Saturday, September 6, 2014

இன்னும் கொஞ்சம் மழை வேண்டும்


நடைபழகும் மழை பிள்ளை,
யாரோ மறந்த காப்பிக் குவளை,
நீ தந்த பாதி மிட்டாய்,
எழுந்துக்கொள்ளப் பிடிக்காமல் நீயும் நானும்.
சிலரை மழையால் அடித்துக்கொண்டு போகமுடிவதில்லை.

இடது தோள் நனைய நீ,
வலது தோள் நனைந்து நான்,
தீராத மழை, தீராத நம் பேச்சு,
நகராத கடிகாரம், ஒற்றைக் குடை.
சிலருக்கு மழையில் குடை தேவைப்படுவதில்லை.

இன்னும் வரவில்லையென நீயும்,
வந்துவிடக்கூடாதென நானும்
வேண்டியும் வந்துவிடுகிற உன் பேருந்து.
குடையெதுமின்றி நனையாமல் ஓடி ஏறிக்கொண்ட நீ,
குடை இருந்தும் நனைந்துகொண்டு வழியனுப்பும் நான்.
சிலர் நனைவதை குடைகளால் தடுக்க முடிவதில்லை.

நீ கிளம்பிய இருபத்தியோன்பதாவது நொடியின் பாதியில்
இரண்டு ஜென்ம பிரிவை சுமக்கிறேன்.
சிலருக்கு மழை எவ்வளவு வந்தாலும் போதுவதில்லை

சில மேகங்கள் மட்டும்
நிற்காமல் தூறும்.
நீ அந்த வகை மேகம்.
எனக்கு இன்னும் கொஞ்சம் மழை வேண்டும்.

குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்