Tuesday, October 15, 2013

திவ்யா குட்டியின் கொலு


அம்மா வேகமா
சுண்டல் மிட்டாய்லாம் கொடுத்து
பூஜையை முடிம்மா
சாமி எல்லாருடைய  வீட்டுக்கும்
போகணும் இல்லையா  என்கிறாள்…

அம்மாவும் கொடுத்து
அனுப்புகிறாள்  திவ்யாவை

o0o

என்ம்மா சாமி நம்ம வீட்டுக்கு
வர மாட்டேன்னு சொல்லிருச்சா
சாமி பொம்மை மட்டும் தான்
வச்சு இருக்கீங்க என்கிறாள் …

பதில் சொல்லத் தெரியாத அம்மா
வாயாடி வாய் ரொம்ப பேசாதே
என்று தொடையில் கிள்ளி விடுகிறாள்…

அன்று கொலுவிற்கு சாமி வரவே இல்லை நிஜமாய்

o0o

கொலு முடிந்த மறுநாள்
பொம்மைகளையெல்லாம் துடைத்து
பெட்டியில் வைத்துவிட்ட பிறகு
காலி படிகளில் ஏறி விளையாடிக்கொண்டிருந்தாள்

ஒற்றை பொம்மை வைத்த கொலு அது.

o0o

தாத்தா நாற்காலி, ஓட்டை வாளி,
அப்பா தலைகாணி என அடுக்கி
எட்டாத உயரத்தில்
ஒளித்து வைக்கப்பட்டிருக்கும்
பொம்மை பையை எடுக்க முயற்சிக்கிறாள்
திவ்யா குட்டி…

பிஞ்சுக் கை கொள்ளாமல்
பொம்மை பை சிதறி விழுகிறது…

திவ்யா குட்டிகள் இருக்கிற வீடுகளில்
தினம் தோறும் நவராத்திரி தான்…
அவள் வீட்டு பிளாஸ்டிக் பொம்மைகளுக்கு கூட
சாமியின் சக்தி உண்டு…

    அம்மா மாலை வீடு வந்த பிறகு
    துர்கையாக மாறலாம்
    நவராத்திரி துர்கா பூஜையாக மாறலாம்


o0o

குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்