Monday, April 13, 2015

திவ்யா குட்டியும் ரோஸ் மரமும்

சீதாப்பழத்தை
விதையோடு சாப்பிட்டவளிடம்
வயிற்றுக்குள் மரம் முளைக்குமேன்று
அம்மா பயமுறுத்தும் போதெல்லாம்,
ரோஸ் மரம் வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறாள்
ரோஸ் தொட்டிக்குக் கூட இடமில்லாத
3 வது மாடியில் வாழும் திவ்யா குட்டி.

o


மல்லி சட்டினியை பார்த்தவள்,
“எனக்கும் மருதாணி வச்சு விடுமா”
என்று ஒரே அடம்.
அம்மாவின் கையில் ஒட்டியிருந்த  மல்லி சட்டினி
திவ்யா குட்டியின் முதுகில் சிவந்திருந்தது.

அன்றிலிருந்து
மல்லி சட்னியும் சுவைக்கவில்லை,
மருதாணியும் சிவக்கவில்லை.

- காதலிக்கப்படாதவன்

ஈரமில்லாத மழை

எல்லோரும் வெயிலில் நனைந்துகொண்டிருக்க,
நான் மட்டும்
மழையில் வெந்து கொண்டிருந்தேன்.

சூடு தாங்கா பாதம் தட்டும் கதவுகள்
முகத்தில் அறைந்து சாத்திக்கொள்கின்றன.
அறைந்த கன்னத்திற்கு காட்டிய மறுகன்னத்தில்
வழிந்தோடிய மழை நீரின் சுவடில்
பூக்கள் அரும்புகிறது.

வெயிலின் குளிர் தாளாத பூவிற்காய்
மீண்டும் பெய்யாயோ மழையே?

- காதலிக்கப்படாதவன் 

பூனைக்கு எதிராய் பொய் சாட்சி


பாத்திரம் விழும் சத்தம் கேட்டபோது,
போய் பார்க்கவில்லை நீங்கள்.

மியாவ் சத்தமும்,
விழுந்து கிடந்த சொம்பும்,
காணமல் போன பாலும் மட்டும்
எப்படி சாட்சியாகும்?

போய் பார்க்கவில்லை நீங்கள்.

அதற்குள்,
அந்தப் பூனையை சந்தேகப்படாதீர்கள்.

o

எப்படி குடித்தால்,
காணாமல் போன பாலிற்கு
பூனையை சந்தேகப்படுவீர்கள் என்று
உங்கள் வீட்டு திருடனுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது.

பாலில் மிதக்கும் கைரேகை
பூனையுடையதென்று சாதிக்கிறீர்கள்.
ஆனால் பூனைக்கு கைரேகை உண்டா?
தெரியாது உங்களுக்கு.

பூனையை திருடன் என்று சொல்லும் கதைகள்
உங்களுக்கு பிடித்திருக்கிறது.

- காதலிக்கப்படாதவன்

குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்