Thursday, January 30, 2014

காலி பர்சு

டிக்கெட்டின் விலை கேட்டபிறகு
அந்த இடம் நடக்கும் தூரம்
என்று நடக்கப்பழகிக்கொள்கிறேன்.

முதல் தேதி வரும் சம்பளத்தை விட
கழட்டிப் போட்ட அழுக்கு சட்டையில் கிடைக்கும்
ஐந்து ரூபாய்-க்கு துள்ளி குதிக்கிறேன்.

POS மெசினுக்குள் போன கார்டு
எளிதாய் வெளியில் வந்துவிட்டது.
காசு இருக்கிறதென ஏற்றுக்கொள்ளும்வரை
நான்  உள்ளேயே சிக்கிக் கொள்கிறேன்.

சாப்பிட போன இடத்தில்
அவன், “நீ ராம் தானா? என்ன தெரியுதா?” என்கிறான்.
அவன் பில்லும் எனக்கு வந்திடுமென்று பயந்து
தெரியாதென்று தப்பிக்கிறேன்.

உணவகத்தில் மாவு ஆட்டுவதற்கு
கிரைண்டர் இருப்பதாய் சொல்லும்
அந்த பலகைக்கு பயப்படுகிறேன்

என் கவிதைக்கு காத்திருக்கும்
தோழியை போல்
காத்துக்கொண்டிருக்கிறேன் அந்த தேதிக்கு.
குழந்தை உறங்கிய பின்னிரவில்
வீட்டுக்கு வந்துவிட்டு, விடியும் முன்பே
கிளம்பிவிடும் அப்பாவாய் ஏமாற்றி தொலைகிறது.

வெறும் கையும் பையும்
இவ்வளவு கணக்கும் என்ற
இன்று தான் தெரிந்து கொண்டேன்.
நீ காலி செய்து போன இருதயம் போலவே :( - காதலிக்கப்படாதவன் 30/31-01-2014 

Monday, January 20, 2014

மண்(ட)day


வீட்டுப்பாடம், டீச்சரின் அடி எல்லாம்
திடீரென்று நினைவில் வர
போர்வைக்குள் இருந்துகொண்டு
"அம்மா தொட்டு பாரு.
உடம்பு சுடுதுல. காய்ச்சல் அடிக்குது.
இன்னைக்கு மட்டும் ஸ்கூல்க்கு வேண்டாம் மா"

என்று சொல்லுகிற குழந்தையாய்
எல்லோரையும் மாற்றிவிடுகிறது
இந்த திங்கள் கிழமை

o

இன்னொரு முறை
தாத்தாவை சாகடிக்க மனமில்லாமல்
நண்பனுக்கு திருமணம் செய்து வைக்க
தூண்டும் திங்கள் கிழமை.

அடுத்த வாரமே இந்த தோழனுக்கு
குழந்தை பிறந்தாலும் பிறக்கலாம்.

o
சம்பள நாளுக்கு காத்திருப்பது போல்

நான் மட்டும் காத்துக்கொண்டிருக்கிறேன்.
இந்த திங்கள்கிழமைக்கு.
உனக்கே தெரியும் எதற்கென்று.

ஆனால்,
வெறும் திங்கள்கிழமை மட்டும் தான்
வந்து வந்து போகிறது.

o

வெறுக்கும் அவளை
விரும்பும் என்னை போல

விரட்டினாலும், விரட்டி வந்து
அன்பை சொல்லித்தரும்
இந்த திங்கள்கிழமை

இது தான் உலகின் முதல்
ஒரு தலைக் காதல்


Tuesday, January 7, 2014

திவ்யா குட்டியின் பொம்மை


பொம்மை வாங்கவென
கடைக்கு இழுத்து சென்றாள் என்னை.

கடையை சுற்றி வந்த திவ்யா குட்டி,
பிடித்த பொம்மையென
இரண்டை எடுத்து வைத்திருந்தாள்.
என் கூடையிலோ பாதிக் கடை இருந்தது.

அவளுக்கு பொம்மை வாங்க போய்
நான் குழந்தையாய் மாறி இருந்தேன்.

o

என்னிடம் காற்றூதி தரச்சொல்லி
பலூனொன்றைக் கொடுத்தாள்.

இரண்டு முறை ஊதியதும். போதுமென்றாள்.
நான், இன்னும் ஊதலாம் என்று ஊதினேன்.
மீண்டும் போதுமென்றாள்.
நான் இன்னும் பெரிதாய் ஊதினேன்.
போதும் போதும் போதுமென்றாள்.
இன்னும் ஒரே முறை என்று ஊத,
வெடித்து சிதறியது பலூன்.

கண் கலங்கியே விட்டாள் திவ்யா.
துடைத்துக் கொண்டு,
அடுத்த பலூனைக் கொடுத்து
இதையாவது உடைக்காமல் ஊதித் தாவென்றாள்.

தனக்கதிகமானதை தாண்டி
ஆசைபடுவதும் இல்லை.
தன்னை விட்டு போனதையே எண்ணி
கண்ணீர் சிந்துவதும் இல்லை திவ்யா குட்டி.

o

அலுவலகத்திலிருந்து வந்த அம்மா,
“செல்லம், மம்மிக்கு முத்தா கொடு என்கிறாள்”.

திவ்யா குட்டி ஓடி போய்
டெட்டி பியரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கிறாள்.

o

திவ்யா குட்டிக்கு பிறந்த நாள்.
தாய் மாமன் சீரென்று என்னால் முடிந்ததென்னவோ
அந்த பத்து ரூபாய் பொம்மை தான்.
பரிசீலாய் கொடுக்க
தகுதி இல்லாத பொம்மை அது என்பது
எல்லோர் பார்வையிலையே புரிந்தது.

ஆனால் என்னவோ,
திவ்யா குட்டிக்கு மட்டும்
பொம்மை ரொம்ப பிடித்திருந்தது.
நான் கொடுத்தது
வெறும் பொம்மையில்லை என்பது
திவ்யா குட்டிக்கு மட்டுமே தெரியும்.

o

ஆயிரம் பொம்மைகள் வந்தாலும்
திவ்யா குட்டிக்கு பிடித்தது
அந்த ஒரே ஒரு பொம்மை தான்.

ஏன்? எதற்கென்றெல்லாம் கேட்காதீர்கள்.
திவ்யா குட்டி சொல்வதாய் இல்லை.
அந்த பொம்மை அவளுக்கு உயிர் அவ்வளவு தான்.

காதலிக்கப்படாதவன் 07-01-2014

குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்