Thursday, August 15, 2013

அடிமையின் சுதந்திரம்


அச்சமெதற்கு அச்சமெதற்கு அச்சமெனக்கெதற்கு

விதயெல்லாம் மலடா போச்சு
எங்க செடிக்கு லைசன்சு எவன் பேரிலோ ஆச்சு
குலதொழிலையும் கை மறந்து போச்சு
விடியையில வேல இருக்குமா? துறமாரு இருக்காக

அச்சமெதற்கு அச்சமெதற்கு அச்சமெனக்கெதற்கு

டாலர் சரிஞ்சா நெஞ்ச புடிச்சோம்
பணத்துக்காக நம்ம நாமே வித்தோம்…
அப்பா ரெண்டு ரூபாய்க்கு வித்த நெல்ல
மகன் வால்மார்ட்டில் நாப்பது ரூபா அரிசியா வாங்குறான்…
நாப்பது ரூபா ஆனா என்ன நாப்பதாயிரம் சம்பள இருக்கையில

அச்சமெதற்கு அச்சமெதற்கு அச்சமெனக்கெதற்கு

ரெண்டு மாநிலம் தண்ணி கேட்டு அடிச்சுகிறான்
ஒரே மாநிலம் ரெண்டா பிரிஞ்சுகிறான்
சாதி சாமின்னு சனங்களத்தான் கொல்லுறான்
பத்திக்கிட்டு எரியற காட்டில் குளிர் வந்து காயுறான்…
என் வீட்டுக்கு எதுவுமில்ல. எனக்கெதுக்கு வீண் கவல

அச்சமெதற்கு அச்சமெதற்கு அச்சமெனக்கெதற்கு

தொட்டவன் வாழ, சீதைகள் தீக்குளிக்காமல் எறிகிறார்கள்
காதல் உறங்கிய தண்டவாளத்தில் சாதி ரயிலோடுது
உழச்சவனுக்கு உணவு இல்ல, படிச்சவனுக்கு வேல இல்ல
எதிர்கட்சிக்கு பங்கு தரத ஆளும்கட்சி பிடிபதில்ல
அடுத்த தேர்தலில் தலையெழுத்து மாறும்

அச்சமெதற்கு அச்சமெதற்கு அச்சமெனக்கெதற்கு

காந்தி காமராஜர் பேரை சொல்லி தேர்தலில் ஜெய்க்குது…
காந்தி பட நோட்டுக்காக மட்டும் ஆட்சி நடக்குது…
வெறும் மிட்டாயால 67 வருஷம் ஏமாற்றிப் போச்சு
பெத்தெடுக்க தாய் இன்னும் லஞ்சம் கேட்கல…
மத்தபடி இன்னும் நீயும் நானும் அடிமைகள் தான்

Friday, July 26, 2013

அநாதை பிணம்


இனி யாருக்கும்
வெறுப்பதற்கென்று
என்னிடம் எதுவும் இருக்காது.
இருந்தால் இனியும்
மறைக்க தேவை இல்லை.

என்னிடம் எடுத்ததை
கொடுக்கும் அவசியமில்லை
இன்னும் வேண்டுமென்பது
எடுத்துக்கொள்ளலாம்.
இனி அனுமதியும் தேவையில்லை.

அழுதுகொண்டிருந்தவர்
கண்ணீரில் எல்லாம் கலந்திருந்தது
நான் கொடுக்க மறந்த கடன்,
நான் பகிராத வங்கி கடவுச்சொல்,
நான் எழுதாத உயில்
என்று எதோ ஒரு கவலை.

ஒரு ரோஜா மாலை
கொஞ்சம் கண்ணீர்
நிறைய பொய் ஒப்பாரி
பகட்டாய் கருமாதி சீரென்று
இவ்வளவு தான்
அவரவர் பங்கிற்கு அன்பு காட்டப்பட்டது.

கட்டாயத்தில் வந்து
கடமைக்கேன்று
இருதுளி கண்ணீர் சிந்திவிட்டு
கடைசி பேருந்தில் ஓடிய அவசரங்கள்

கொண்டு  வந்து எரிகாட்டில்
தனியாய் விட்டுப் போனார்கள்.
திரும்ப எழுந்து வந்திடுவேனோ
என்று பயம் போல்…
முழுதாய் எரிந்து முடியும் வரை
கவனமாய் பார்த்தும் கொண்டார்கள்.

எஞ்சி இருந்த சொத்து
தங்க முட்கிரீடமும், மர சிலுவை…
முள்ளாயிருந்தாலும்
யாருக்கென்பதில் சண்டை. தங்கமல்லவா?
அந்த வீட்டு முற்றத்தில்
சிலுவையும் நான் இறந்த துக்கமும்
கேட்பாரற்று கிடந்தோம்.

மூன்று நாட்களில்
ரோஜா குப்பைகள் காணாமல் போனது,
கூடிய அன்பு கூட்டங்களும்.
பதினாறாவது நாள்
வீட்டில் பத்தி வாடை மாறிப்போனது,
நான் இல்லாத இழப்பும்.
முப்பது நாள் கழித்து
அணையா விளக்கு மீண்டும் தூசிக்கு,
என் நினைவுகளோடு.

மொத்தம் வெந்து முடிந்த பின்னும்
எரி  மேடையில்
சாம்பல் தகித்துக் கிடப்பது போல்
அந்த இரு கண்ணில்
மட்டும் எனக்கான கண்ணீர்
வற்றாமல் இருந்தது…

என் இந்த மரணம்…
வாழ்வதைக்காட்டிலும்
அவ்வளவு எளிதானது.
சாவதைக்காட்டிலும்
கொஞ்சம் கடினாமனது

எல்லாம் இருந்தும்
அநாதை பிணம் நான்...

Monday, July 22, 2013

ஈரமில்லாத மழை – 4


நிற்க போவதை சொல்லாமல்
மழை  நனைத்துகொண்டிருந்தது.
நிற்க போவது தெரியாமல்
மழையில் நனைந்துகொண்டிருந்தனர்.

o

மழை விட்டுபோனதை
நம்ப முடியாதவராய் இருக்கிறார்கள்
கிளை குலுக்கி, இலை நீரில் நனைந்து
தன்னை தானே ஏமாற்றிக்கொண்டு.

o

நனையும் ஆசையில் வந்தவனுக்கு
மழை நின்று விட்டது,
மழை வராமல் பொய்த்து
என்ற இரண்டும் வலி தான்
இரண்டுக்கும் நிறைய வித்தியாசம்.
இருந்தாலும் இரண்டும் வலி தான்.

o

நொடிக்கொருமுறை
குடைக்குள்ளிருந்து கை நீட்டி பார்க்கிறார்கள்
மழை நின்றுவிட்டதா என்று…
நின்றால் என்ன? நிற்காமல் பெய்தால் என்ன?
என்ன பெரிய வித்தியாசம் அவர்களுக்கு?

o

பூக்கள் சிரிக்கிறதாம்.
மழை அழுகிறதாம்.
இவர்களுக்கு யார் சொன்னது?
இதழ் விரிப்பது பூக்களின் கண்ணீராய் இருக்கலாம்.
தூறல் தெறிப்பது மழையின் சிரிப்பாய் இருக்கலாம்.

ஈரமில்லாத மழை – 1 | 23

Tuesday, July 9, 2013

என்னை தொலைத்த நான்



"என்ன ஆனதென்று"
விசாரிக்கும் அக்கறைகளை
வழக்கம் போல்
"ஒன்றும் இல்லை, சும்மா "
என்று ஏமாற்றி விடுகிறேன்...

அந்த ஒன்றுமில்லைக்கு பின்னால்
உன் மடியினுள் புதைந்து அழுவதற்கான
அழுகையை சுருட்டி வைத்திருந்தேன்.
யாருமே மீண்டுமொருமுறை கேட்டகவில்லை.

என்னை நிரகரித்திருந்தார்கள்.
என்னை மறந்திருந்தார்கள்.
சுமையென்று ஒதுக்கியிருந்தார்கள்.
அதற்கான காரணமும் வைத்திருந்தார்கள்.
எப்படி தேவைபடுவதற்கு, அப்போ
காரணம் இருந்ததோ அதே போல்
இப்போ தேவைபடாததற்கும்.

கண்களைப்போல் காதுகளையும்
முன்னாடி வைத்திருந்திருக்கலாம்...
இப்படி, என் முதுகிடம் பேசுபவர்களை
கேட்க நேர்ந்திருக்காது. தேவைப்பட்டிருக்காது.

என் smileyகள் எனக்காய்
பொய் சொல்ல கற்றுக்கொண்டது.
என் உதடுகள் பல் காட்டி
அழுவதற்குக் கற்றுக்கொண்டது

என் இரவுகள்
என் கண்ணீரில் சாயம் போய்தான்
பகலாய் வெளுக்கிறது...
விடிந்ததா? தெரியவில்லை.

தண்ணீர் பஞ்சத்தில்
என் தேவதைகளின் இதயம்
ஈரமின்றி வறண்டு போனது...
என் கண்ணீர் கேட்கிறார்கள்
ஈரப்படுத்திக்கொள்ள

எவ்வளவு கொடுத்தும் போதவில்லை.
ஈரமில்லா தேவதை சபிக்கிறாள்.

எல்லோரும் காயபடுத்த துடிக்கும்
என் இருதயத்தை கல்லாக்கி கொண்டேன்...
காயப்பட்டு போனார்கள்.
கண்ணீர் வடித்தேன், அவர்களுக்கு தெரியாது.

காய்ச்சலின் கசப்பாய்
என் நாட்களை விழுங்கிக்கொள்கிறேன்.
முடியாவிடினும் தனியொரு ஆளாய்
தின்று தீர்க்கிறேன்.
எப்போது முடியும் இது.

யாருக்கும் தெரியாமல்
யாருக்கும் சுமையாய் இல்லாமல்
என்னை தொலைத்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்
நான் தொலைந்த பிறகு
சிரித்தவர்கள் இருக்கலாம். அழுதவர்கள் இருக்க கூடாது.
என் இருப்பினில் வருந்தியவர்கள்
என் இழப்பினில் பொய் கண்ணீர் எதற்கு
கொண்டாடிவிட்டு போகட்டும்...

Friday, July 5, 2013

அடடே ஆச்சரியக் குறி - 6

அவர்களை பார்பதாய்
என்னை முறைத்துபார்க்கும்
அந்த பெண்களிடம் எப்படி சொல்வேன்…
எல்லோரும் நீயாய் தெரிவதை…

காலை இரண்டு மணிதான்
என்னும் கடிகாரத்திடம்
வேகமாய் விடிய சொல்லி எப்படி சொல்வேன்…
உனக்கென எழுதி வைத்த என் குறுஞ்செய்தி
என் விரலைத் தின்னுதடி.

காலை பத்து மணிக்கெல்லாம்
கத்தி எழுப்பிவிடும் உன் மாமியாரிடம்
எப்படி சொல்வேன்…
நம் மகனின் progress card ல் கையெழுத்திடும் முன்
கனவு கலைந்துவிடுவதை…

கவிதையென்று நினைத்து
இதை படித்து கொண்டிருக்கும்
இவர்களிடம் எப்படி சொல்வேன்
அவர்கள் ஏமாந்து போகப்போவதை

எல்லாமே இருந்தும், எதையுமே
சொல்லத்தெரியாது சொல்லமுடியாது
எனக்கும். என்  கவிதைக்கும்



அடடே ஆச்சரியக்குறி – 1 | 2 | 3 | 4 | 5


Tuesday, July 2, 2013

இந்த பூக்கள் விற்பனைக்கு

நூறு சவரன் நகையையும்
ரொக்க பணத்தையும்
கட்டிக்கொள்ள போகிறவனுக்கு

60 கிலோ அன்பை
வரதட்சனையாய் கொடுத்தார்கள்…

ஒன்று இரும்பு பெட்டிக்குள்
இன்னொன்று அஞ்சறை பெட்டிக்குள் சிறை

o

கண்ணீரோடு பெண் வந்தாலே
கணவன் தொல்லையாய் தான் இருக்கும் என்று
ஒரு கட்டெடுத்து கொடுத்து
“போக போக சரியாகிவிடும்”
என்று சொல்லி அனுப்பும்
பிறந்த வீட்டாரின் பணத்திற்கு

அவள் கண்ணீர் கதை கேட்க நேரம் இல்லை

o

ஊரை மெச்ச வைத்தீர்களோ இல்லையோ…
ஊரார் நாக்கில் எச்சில் சொட்ட வைத்தீர்…

இப்போது நீங்கள் கிளப்பிய
பசியின் ருசிக்கு
இவர்கள் இரையாகி போகிறார்கள்

o

அவன் கேட்டு கொடுப்பவர்களைவிட
அவர்கள் கேட்பார்களே என கொடுக்கிற
இவர்களுக்கு எப்போது புரியும்?

கசாப்புக்கடைகாரன்
ஒரு துண்டு போட்டதும்
போதும் என்ற நாயே இல்லை என்று…

Tuesday, June 25, 2013

யாருமற்றவன்

எப்படி இங்கு வந்தேன் ?
தெரியாது …
யார் கூட்டி வந்தது ?
தெரியாது …
அழைத்து வந்த தேவை தீர்ந்திருக்கலாம்
இல்லை
அழைத்து வந்ததே வீணென்று நினைத்திருக்கலாம்.
விட்டுவிட்டுப் போய் விட்டனர், என்னை…

ஆம்
தேவை தீர்ந்ததும்
தூக்கி எறிவதொன்றும்
இவர்களுக்கு புதிதில்லையே … எனக்கும் பயமில்லையே …

எனக்கென்று நேரம் இல்லை,
என்னை அழைத்துவந்தது நினைவில் இல்லை,
என்னை சேர்க்கும் இடம் தெரியவில்லை,
தவற விட்டுவிடப்போகும் பேருந்து,
அவசர வேலை…
என்று அவர்களுக்கு சொல்லி கொள்ள
ஆயிரம் காரணங்கள் இருந்தது.

யாருமே செய்வதில்லை நான் மட்டும் ஏன்?
எப்படியும் அவர்கள் செய்வார்களே. அப்புறம் ஏன் நான்?
என்று ஒவ்வொருவர் பக்கமும்
ஒரு நியாயம் இருந்தது …

எனக்கென்று
கவலைபடக் கூட ஆள் இல்லாமல்
தெருவில் நிற்கிறேன்…

                                   இப்படிக்கு தெரு குப்பை…

Monday, June 24, 2013

என்னை வாசித்த கவிதை


ஒரு போட்டிக்கென
எழுதி வைத்த கவிதையை
எடுத்து படித்துவிட்டு
நன்றாக இருப்பதாய் சொன்னாள்…

போட்டி துவங்கும் முன்
வெற்றி பெற்றிருந்தது என் கவிதை
o
பிடித்திருப்பதாய்
அவள் சொன்ன பிறகு
என் சோக கவிதை கூட
அன்று முழுக்க சிரித்திருக்கிறது

என்னை போலவே

o
தனக்கு எழுத வருவதில்லை
என சொல்லி உதடு சுளித்தாள்…

என்னை எழுத வைத்துகொண்டிருப்பது
அவளென்று தெரியாமல்

o
அவள்களைவிடவோர்
ஆகச்சிறந்த கவிதையை எழுதி
அவளுக்கு கொடுக்க முயற்சித்துகொண்டிருக்கும்
அவன்களை தான்
இந்த உலகம் கவிஞன் என்கிறது..

என்னையும்…

தோற்று போன எல்லா கவிஞர்களும்
காதலை எழுதுகிறார்கள்
வெற்றி பெற்றுவிடுகிறார்கள்

நானும் கூட

o
என் கவிதைகள்
எல்லாமுமே கற்பனைகளே.
எல்லாவற்றிலும் பொய் கலந்திருந்தது.

“நான் உன்னை காதலிக்கிறேன்”
என்று சொன்னதைத் தவிர…

Sunday, June 23, 2013

நீ எனப்படும் நான்



கடவுள் சொல்ல கேளாமல்
சாத்தான் சொல் மீறாமல்

ஏவாள் தர
ஆப்பிள் தின்ற ஆதாமிற்கு
கடவுள் தந்த காதல் சாபமாம்.

அந்த கடவுளிடம் சொல்லுங்கள்
உண்மையில் அது வரமென்று.

காதலே!
நீ எனக்கான வரம்.

o

ஒரு பாதி என்பது
ஈசனின் இழப்பல்ல.
அவ(ளென்னும்)ளின் மறுபாதி
அவனை நிறை செய்த லாபம்

நீ என்னை
நிறை செய்த சரிபாதி

o

உன்னை காதலிக்காத
அவளை எப்படி காதலிக்கிறாய்
என்கிறார்கள்…

யாருக்கும் என்னை போல்
காதலிக்கத் தெரியவில்லை…
வேறு என்ன சொல்ல?

நான் உன்னை காதலிக்கிறேன்
இது இறவாத காலம்…

o

என் மனைவி அதிர்ஷ்டசாலி என்பதை
நீ சொன்ன பிறகு தான் தெரிந்தது
நான் துரதிர்ஷ்டசாலி என்பது…

நான் எனக்கான சாபம்…

Thursday, June 13, 2013

நின்ற(றாலும்) மழையில் நனைபவன்

கொட்டும் மழை.
எல்லோரும் ஒதுங்கி நிற்க
நான் மட்டும் இறங்கி நடந்தேன்…

எல்லோரும் என்னை
கிறுக்கனாய் பார்த்தார்கள்

அடுத்த நாள்
அந்த மழை இல்லை. வெயில்.

ஒதுங்க யாருக்கும் நேரம் இல்லை
ஓடும் கால்களுக்கு
பொசுக்கும் சூடு பொருட்டாய் தெரியவில்லையோ?

ஓரத்தில் ஒதுங்கி நின்ற எனக்கு
இன்று எல்லோரும் கிறுக்கன்களாய் தெரிந்தார்கள்

o.o.o.

அந்த மழையில்
இதற்கு முன் வந்த
அந்த மழையை போலவே

அவர்களுக்கு
சூடாய் தேநீர் தேவை
காதோரம் இன்னிசை தேவை
கதகதப்பாய் காதல் முத்தம் தேவை
உயிர் வரை சிலிர்ப்பூட்டும் குளிர் தேவை
இதை எல்லாம் தருகிற மழை தேவை

இப்படி தேவைமட்டும் படுகிற
மனிதர்களை(?) பார்த்து
மழைக்கு சலித்து விட்டது…

எல்லாம் தர தயாராய் இருக்கும்
அவர்களைத் தேடி தான்
மழையும் எப்பொழுதாவது வருகிறது

o.o.o.

கப்பல்கள் கவிழ்ந்த பிறகும்,
சிரிக்க நீ குழந்தையாய்
இருந்திருக்க வேண்டும்

                                                                        - #R#

குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்