Monday, June 2, 2014

சாக்லேட் க்ஆத்அல்

|| க்ஆ-த்அ-ல் – 1 | 2 | 3 | 4 | 5 ||

தெரியும்,
உன்னை கேட்டு அடம்பிடிக்க
நான் ஒன்றும் குழந்தை இல்லை.
அடம்பிடித்து அடைந்துவிட
நீ ஒன்றும் மிட்டாய் இல்லை.

இருந்தும் ஏனோ,
உன்னை கடக்கும் பொழுதெல்லாம்
மிட்டாய் கடை பார்த்த குழந்தையாய்
இருதயம் என்னிடம் அடம்பிடிக்கிறது.

oOo

நீயும் சரி, மிட்டாயும் சரி…

கிடைத்திருந்தால்
கொஞ்ச நேரம் இனித்து
வாயில் கரைந்து போயி ருக்கும்.

கிடைக்காததால் பார்,
நினைக்கிற பொழுதெல்லாம்
உயிருக்குள் இனிக்கிறது.

அந்த இனிப்பின் பெயர் வலியென்றிருக்கலாம்.
இனிக்கும் வலி.

oOo

என் சாக்லேட்டில்
பாதியை உனக்கு கொடுத்தால்,
உன்னை பிடிக்கும் என்று அர்த்தம்.

உன் சாக்லேட்டையும் பிடுங்கி
நானே சாப்பிட்டுவிட்டேன் என்றால்,
உன்னை ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்று அர்த்தம்.

P.s. – நம்ம எல்லார்கிட்டயும் பிடுங்கி தான சாப்பிட்டு இருக்கோம்!! யாருக்கும் கொடுத்தததா நியாபகம் இல்லையே!! :P

Sunday, June 1, 2014

பச்சோந்தி நிமிடங்கள்


கருகலைத்த மருத்துவச்சியின் நக இடுக்கில்
மிச்சமிருக்கும் உயிரை,
முதுகிலிறங்கிய கத்தியிலிருக்கும்
கைரேகையின் ஜாடையை,
பிரசவ களைப்பில் தாயுறங்குகையில்
குட்டி கடத்தும் கோணிப்பையின் முனங்கலை,
நடக்க இடமில்லாது இருந்தும் அந்த தெருவில்
தன்னந் தனியாய் நடக்கும் இருதயத்தை,
அடுத்த வேலைக்கு காசில்லாத கவலையின்றி
இப்போது சாப்பிடுபவனின் பசியை
சூழ்நிலையால் கொலை செய்ததாய்
அழுதுகொண்டிருந்தவனின் கையிலிருக்கும் கத்தியை

நின்று ஒருமுறை திரும்பி பார்த்துவிட்டு
மெல்ல தன் நிறம் மாற்றிக்கொண்டு
பார்க்காதது போல் நடந்து போகிறது அந்த நிமிடம்.
அப்போதைக்கு தப்பித்துவிடுகிற பச்சோந்தியாய்.

அவர்களும் கூட.


குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்