்
இப்போதைக்கு
நீ பேசுவதே போதுமாய் இருக்கிறது...
.
 o.o.o
.
மாலை பள்ளி மணியையே
பார்க்கும் குழந்தை ஏக்கமாய்தான்
நானும் கைபேசித் திரையை பார்க்கிறேன்...
.
 o.o.o 
.
பிள்ளையை அடித்துவிட்டு
அழுகையில், கட்டிக்கொள்ளும் அம்மாவாய்
காயப்படுத்திவிட்டு
கட்டிக்கொள்கிறது காதலும் என்னை
o.o.o 
.
சண்டைபோட்டுக்கொண்ட
அம்மா அப்பா நடுவில்
பிள்ளையின் அழுகையாய்
முகம் திருப்பிக்கொண்ட
நம் நடுவே காதல்
.
 o.o.o 
.
பொம்மைக்கு தெரியுமா? இருந்தாலும்
பிள்ளையின் பிரியம் அளப்பரியது
உனக்கும் சொல்லப்படாத
என் காதல் போல்...
.
o.o.o
.
காதலிப்பவர் பிள்ளையாகையில்
காதல் தாய்
காதல் பிள்ளையாகையில்
காதலிப்பவர் தாய்
.
அழவைக்கும்; அள்ளி முத்தமிடும்

Tuesday, January 29, 2013

கழியாத மார்கழி

 
படம் இங்கிருந்து
.
முடித்துவிட்டு கேட்கிறாள்
"கோலம் அழகா இருக்கா?"...
உன்னருகே...
அசிங்கமாய் தான் தெரிகிறது
சொல்ல முடியவில்லையே!
(அப்புறம் அடி யாரு வாங்குறது)
o.o.o
.
உன் சோம்பேறிதனத்திற்கு
அந்த கோலத்திற்கு ஏன்  
இரவெல்லாம்
பனியில் நிற்கும் தண்டனை?
o.o.o
.
மார்கழி முடிந்து
ஒரு வாரம் தானே ஆகிறது
உன்னை பார்க்காத சோகம்...
கன்னத்தில் தாடியுடன்
உன் வீட்டு முற்றம்...
புற்கள்!
o.o.o
.
குளித்துவிட்டு வீட்டுக்குள்
நடந்தாய்...
முற்றத்தைவிட வீட்டுக்குள்தான்
அழகான கோலம்...
உன் கால்தடமாய்...
o.o.o
.
கோலம் போட
தெரியாதென்கிறாய்...
வேண்டாமடி செல்லமே
கால் பதிய நடந்து வா போதும்
( இது பழசு; நான் எழுதி நான் ரசிச்சது)

மேலெழும்பிய பெருவிரல்

என்னை முட்டாளாக்கிய
ஒரே புத்தகம் அது...
என் அம்மாவை
பிடிக்கும் என்பதை காட்ட
ஒரு லைக் போதுமாய் இருந்தது...
நான் என்னமோ 
முத்தமும் பாசமும் தேவை 
என்று நினைத்தேன்..
 .
என் தேசத்திற்கு 
உயிர் துறந்த வீரனை கௌரவிக்க
ஒரு லைக் போதுமாய் இருந்தது...
நான் என்னமோ 
சிலையும் மாலையும்
என் மகனுக்கு அவன் பெயருமல்லாவா
என்றல்லவா நினைத்தேன்...
.
பிடித்ததை சொல்ல
பிடிக்காததை கொல்ல
எதிர்ப்பை காட்ட
ஆதரவை நீட்ட
இன்னும் எதற்கெல்லாம்
நான் லைக் இடப் போகிறானோ?
நல்ல வேலையாக
திருமணம் செய்ய
பெண் ஆணையோ ஆண் பெண்ணையோ
லைக் இட்டால் போதுமென்று
கலாச்சாரம் மாறும்வரை
.
அந்த புத்தகத்தின் பூச்சியாகவே
கிடந்துவிடுகிறேன்...
அவன் மூடி நசுக்கட்டும் என்னை...
.
நம்மை பிடித்த
ஒரு வாதம் அது...
உயிரோடு பிணமாக்கும்
வாதமது...

Monday, January 14, 2013

கடிக்கும் குரைக்கிற நாய்

என்னை நீங்கள்
இதற்கு முன்பு
பார்த்திருப்பீர்கள்...
எங்கேனும் நிச்சயம்
பார்த்திருப்பீர்கள்...

எங்காவது அடிபட்டு
கிடந்த உங்களை
நீதியின் அலைச்சலுக்கு
பயந்து, துடிக்க விட்டு
போய் இருந்திருப்பேன்...

உங்களை அதர்மம்
சூறையாடிய போது
என் உயிர் என்னும்
சுயநலத்தோடு கண்டு கொள்ளாமல்
நகர்ந்திருப்பேன்...

ஏன்?
உங்களை பார்த்து குரைத்த
உங்களை துன்புறுத்திய
உங்கள் காலை அசிங்கம் செய்த
அந்த நாய் நானாக கூட
இருந்திருக்கலாம்...


எங்கேனும் நிச்சயம்
என்னை பார்த்திருப்பீர்கள்

துடிக்க விட்டு போன
நான் நிச்சயம்
உங்கள் இறுதி ஊர்வலத்தில்
கண்ணீர் சிந்தி இருந்திருப்பேன்...
ஒரு மெழுகுவர்த்தி ஏற்றிருப்பேன்...
உங்களுக்கு ஏற்பட்ட அநீதிக்கு
மூச்சு முட்ட கத்தி இருந்திருப்பேன்...

துடிக்க உங்களை சாக விட்டுவிட்டு
நீதியை காப்பதாய் குறைப்பேன்
எங்கேனும் நிச்சயம்
என்னை பார்த்திருப்பீர்கள்



Thursday, January 3, 2013

அரிச்சந்திர பொய்கள்

உண்மைகளை
இப்போ யாருக்குமே
பிடிப்பதில்லை

காதலில்லை என்ற
உண்மையின் முகம்
அமிலத்தில் பொசுங்கி போகிறது...

உரிமைகள் முழங்கும்
முகப்புத்தக உண்மைகள்
சிறை அடைபடுகிறது...

காதலோ, பூக்களின்
ஹைஹீல்சில் நசுங்குகிறது...

உன் வலியோ
நிர்வாணமாக்கப்பட்டு
சோதனைக்குள்ளாகிறது

பசியோ கொலை செய்யப்படுகிறது
திறமையோ மலடாக்கப்படுகிறது
உரிமையோ ஊமையாக்கப்படுகிறது

உண்மைகளை
இப்போ யாருக்குமே
பிடிப்பதில்லை

புன்னகைகளின் பின்னால்
கூர் பற்கள் ருசிக்க துடிக்கிறது...
முத்தங்களின் பின்னால்
விசப்பற்கள் சீண்டிப் பார்க்கிறது
பூங்கொத்துகளின் பின்னால்
துப்பாக்கி ஒன்று குறி பார்த்து கிடக்கிறது

உண்மைகளை
இப்போ யாருக்குமே
பிடிப்பதில்லை

Wednesday, January 2, 2013

தெளியாத போதை

எப்பேர்பட்ட துயரமாகினும்
மறக்க
ஒரே ஒரு கிரிக்கெட் நூறோ
இன்னுமொரு புத்தாண்டு கொண்டாட்டமோ
தலைவனின் அரசியல் நுழைவோ
போதுமாய் இருக்கிறது...

எப்பேர்பட்ட துயரமாகினும்
மறக்க மெழுகுவர்த்தியும் ஒருவார பேச்சும்
போதுமாய் இருக்கிறது...
எப்பேர்பட்ட துரோகமாகினும்
மறக்க
இன்னுமோர்  பெரிய துரோகம்
வோட்டுக்கு அதிகமாய் நூறு
ஐந்தாறு இலவசங்கள்
போதுமாய் இருக்கிறது...

எப்பேர்பட்ட துரோகமாகினும்
மறக்க இன்னுமோர் ஐந்தாண்டு
போதுமாய் இருக்கிறது...

எப்பேர்பட்ட வலியாகினும்
மறக்க
இசையும் தனிமையும்
பேனாவும் காகிதமும்
புத்தகமும் நீயும்
போதுமாய் இருக்கிறது...

எப்பேர்பட்ட வலியாகினும்
மறக்க கோப்பை போதையும், பனி துண்டும்
போதுமாய் இருக்கிறது...

நீ என்கிற கொடும் போதையிலிருந்து
என்னை தெளிவிப்பது மட்டும்
இன்னும் எதாலும் எவராலும்
முடியவே இல்லை...

குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்