Tuesday, January 29, 2013

கழியாத மார்கழி

 
படம் இங்கிருந்து
.
முடித்துவிட்டு கேட்கிறாள்
"கோலம் அழகா இருக்கா?"...
உன்னருகே...
அசிங்கமாய் தான் தெரிகிறது
சொல்ல முடியவில்லையே!
(அப்புறம் அடி யாரு வாங்குறது)
o.o.o
.
உன் சோம்பேறிதனத்திற்கு
அந்த கோலத்திற்கு ஏன்  
இரவெல்லாம்
பனியில் நிற்கும் தண்டனை?
o.o.o
.
மார்கழி முடிந்து
ஒரு வாரம் தானே ஆகிறது
உன்னை பார்க்காத சோகம்...
கன்னத்தில் தாடியுடன்
உன் வீட்டு முற்றம்...
புற்கள்!
o.o.o
.
குளித்துவிட்டு வீட்டுக்குள்
நடந்தாய்...
முற்றத்தைவிட வீட்டுக்குள்தான்
அழகான கோலம்...
உன் கால்தடமாய்...
o.o.o
.
கோலம் போட
தெரியாதென்கிறாய்...
வேண்டாமடி செல்லமே
கால் பதிய நடந்து வா போதும்
( இது பழசு; நான் எழுதி நான் ரசிச்சது)

மேலெழும்பிய பெருவிரல்

என்னை முட்டாளாக்கிய
ஒரே புத்தகம் அது...
என் அம்மாவை
பிடிக்கும் என்பதை காட்ட
ஒரு லைக் போதுமாய் இருந்தது...
நான் என்னமோ 
முத்தமும் பாசமும் தேவை 
என்று நினைத்தேன்..
 .
என் தேசத்திற்கு 
உயிர் துறந்த வீரனை கௌரவிக்க
ஒரு லைக் போதுமாய் இருந்தது...
நான் என்னமோ 
சிலையும் மாலையும்
என் மகனுக்கு அவன் பெயருமல்லாவா
என்றல்லவா நினைத்தேன்...
.
பிடித்ததை சொல்ல
பிடிக்காததை கொல்ல
எதிர்ப்பை காட்ட
ஆதரவை நீட்ட
இன்னும் எதற்கெல்லாம்
நான் லைக் இடப் போகிறானோ?
நல்ல வேலையாக
திருமணம் செய்ய
பெண் ஆணையோ ஆண் பெண்ணையோ
லைக் இட்டால் போதுமென்று
கலாச்சாரம் மாறும்வரை
.
அந்த புத்தகத்தின் பூச்சியாகவே
கிடந்துவிடுகிறேன்...
அவன் மூடி நசுக்கட்டும் என்னை...
.
நம்மை பிடித்த
ஒரு வாதம் அது...
உயிரோடு பிணமாக்கும்
வாதமது...

Monday, January 14, 2013

கடிக்கும் குரைக்கிற நாய்

என்னை நீங்கள்
இதற்கு முன்பு
பார்த்திருப்பீர்கள்...
எங்கேனும் நிச்சயம்
பார்த்திருப்பீர்கள்...

எங்காவது அடிபட்டு
கிடந்த உங்களை
நீதியின் அலைச்சலுக்கு
பயந்து, துடிக்க விட்டு
போய் இருந்திருப்பேன்...

உங்களை அதர்மம்
சூறையாடிய போது
என் உயிர் என்னும்
சுயநலத்தோடு கண்டு கொள்ளாமல்
நகர்ந்திருப்பேன்...

ஏன்?
உங்களை பார்த்து குரைத்த
உங்களை துன்புறுத்திய
உங்கள் காலை அசிங்கம் செய்த
அந்த நாய் நானாக கூட
இருந்திருக்கலாம்...


எங்கேனும் நிச்சயம்
என்னை பார்த்திருப்பீர்கள்

துடிக்க விட்டு போன
நான் நிச்சயம்
உங்கள் இறுதி ஊர்வலத்தில்
கண்ணீர் சிந்தி இருந்திருப்பேன்...
ஒரு மெழுகுவர்த்தி ஏற்றிருப்பேன்...
உங்களுக்கு ஏற்பட்ட அநீதிக்கு
மூச்சு முட்ட கத்தி இருந்திருப்பேன்...

துடிக்க உங்களை சாக விட்டுவிட்டு
நீதியை காப்பதாய் குறைப்பேன்
எங்கேனும் நிச்சயம்
என்னை பார்த்திருப்பீர்கள்



Thursday, January 3, 2013

அரிச்சந்திர பொய்கள்

உண்மைகளை
இப்போ யாருக்குமே
பிடிப்பதில்லை

காதலில்லை என்ற
உண்மையின் முகம்
அமிலத்தில் பொசுங்கி போகிறது...

உரிமைகள் முழங்கும்
முகப்புத்தக உண்மைகள்
சிறை அடைபடுகிறது...

காதலோ, பூக்களின்
ஹைஹீல்சில் நசுங்குகிறது...

உன் வலியோ
நிர்வாணமாக்கப்பட்டு
சோதனைக்குள்ளாகிறது

பசியோ கொலை செய்யப்படுகிறது
திறமையோ மலடாக்கப்படுகிறது
உரிமையோ ஊமையாக்கப்படுகிறது

உண்மைகளை
இப்போ யாருக்குமே
பிடிப்பதில்லை

புன்னகைகளின் பின்னால்
கூர் பற்கள் ருசிக்க துடிக்கிறது...
முத்தங்களின் பின்னால்
விசப்பற்கள் சீண்டிப் பார்க்கிறது
பூங்கொத்துகளின் பின்னால்
துப்பாக்கி ஒன்று குறி பார்த்து கிடக்கிறது

உண்மைகளை
இப்போ யாருக்குமே
பிடிப்பதில்லை

Wednesday, January 2, 2013

தெளியாத போதை

எப்பேர்பட்ட துயரமாகினும்
மறக்க
ஒரே ஒரு கிரிக்கெட் நூறோ
இன்னுமொரு புத்தாண்டு கொண்டாட்டமோ
தலைவனின் அரசியல் நுழைவோ
போதுமாய் இருக்கிறது...

எப்பேர்பட்ட துயரமாகினும்
மறக்க மெழுகுவர்த்தியும் ஒருவார பேச்சும்
போதுமாய் இருக்கிறது...
எப்பேர்பட்ட துரோகமாகினும்
மறக்க
இன்னுமோர்  பெரிய துரோகம்
வோட்டுக்கு அதிகமாய் நூறு
ஐந்தாறு இலவசங்கள்
போதுமாய் இருக்கிறது...

எப்பேர்பட்ட துரோகமாகினும்
மறக்க இன்னுமோர் ஐந்தாண்டு
போதுமாய் இருக்கிறது...

எப்பேர்பட்ட வலியாகினும்
மறக்க
இசையும் தனிமையும்
பேனாவும் காகிதமும்
புத்தகமும் நீயும்
போதுமாய் இருக்கிறது...

எப்பேர்பட்ட வலியாகினும்
மறக்க கோப்பை போதையும், பனி துண்டும்
போதுமாய் இருக்கிறது...

நீ என்கிற கொடும் போதையிலிருந்து
என்னை தெளிவிப்பது மட்டும்
இன்னும் எதாலும் எவராலும்
முடியவே இல்லை...

குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்