Wednesday, May 27, 2015

உடையும் பொருள். கவனம்.


நீ அனுப்பிய மஞ்சள் முகங்கள்
எனக்கு சோறுட்டும் நிலாக்கள்.
காதலே,
என் மனைவி ஆகும் முன்
தாயாகி விடுகிறாய் எனக்கு நீ.

o

குறுஞ்செய்தி புன்னகையால்
முற்றுபுள்ளி வைத்தபோது,
நான் முத்தத்தால்
அடுத்த வரியை எழுதுகிறேன்.

கைபேசி வழியாய்,
ஓங்கி குத்துகிறாய்.
முகத்தில் எலும்புகள் அதிகம்.
உனக்கு வலிக்காமலிருக்க
இருதயத்தில் வாங்கிக்கொள்கிறேன்.

o

கை தவறிவிட்டதாக சொல்லி
தொட்டியை உடைத்து விட்டு,
புன்னகை தொட்டியில்
வாழப் பழகிய மீனை
கண்ணீர்க்குளத்தில் விடாதீர்கள்.

நீங்கள் உண்மையாய் மீனை காப்பாற்றவில்லை.

- காதலிக்கப்படாதவன்

Monday, April 13, 2015

திவ்யா குட்டியும் ரோஸ் மரமும்

சீதாப்பழத்தை
விதையோடு சாப்பிட்டவளிடம்
வயிற்றுக்குள் மரம் முளைக்குமேன்று
அம்மா பயமுறுத்தும் போதெல்லாம்,
ரோஸ் மரம் வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறாள்
ரோஸ் தொட்டிக்குக் கூட இடமில்லாத
3 வது மாடியில் வாழும் திவ்யா குட்டி.

o


மல்லி சட்டினியை பார்த்தவள்,
“எனக்கும் மருதாணி வச்சு விடுமா”
என்று ஒரே அடம்.
அம்மாவின் கையில் ஒட்டியிருந்த  மல்லி சட்டினி
திவ்யா குட்டியின் முதுகில் சிவந்திருந்தது.

அன்றிலிருந்து
மல்லி சட்னியும் சுவைக்கவில்லை,
மருதாணியும் சிவக்கவில்லை.

- காதலிக்கப்படாதவன்

ஈரமில்லாத மழை

எல்லோரும் வெயிலில் நனைந்துகொண்டிருக்க,
நான் மட்டும்
மழையில் வெந்து கொண்டிருந்தேன்.

சூடு தாங்கா பாதம் தட்டும் கதவுகள்
முகத்தில் அறைந்து சாத்திக்கொள்கின்றன.
அறைந்த கன்னத்திற்கு காட்டிய மறுகன்னத்தில்
வழிந்தோடிய மழை நீரின் சுவடில்
பூக்கள் அரும்புகிறது.

வெயிலின் குளிர் தாளாத பூவிற்காய்
மீண்டும் பெய்யாயோ மழையே?

- காதலிக்கப்படாதவன் 

பூனைக்கு எதிராய் பொய் சாட்சி


பாத்திரம் விழும் சத்தம் கேட்டபோது,
போய் பார்க்கவில்லை நீங்கள்.

மியாவ் சத்தமும்,
விழுந்து கிடந்த சொம்பும்,
காணமல் போன பாலும் மட்டும்
எப்படி சாட்சியாகும்?

போய் பார்க்கவில்லை நீங்கள்.

அதற்குள்,
அந்தப் பூனையை சந்தேகப்படாதீர்கள்.

o

எப்படி குடித்தால்,
காணாமல் போன பாலிற்கு
பூனையை சந்தேகப்படுவீர்கள் என்று
உங்கள் வீட்டு திருடனுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது.

பாலில் மிதக்கும் கைரேகை
பூனையுடையதென்று சாதிக்கிறீர்கள்.
ஆனால் பூனைக்கு கைரேகை உண்டா?
தெரியாது உங்களுக்கு.

பூனையை திருடன் என்று சொல்லும் கதைகள்
உங்களுக்கு பிடித்திருக்கிறது.

- காதலிக்கப்படாதவன்

Saturday, January 24, 2015

என்(னை) ஆண்டாள்

ரங்கோலி அழகாய் வரைந்திருந்தாள்.
இருந்தாலும்
நெற்றியில் சரிந்து விழுந்த முடி ஒதுக்கையில்
கன்னத்தில் லேசாய் ஒட்டிக்கொண்ட வண்ணக்கீற்று
அதைவிட அழகாய். 


ரங்கோலி வரைந்துவிட்டு,
பக்கத்திலையே உட்கார்ந்து கொண்டு
எப்படி இருக்குது என்று கேட்கிறாள். 

கோலத்தை அழகென்று சொன்னால்
அது எவ்வளவு அப்பட்டமான பொய். 


மார்கழி முடிந்தபின்னும்,
அவள் வீட்டு முற்றத்தில் மட்டும்
மூன்று புள்ளி நெளிவு(நெளிந்த) கோலமொன்று
இன்னும் அழியாமல்.  


மகள் கைபிடித்து, கோலம்போட
தேவதை அவள் சொல்லிக்கொடுக்க
பாதி தூக்கத்தில் நான் ரசித்துக்கொண்டிருக்க 

எருமையை எழுந்திரிக்க சொல்லி
அம்மா எழுப்புகிறாள்.
கனவு (மட்டும்) கலைகிறது.  

ஆண்டாள் அரங்கனை சேர்வதில்
ஒரு நாள் தாமதம் ஆகிறது.  

- காதலிக்கப்படாதவன் 

Monday, December 22, 2014

சிறகொடிந்த பறக்கும் முத்தம்


தொடர்ப்பெல்லைக்கு அப்பால்
உயிரறுந்து கிடைக்கும் கைப்பேசிக்குள்
சிரிப்பிழந்து கிடைக்கிறது மஞ்சள்முகங்கள்.

சாத்திய சன்னல் கண்ணாடியில்
மோதி அடிக்கும் பட்டாம்பூச்சியாய்
நெஞ்சுக்குழிக்குள் வார்த்தை.

விண்மீன் புன்னகை சிந்திய மின்னல்,
குண்டூசி நுனியால் பாடும்  தாலாட்டு.
கிலோகணக்கில் கணக்கும் கிலோமீட்டர் தூரம்.

தூதனுப்பிய நிலா எங்கே?
கொடுத்தனுப்பிய ரோஜா பிடித்திருக்குமா?

சாப்பிட்டிருப்பாளா? பதில்கள் தெரியும் தான்.
இருந்தாலும் கேட்க துடிக்கிறேன்.

வெறும்கையில் முழங்கையிட்டு
நண்டும் நரியும் வருவதாய் சொல்லி
சின்னபிள்ளை ஊட்டும் பருப்பு சாதமாய்
பதில்வராத வானத்தில் அவள் முகம் பார்த்துக்கிடக்கையில்,
சிறகொடிந்த பறக்கும் முத்தமொன்று வந்து விழுகிறது மடியில்.

விழுந்த முத்தத்தை மீண்டும் கூட்டில் வைக்கவா?
இல்லை நானே வைத்து வளர்க்கவா? 

- காதலிக்கப்படாதவன் 

Tuesday, October 28, 2014

பசி தீரா கனவு


கலி முற்றும் சாமத்தில்,
புயலேரிய கடலாகும் கட்டில்.
உச்சிமண்டையில் நடமாடும் களிறிரண்டின்
காலிலிருந்து கழன்று உருளும்
சலங்கை மணிக்குள் அனு பிளவும்.
பிடரி பூத்த வியர்வை பற்றி எரிய
நிலா வந்து நெய் வார்க்கும்.
பயந்து, பூமியிலிருந்து இறங்கி
வின்நதி மீது ஓட எத்தெனிக்கையில்
மீன்களின் முள் இடறி உயிர்
முடிவறியா குழிக்குள்ளே விழப்போகையில்…
அவள் மடியில் விழித்துக்கொள்கிறேன் நான்.

திருவிழாவில் தொலைந்த குழந்தையை
தேடி வந்து தூக்கி கொஞ்சும் தாயென
தலை வருடி, உச்சி முகர்கிறாள்.
மீண்டும் ஒரு கனவு. வேறொரு கனவு. தொலைகிறேன்.

- காதலிக்கப்படாதவன் 

Monday, October 20, 2014

அப்பிகை மழை


அவன் காதல்,

நின்று நிதானமாய்,
யோசித்து, ஒத்திகை பார்த்து,
அழகாய், கவிதையாய் எல்லாம்
பெய்யத் தெரியாத
அப்பிகை மழை.

பெய்யென பெய்கையில்,
குடை விரித்துக்கொ(ள்ளா)ல்லாதே…
தாங்காது.

o

அவன் காதல்,
கொட்டும் அப்பிகை மழை.

தேநீர் குவளையின் கதகதப்பில்
ரசிக்கக் கூடியதில்லை,

குடைபிடித்து, ஒதுங்கி
ஓடத் தேவையில்லை,

இறங்கி நட, மெல்ல நனை,
மழையிடம் உன்னைக் கொடு,
மழையை கொஞ்சம் கையில் ஏந்து.
உனக்கும் பிடிக்கும்.

o

மழையின் கல்லறையில் பூக்கும்
வானவில் ரசிக்கும் தேவதை அவள்.
அவளுக்கான வானவில் செய்ய
மீண்டும் மீண்டும் பிறக்கும் மழை அவன்.

தேவதையே வானவில் வேண்டுமா?

- காதலிக்கப்படாதவன்

Saturday, September 6, 2014

இன்னும் கொஞ்சம் மழை வேண்டும்


நடைபழகும் மழை பிள்ளை,
யாரோ மறந்த காப்பிக் குவளை,
நீ தந்த பாதி மிட்டாய்,
எழுந்துக்கொள்ளப் பிடிக்காமல் நீயும் நானும்.
சிலரை மழையால் அடித்துக்கொண்டு போகமுடிவதில்லை.

இடது தோள் நனைய நீ,
வலது தோள் நனைந்து நான்,
தீராத மழை, தீராத நம் பேச்சு,
நகராத கடிகாரம், ஒற்றைக் குடை.
சிலருக்கு மழையில் குடை தேவைப்படுவதில்லை.

இன்னும் வரவில்லையென நீயும்,
வந்துவிடக்கூடாதென நானும்
வேண்டியும் வந்துவிடுகிற உன் பேருந்து.
குடையெதுமின்றி நனையாமல் ஓடி ஏறிக்கொண்ட நீ,
குடை இருந்தும் நனைந்துகொண்டு வழியனுப்பும் நான்.
சிலர் நனைவதை குடைகளால் தடுக்க முடிவதில்லை.

நீ கிளம்பிய இருபத்தியோன்பதாவது நொடியின் பாதியில்
இரண்டு ஜென்ம பிரிவை சுமக்கிறேன்.
சிலருக்கு மழை எவ்வளவு வந்தாலும் போதுவதில்லை

சில மேகங்கள் மட்டும்
நிற்காமல் தூறும்.
நீ அந்த வகை மேகம்.
எனக்கு இன்னும் கொஞ்சம் மழை வேண்டும்.

Friday, August 22, 2014

அன்புள்ள கருவாச்சிக்கு

அன்புள்ள கருவாச்சிக்கு,

எனக்குள் திருட்டுத்தனமாய் நுழைந்த நீ நலம்.
என்னிடம் திருடிக்கொண்டு போன நான் நலமா?

காதலை, சொல்லிவிடுகிற வார்த்தைகளை
இன்னும் பிரசவிக்காத மொழி பேசும் ஊரில்,
அடை மழையில் சிக்கிய உப்பு வியாபாரியாய் இருந்தேன்  நான்.
காதலை சொல்ல பயப்படுகிறவன் கோழை இல்லை.
காதலிக்க பயபடுபவன் தான் கோழை.

நான் கோழையாய் சாவதை விட,
காதலிக்கப்படாதவனாய் செத்துப் போகிறேன்.
இந்தா படி. பிடித்திருந்தால்,
பதிலை கடிதமாய் தான் தர வேண்டுமென்றில்லை.
ஒரு ஸ்மைலி போதும்.
பிடிக்காவிட்டால்?!!! பிடிக்கும்.

எதிலிருந்து ஆரம்பிக்க?

உனக்கு குட் மார்னிங் அனுப்பி பேசும் ஆர்வத்தில்
2 மணிக்கே விடிந்து விடுகிற என் காலை,
குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ் தாண்டி
கைபேசி வெளிச்சத்தில் அழகாய் நீளும் இரவு,
சாதாரண ஒரு நிமிடத்தைவிட பெருசாகும்
நீ பேசாத ஒவ்வொரு நிமிடமும்…
எதை பற்றி சொல்ல?

இன்னும் எத்தனை நாள்
வெறும் ஸ்மைலிகளில் உன் முகம் நான் பார்க்க?

எல்லா அலங்காரமும் களைந்து
புன்சிரிப்பு மட்டும் கொண்டு உறங்கும்
உன்னை பார்த்தே விடியட்டும் என் நாட்கள்.
இரவு உறங்கும் உன்னை முத்தமிடுகையில்
குழந்தையாய் சிணுங்க
இன்னுமொரு முத்தத்தோடு நீளட்டும் நம் இரவு.
இவ்வளவு தான்.

உன் சமையலறை சுதந்திரத்தில்
போர் எடுக்கும் என் குறும்புத்தனத்தை…
அடி பிடித்த பாலும், சமையலறை சுவரோவியமும்
கதை பேசட்டும்.
கவிதைகளின் வரிகளிலே
என் கன்னங்களை பதம் பார்த்த
உன் நகத்தளும்புகளின் சாயல் தெரியட்டும்
இவ்வளவு தான்.

இருட்டறை, அழுக்கு போர்வை,
என் மார்பில் நீ, உனக்கு(நமக்கு) பிடித்த இசைவரிசை,
உன்னிடமிருந்து பிடுங்கிகொண்ட ஒரு பாதி ஹெட் போன்,
இவ்வளவு தான்.

தாலி, மெட்டி, முத்தம், கலை
முந்தானை முடிச்சு, தலையணை மந்திரம்
உன் சீப்பில் இருக்கும் என் முடி
என் சட்டையில் படியும் உன் சேலை சாயம்,
கோபித்துகொண்ட இரவுகளின் பட்டினி..
வீம்பை பசி வெல்லும் இரவுகளில் ஒரே தட்டில் நிலா சோறு…
இந்த கடிதத்தை படித்து சிரிக்கும் நம் பேரன்
இதில் எதிலோ தான் நீயும் நானும் நாமாகி இருப்போம்.
இவ்வளவு தான்.

இந்த காதலை இப்படி பக்கம் பக்கமாகவும் சொல்லலாம்.
உன்னை காதலிக்கிறேன் என்றும் சொல்லலாம்.
சொல்ல வந்த வார்த்தை இன்றி,
உன் முட்டை கண்களுக்குள் நான் சொல்லாமலே தொலைந்தும் போகலாம்.
இவ்வளவு தான்.

இப்படிக்கு

உன் ராம் கருவாயன்


குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்