Thursday, November 21, 2013

தராசுமுள்ளின் கூன்


பள்ளி கட்டிடங்களுக்கு
விதிமுறைகள் வகுக்க
சில பூக்கள் சாம்பலாக வேண்டியிருந்தது.

ஒழுங்கில்லா பள்ளி வாகனங்கள்மீது
நடவடிக்கை எடுக்க
ஒரு ஸ்ருதி சக்கரத்தில் நசுங்க வேண்டியிருந்தது.

பெண்களுக்கெதிரான வன்கொடுமை
எதிர்த்து சட்டம் கொண்டுவர
ஒரு நிர்பயா கொல்லப்படவேண்டி இருந்தது.

தராசுத் தட்டு ஒரு பக்கம் சாய்கிற பொழுதெல்லாம்
நம் பிணங்களை காட்டி சட்டம் எழுதி
நிமித்தி நிறுத்தி இருந்தார்கள் தராசு முட்களை.

மூன்று நாள் கழித்து,
அதிகப்படியாய் ஒரு வருடத்தில்...
அந்த பூக்களை
அந்த ஸ்ருதியை
அந்த நிர்பயாவை
நீங்கள் மறந்துவிடுவீர்கள்.
அஹிம்சைக்காரன் சிரிக்கிற நோட்டை கொடுத்துவிட்டு
அத்துமீறல்கள் சுதந்திரமாய் திரியத்தான் போகிறது.

மீண்டும் தராசு முட்கள்
நிமிர்ந்து நிற்க
பிணங்கள் கேட்கலாம்...
ஒரு நாளுக்கு ஒரு வீட்டிலிருந்து என்னும் கணக்கில்
ஒரு நாள் உன் வீட்டிலும். 

Wednesday, November 20, 2013

கலைந்துவிடு கனவே

அது வெறும் கனவாய்மட்டும்
இருந்திருக்ககூடாதா?
கண்விழித்தவுடன்
அது முடிந்திருந்தக் கூடாதா?

திடுக்கிட்டு எழுந்து துழாவிப்பார்க்கையில்
தொலைந்து போன அந்த அன்புக்குரியவர்

பக்கத்தில் உறங்கிக்கொண்டிருக்கக்கூடாதா?
இல்லை, சும்மா அழைத்தேன் என்கையில்
திட்டிவிட்டு அலைப்பேசியை துண்டித்திருக்கக்கூடாதா?

அது கனவாய் க(தொ)லைந்துவிட்ட நம்பிக்கையில்
மீண்டும் நான் உறங்கி இருக்கக் கூடாதா?

வேண்டிக்கொண்டிருக்கிறேன்.
இது ஒரு நீளமான கனவாய் போக.
விழித்து இந்த கனவை
முடித்துக்கொள்ள காத்திருக்கிறேன்.

பேராசையெல்லாம் இல்லை எனக்கு.
நிஜங்களில் சில கனவாகிப் போக வேண்டும்.
கனவுகளோ மொத்தமும் நிஜமாக கையில் வேண்டும். 

கார்த்திகை இரவு


ஒரே ஒரு நிலா.
ஒரு சில நட்சத்திரம் போதாதோ?
என் கண்ணீர் துளிக்குள்
பிம்பம் விழுந்து. பிம்பத்திற்கு பிம்பம் விழுந்து.
என் கண் முன்னே நூறு விளக்கை
ஏற்றி வைத்திருக்கிறது இந்த இரவு.
o
மின்வெட்டு நாளொன்றில்
அழுக்குப் போர்வைக்குள்
அதைவிட அழுக்காய் கிடந்த
என் மார்பில் தலைவைத்துக் கிடக்கும் அவள்.
என்னை திரியாக்கி
விழி தீபம் ஏற்றி வைத்திருக்கிறாள்
எங்கள் ஒற்றை இருதயத்தின்
எட்டு அறையும் வெளிச்சமடையும்
அந்த ஒற்றை தீபம் போதாதோ.
தினமும் கார்த்திகை தான் எங்களுக்கு…
o
மருதாணி கைகள் கொண்டு
காப்பாற்றி விடுகிறாள்
அணையப்போகிற அந்த விளக்கை.
நானும் அணையப்போகிறேன்.
வருவாள் தானே… காப்பாற்ற…

Thursday, November 14, 2013

குழந்தை


தான் சீருடை மாட்டி
பள்ளிக்கு ரிக்சாவில் போகையில்
அந்த தெருவொரக்கடையில்
தன் வயது ஒருவன் அழுக்கு உடையில்
அந்த இரும்புகளோடு என்ன செய்கிறான்?
அவன் கடையில் வேலை பார்த்தால்,
அவன் வீட்டுப்பாடங்களை யார் செய்வார்கள்?
அவன் வருங்கால கனவு
என்ஜினியரா இருக்குமா டாக்டரா இருக்குமா?
என்று யோசித்துக்கொண்டிருக்கும் குழந்தைக்கு

மேடையில் கதருடைகள் பேசும்
குழந்தைகள் தினம் எதுவும் காதில் ஏறவே இல்லை.

o

பூக்கால்களை ஷூவுக்குள் திணித்துக்கொண்டு
அம்மாவின் தோசையை வாய்க்குள் திணித்துக்கொண்டு
சொல்லிக்கொடுத்த நேருவின் வரலாறை
மூன்றாவது முறையாக ஒப்புவித்துவிட்டு
ரோசா குத்தி பள்ளியில் போய்
முதல் பரிசை வாங்கிவந்துபிறகு
எல்லா வேசத்தையும் கலைத்துவிட்டு,
களைப்பில் குழந்தையாய் உறங்கிக்கொண்டிருக்கிறான்.

அம்மா சீரியல் டைட்டில் சாங்
ராகத்தில் தட்டிக்கொடுத்துக்கொண்டிருகிறாள்.

என்னைப்போன்ற குழந்தைகளுக்கு :D குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்.

Monday, November 11, 2013

இன்னுமொரு நாள்


தோற்றுப் போகும் அலாரம்.
உதடு சுட்ட தேனீர் குவளை.
ஈரத்துணியுடன் அறுந்து விழும் கொடி.
சோப்பு போடுகையில் தண்ணீர் நின்ற குழாய்.
பக்கத்து வீட்டுக் குழந்தையின் முத்தம்.
முறைத்துப் போகும் இரட்டைசடை தேவதை.
அன்று குறுஞ்செய்தி அனுப்பாத நீ.
அன்றும் சுவாசிக்காத நான்.

மொட்டை மாடி.

கூடு தொலைத்தலையும் பறவை
ரயில் விட்டுசென்ற அழுகுரல்.
பறிக்க மறந்து, செடி மிஞ்சிய மல்லிகை.
பசித்தழும் குழந்தை.
கல்லெறி பட்ட நாயின் வேதனை.
காலியான சாலை.
அன்றும் உன்னிடம் தர மறந்து
பையில் கணக்கும் அந்த காதல்.

12 மணிக்கு ஆறிப் போன தோசை.

யாரை நினைத்தோ விழித்திருக்கும் நிலா.
நீ என்றோ அனுப்பிய "ஸ்வீட் ட்ரீம்ஸ்"
ஹெட்போன் உளரும் இசை.
போர்வைக்குள் நுழைந்த கொசு.
தூக்கத்தில் நடக்கும் கடிகாரம்.
உறங்காமலும் எனக்குள் கணவாய் நீ.
குப்பைத்தொட்டி நிறைய கசங்கிய காதல்.
இன்னும் ஒரு குவளை "நீ". நான்.

இன்னுமொரு நாள் வாழ்வதற்கு

இதை விட காரணம் வேண்டுமா என்ன?
இன்னுமொரு நாள் உன்னோடு. 

Friday, November 8, 2013

பட்டுப்பூச்சியின் சிறகசைவு

தேன் திருடிய பட்டுப்பூச்சியின்
சிறகுதிர்ந்ததில்
தோட்டம் வண்ணமாகி இருந்தது.

இதயம் எடுத்துவிட்ட அவள் கொடுத்த
நினைவினைப்போல் அது.

தோட்டத்தின் வண்ணப்பூக்கள் எல்லாம்
நடந்த திருட்டின் சுவடுகள்.

o

காதல் ஒரு Chaos.
அவள்களின் விழி சிறகடிக்க
அவன்களுக்குள் ரிக்டர் அளவு தாண்டி வெடிக்குது
காதலென்னும் பூகம்பம்.

என்னுள், உன்னால்.

o

இமைக்காத(து) உன் விழி பார்த்திருக்கும்
எனக்குள் சத்தமின்றி கோடி பூகம்பம்.
ஒரு பூகம்பத்திர்க்காய்
பட்டாம்பூச்சி சிறகசைக்கத் தேவை இல்லை.

பார்வை ஒன்றே போதும்.

o

Chaos theory சொல்லி வளர்க்கப்பட்ட
ஒரு பட்டாம் பூச்சி தலைக்கனத்தில்
சிலந்தி வலையிடம் சோதனை நடத்தியது.

சோதனை, தோல்வியா? வெற்றியா?
சொல்ல வரவே இல்லை பட்டாம்பூச்சி

o

படித்த Chaos theory -யை புரிந்து கொள்ளாதவன்
பூகம்பமே இனி வராது என்று
பட்டாம்பூச்சியின் சிறகுகுகளை கத்தரித்தான்…
அவன் கத்தரிக்கோலின் சிறகசைப்பு
ஒரு பெரும் பூகம்பத்தை
உருவாக்கிக்கொண்டிருப்பது அறியாமல்.

o

வானமே இல்லாத பட்டாம்பூச்சி,
சிறகு முளைத்த ஒரு கூட்டுப்புழு.

o

அவள் பூகம்பம். வந்தாள்.
வந்ததால் என் அடிவயிற்றில்
பட்டாம்பூச்சியின் சிறகசைப்பு.
நாங்கள் இங்கே தலைகீழ் விதி.

Sunday, November 3, 2013

அவளலை

திரும்பிப் போகிற ஒவ்வொருமுறையும்
என்னைக் கொஞ்சம் எடுத்துக்கொண்டு
போகிறதந்த கடலலை

o0o

அடியே கடலே…
எல்லை கடந்தால்
நீயும் சுடுவாயோ?

o0o

பிரிந்து போகும் அலைக்காய்
கரைகள் அழுகிறதோ?
அழுகிற கரையின் கண்ணீர் துடைக்க
அலை விரல் மீண்டும் நீள்கிறதோ?

பிள்ளையையும் கிள்ளிவிட்டு
தொட்டிலையும் ஆட்டிவிடுகிறது இந்த அலை

o0o

காதல் செய்யும் நேரம்.
எலியாட்ஸ் கடற்கரை.
கடல் குடித்துக்கொண்டிருக்கும் நான்.
என் இடது தோள் சாய்ந்து,
விழியால் என்னை விழுங்கிகொண்டிருக்கும் அவள்.

இருவரும் மாறி மாறி
அலை தெரித்தனர் என்மேல்…
திடீரென்று என்னைக் காணவில்லையென்றால்
எந்த அலை கொண்டு பொய் இருக்குமென்று
உங்களுக்கு தெரியுமல்லவா?

o0o

அடுத்த அலையில் கரையப்போகும்
கவலை இல்லாத குழந்தையாய் நான்
மணல் வீடு கட்டிகொண்டிருக்கிறேன்…

இன்னுமொன்று கட்டிக்கொள்ள
கரையில் இன்னும் மண் இருக்கிறதே…

o0o

கரை எற முடியாத
கடலலை திரும்ப வருவதை
நிறுத்திக்கொள்ளவேயில்லை

Saturday, November 2, 2013

23 வயதுக் குழந்தை

எடுத்துக்கொள்ள நீட்டப்படுக்கிற
மிட்டாய் தட்டில் பத்தை
எடுத்துக்கொள்ளும் அந்த குழந்தை

ஏரோப்பிளேன் சத்தத்திற்கு ஓடி வந்து
வானத்தை பார்த்து அதிசயித்துப் போகிற
அந்த குழந்தை

சன்னல் சீட்டுக்கள் காலியில்லாத
பேருந்தில் ஏறப் பிடிக்காத
அந்த குழந்தை

மூக்கில், மூஞ்சி எங்கும்
ஒட்டிகொண்ட பஞ்சுமிட்டாய் பற்றி
கவலைப்படாமல் தின்னும் அந்த குழந்தை

கிணற்று தண்ணீர் பார்த்ததும்
உச்சியிலிருந்து உள்ளே குதிக்கும்
அந்த குழந்தை

அழுகிற பொழுதெல்லாம்
நிலா காட்டி ஏமாற்றப்படுகிற
அந்த குழந்தை

அடிகிடைக்கும் பொழுதெல்லாம்,
காயமடையும் பொழுதெல்லாம்
தலையணைக்குள் புதைந்து கொள்கிற
அந்த குழந்தை

பிடித்ததை செய்ய யாரிடமும்
கேட்கத் தேவை இல்லாத,
பிடிக்காததை பிடிக்காது
என்று சொல்ல பயமில்லாத,
பட்டாம்பூச்சி சிறகுகள் மேல்
அடுத்தவரின் கனவு நிறத்தை
பூசிக்கொள்ளத் தேவை  இல்லாத

அந்த குழந்தை இன்னும் எனக்குள்
கொஞ்சம் எங்கோ மிச்சமிருக்கிறான்…
அவனை பத்திரமாய் வைத்துக்கொள்ளுங்கள்.
தொலைத்துவிடாதீர்கள்… 

க்ஆ-த்அ-ல் – 5

“அ” எழுதி பழகிய சிலேட்டை
அம்மாவிடம் காட்டவென வரும்
பிள்ளையாய் உன்னிடம் பேச தொடங்குகிறேன்…

வரும் வழியில்
பையுள்ளையே அழிந்துவிட்ட சிலேட்டாய்
வார்த்தை வற்றி நிற்கிறேன்…

o

புத்தக நடுவில் வைத்த
மயிலிறகு வளராவிட்டால் என்ன…
வளர்ந்தது போல் தெரியுமே… அது போதாத?
மீண்டும் வைத்து
பூட்டிக் கொள்கிறேன் மயிலிறகை…

வைத்த மயிலிறகு நம்(என்) காதல்

o

கரடி பொம்மைகேட்டு
அழுது பார்கிறான் அந்த குழந்தை.
அடம்பிடித்தும் பார்க்கிறான்.
உண்ணா விரதம் இருந்தும் தோற்கிறான்…
கடைசியில் tom & jerry பார்த்தப்படியே தூங்கிப்போகிறான்.

கிடைக்காததால் அவனுக்கு
பொம்மையை பிடிக்காமல் போவதில்லையே…
வேறு எந்த பொம்மையையும்,
இது போல் பிடிக்காது அவனுக்கு.
அவ்வளவு தான் வித்தியாசம்.

க்ஆ-த்அ-ல் – 1 | 2 | 3 | 4

குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்