Saturday, July 26, 2014

நீங்கள் திவ்யா குட்டி இல்லை


உயிரோடு எறும்பு மிதக்கும் பாலை
கண்ணுக்கு நல்லதென்று சொல்லி
குடிக்கக் கொடுக்கிறீர்கள்.
"அப்போ, எறும்புக்கு?" என்று கேட்பாளென
எதிர் பார்த்திருக்க மாட்டீர்கள்.

இழவு விடொன்றில்
விளையாடிய திவ்யா குட்டியை
அடித்து அழவைக்கிறீர்கள்.
நீங்கள் அழுது வராத இறந்தவர்,
அவள் அழுதாலும் வரமாட்டார்
என்று தெரிதிருக்காது உங்களுக்கு.

அவளை, வருந்த வேண்டியதற்கு சிரிக்கவும்
மறக்க வேண்டியதற்கு அழவும் செய்கிறீர்கள்.

நீங்கள் திவ்யா குட்டி இல்லை,

விளையாடவென ஐபோனைக் கொடுத்தீர்கள்.
அவள் தூக்கி போட்டு விளையாடுவாள் 
என்று எதிர் பார்த்திருக்க மாட்டீர்கள்.
அழுதுகொண்டிருக்கிறாள் திவ்யா குட்டி.

அவள் விளையாடிக்கொண்டிருந்த பலூன் 
பீங்கான் பூந்தொட்டியை தட்டி உடைத்துவிட, 
கோபத்தில் அவள் பலூனை பிடுங்கி 
பரணில் எரிந்துவிடுகிறீர்கள்.
அழுதுகொண்டிருக்கிறாள் திவ்யா குட்டி.

நீங்கள் உடைத்ததை விட 
அவள் உடைத்தது எல்லாம் 
திருப்பி சரி செய்யக்கூடியாதகவே இருந்தது.

நீங்கள் திவ்யா குட்டி இல்லை.
திவ்யா குட்டியாய் ஆகவும் முடியாது.

Thursday, July 17, 2014

செத்துப்போ

யாரோ ஒருவன்
பெரியவன் ஆக வேண்டி இருக்கலாம்.
தன் பலம் நிருபிக்கும் அவசியம் வரலாம்.
அதற்காகவேனினும்,
யாரோ ஒருவனுக்கு
உன்னுடையது பிடித்துப்போகலாம்.
உன்னை பிடிக்காமல் போகலாம்.
அதற்காகவேனினும்,
யாரோ ஒருவன்
உன் வீடு கொழுந்துவிட்டெரிகையில்
மிச்சத்தை பிடுங்கி கொள்ள வந்திருக்கலாம்.
குளிர் காய காத்திருக்கலாம்.
அதற்காகவேனினும்,
யாரோ ஒருவனுக்கு
உன் மரணத்தில் லாபம் அதிகம் இருக்கலாம்.
நீ உட்கார்ந்திருக்கும் இடம் தேவைப்படலாம்.
அதற்காகவேனினும்,
ஏறிப் போக படிக்கட்டு வேண்டும்
ஆடும் நாற்காலியின் காலுக்கு வைக்க ஜடம் வேண்டும்.
அதற்காகவேனினும்,
செத்துப்போ.

நீ செத்துப்போகையில்
உன்னை தூக்கி போடவென
யாருமே இல்லாமல் போகலாம்.
அதற்குள்ளாகவேனினும் செத்துப்போ.

உன் பிணங்களை நல்ல விலைக்கு கேட்கிறார்கள்.

காதலிக்கப்படாதவன்


Friday, July 11, 2014

அதே மழை, வேறொரு நாள்


வக்கனை காட்டி மழை தராமல்
காற்றில் கலைந்துவிடுகிற கார்மேகமாய்,
“typing… typing… ”
என்று காட்டிக்கொண்டே இருந்த
உன்னிடம் இருந்து வந்து சேரும் வெறும் ஸ்மைலி.

காற்றை மீறி பெய்யத்துவங்கி
சொல்லாமல் கொள்ளாமல் நின்று போன மழையாய்,
திரும்ப அனுப்பாமல் குப்பைக்கு போகும்
உனக்கு டெலிவர் ஆகாத குறுஞ்செய்தி.

நின்று போன பிறகு
மரம் தூறும் தூறலாய்
திரும்ப திரும்ப படிக்கையில்
உயிருக்குள் இனிக்கும் நீ அனுப்பிய
குட் நைட்டும், குட் மார்னிங்கும்.

12 மணி தாண்டி, அரை தூக்கத்தில்
உன் குறுஞ்செய்தியோடு நீளும் நாள்…
அன்று இரவெல்லாம்
தகர ஓட்டிடம் மழை பேசிக்கொண்டிருக்கிறது
நான் சொல்லாத ரகசியத்தை…

                                  - காதலிக்கப்படாதவன்

அவள் அனுப்பிய ஸ்மைலியாய் இந்த மழை, எவ்வளவு வந்தாலும் போதுவதில்லை. :)

குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்