Monday, December 22, 2014

சிறகொடிந்த பறக்கும் முத்தம்


தொடர்ப்பெல்லைக்கு அப்பால்
உயிரறுந்து கிடைக்கும் கைப்பேசிக்குள்
சிரிப்பிழந்து கிடைக்கிறது மஞ்சள்முகங்கள்.

சாத்திய சன்னல் கண்ணாடியில்
மோதி அடிக்கும் பட்டாம்பூச்சியாய்
நெஞ்சுக்குழிக்குள் வார்த்தை.

விண்மீன் புன்னகை சிந்திய மின்னல்,
குண்டூசி நுனியால் பாடும்  தாலாட்டு.
கிலோகணக்கில் கணக்கும் கிலோமீட்டர் தூரம்.

தூதனுப்பிய நிலா எங்கே?
கொடுத்தனுப்பிய ரோஜா பிடித்திருக்குமா?

சாப்பிட்டிருப்பாளா? பதில்கள் தெரியும் தான்.
இருந்தாலும் கேட்க துடிக்கிறேன்.

வெறும்கையில் முழங்கையிட்டு
நண்டும் நரியும் வருவதாய் சொல்லி
சின்னபிள்ளை ஊட்டும் பருப்பு சாதமாய்
பதில்வராத வானத்தில் அவள் முகம் பார்த்துக்கிடக்கையில்,
சிறகொடிந்த பறக்கும் முத்தமொன்று வந்து விழுகிறது மடியில்.

விழுந்த முத்தத்தை மீண்டும் கூட்டில் வைக்கவா?
இல்லை நானே வைத்து வளர்க்கவா? 

- காதலிக்கப்படாதவன் 

குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்