Thursday, March 14, 2013

ரத்த மொழி

தினமும் கடக்கும் அந்த
பிரதான சாலையின் தரையில்
யாரோ ஒரு உடல்  தன் ரத்தம் கொண்டு
எதையோ எழுதி போவது உண்டு…

அப்படி என்னதான் 
எழுதி போகிறார்கள் அவர்கள்
 
தாங்கள் தலைகவசத்தை
தலையில் மாட்டாமல்
கையில் கொண்டுவந்த அவசியத்தையா?
 
போன வாரம் நிச்சயமாகி
வண்டி ஓட்டுகையில் கூட
கைப்பேசியில் குடும்பம் நடத்திய
வருங்கால மனைவிக்கு கொடுக்க மறந்த முத்தமா?
 
விரட்டி வந்த பெண்ணிடம்
சொல்ல மறந்த காதலா?
 
என்ன தவறு நான் செய்தேன்?
நீ செய்த நொடி பிழையில்
என் வாழ்க்கை முடிவதேனோ என்று
கேட்க முடியாமல் போன பரிதாப கேள்வியோ?
 
அவன் பிள்ளைக்காய் சொத்தும் இல்லை
சொந்தமும் இல்லை… அனாதை ஆக்கிவிட்ட
வருத்தத்தின் கண்ணீரோ?
 
பார்த்து வா என்ற அம்மாவிடம் மன்னிப்பா?
கோபித்து கொண்ட மனைவியை சாந்தபடுத்த
கொண்டு வந்த காதல் முத்தமோ?
அப்பா நான் டாக்டர் ஆகணும் என்ற மகளின் கனவா?
பதவி உயர்வை பிடுங்கிகொண்டவர்
மேலதிகாரி மேலான கோபமா?
 
அப்படி என்னதான் 
எழுதி போகிறார்கள் அவர்கள்
 
அதை இன்னும் எவருக்கும்
மொழி பெயர்க்க தெரியவில்லை…
தெரிந்திருந்தால் தினம் ஒருவன் எழுதிப்போவானா
தினமும் கடக்கும் அந்த
பிரதான சாலையின் தரையில்

பின்குறிப்பு –
 • காலனுக்கு missed call கொடுப்பதுக்கு கூட உயிரை கட்டணமாய் செலுத்தனும். எதற்கு வீண் செலவு?
   
  *~*~*~*~*~*~*~*~
   
  பழைய சோறு – தலை கவனம் | நில் கவனி காதலி
   

Saturday, March 9, 2013

Valentine இருதயம் – II

Image source Samantha Ruth Prabhu Official FB page
எவன் சொன்னான்
பூமிக்கு ஒரே நிலா என்று?
நீ இருப்பதை தெரிந்துகொள்ளாத
நாசாக்காரன் துரதிர்ஷ்டவசமான முட்டாள்
o.o.o
காதல்
உனக்கு தெரியாமல்
உன் வீட்டில் நடமாடும் பூனை…
களவாடும் உருட்டி விளையாடும் காயப்படுத்தும்.
o.o.o
காதல்
ஒரு காக்கா எச்சம்…
தங்கத்தாலனது…
உன் தலையில் விழுவதை
தடுக்கவும் முடியாது…
உன் தலையில்
எப்போது விழ வேண்டுமென்பதை
முடிவெடுக்கவும் முடியாது….
விழும் விழாமலும் போகும்…
விழுந்தால் பத்திரப்படுத்திக்கொள்…
விழவில்லையென தேடி திரியாதே…
அது காக்கா எச்சம்…
o.o.o
ஒரு குழந்தையிடம்
ஏன் உன் அம்மாவை பிடிக்கும்?
என்று கேட்பது போலத்தான்…
ஏன் காதலிக்கிறாய்?
இதயம் உடைத்தவளை(னை)
இன்னும் என் இதயத்தில் சுமக்கிறாய்…
என்று நச்சரிக்கும் கேள்விகள்…
எந்த ஒரு வார்த்தைகளும்
அந்த பதிலை விவரித்திட முடியாது…
அந்த குழந்தை “புடிக்கும்” என்றுதான் சொல்லும் அவ்வளவு தான்…
o.o.o
உடைபடாமலே கிடந்தால்
அழுகி பாழாகும்…
தேங்காயும் இருதயமும்…
காதல் ஒன்றும் உங்களை
கொன்றுவிடாது…
நீங்கள் அதை கொன்றுவிடாதீர்…
o.o.o
காதலும் கடவுளும் ஒன்று
அவர்கள் கொலை செய்வதில்லை…
ஆனால் அவர்களின் பெயரில் கொலைகள் நடக்கிறது…


Valentine இருதயம் – I

காதல்…
உன் காலை ஓடி வந்து
கட்டிக்கொள்ளும் சிறு பிள்ளை…
தூக்கி கொஞ்சுவதும்
உதறிப்போவதும் உன் விருப்பம்
உன்னை பார்த்தழும் பிள்ளைக்கும்கூட
நீ முத்தமுமிடலாம்…
முத்தம் கிடைக்கும்

@_@ + #_# + @_@

ஒன்றையும் ஒன்றையும் கூட்டி
ஒன்று வந்தால்…
கணிதத்தில் அது பிழை…
வாழ்க்கையில் அது தான் சரி…

@_@ + #_# + @_@

இருபது வருடம்
அடுத்தவர் பொருளை
பத்திரமாக வைத்திருக்கும் நாம்…
நமது கிடைத்ததும்
எளிதாய் உடைத்துவிடுகிறோம் – இடம் மாறும் இருதயம்

@_@ + #_# + @_@

எதோ ஒரு குப்பைத்தொட்டியிலோ
எடைக்கு போன பேப்பர் கட்டிலோ
எதோ ஒரு மெயிலின் டிராப்டிலோ
டைரியின் பக்கத்திலோ

இரவு தலையணை நனைக்கும் கண்ணீரிலோ
SMS எழுதிவிட்டு அழிக்கப்பட்ட
எதோ ஒரு வார்த்தையிலோ
முகப்புத்தகத்தில்/smsல் தயங்கி தயங்கி
சொல்லும் ஒரு Hi-யிலோ

இந்த உலகத்தின்
இன்னும் சொல்லப்படாத
ஓர் காதல் இருக்கிறது…
அது உங்களதாககூட இருக்கலாம்…
அதை கொல்வதும் அதில் வாழ்வதும்
உங்கள் கையில்…

@_@ + #_# + @_@

என் கவிதைகளும்
என்னைப் போலத்தானடி
நீ தான் என் காதலி என்பதை
எவ்வளவு சுற்றி வளைத்து
சொல்ல முடியுமோ அவ்வளவு சுற்றி
வளைக்கிறது …
அந்த சுருளுக்குள்ளே
சிக்கிக் கொண்டேன் சுகமாக

Friday, March 8, 2013

தேவதையின் சிறகு சுமை

கவிதை v 2012ஜனனம், பாசம், சகோதரத்துவம்,
காதல், துணை, சந்ததி
சுகக்கின்ற காயம், இனிக்கின்ற கண்ணீர்,
சுவர்க்கமாய் மடி, சுகமாய் தோள்

எத்தனை எத்தனை வரங்கள்
இந்த தேவதை எனக்கு கொடுத்தது…

அவளுக்கு  நம் சமுகம் கொடுத்ததென்னவோ
கள்ளிபால், அரைகுறை கல்வி,
வரதட்சணை சுமை, அடுப்படி சிறை,
தாலி என்னும் முள் வேலி,
சீரியல் கண்ணீர், காமம்,  பயம் 
கற்பென்னும் சிலுவை,
காபி கேட்டு அதட்டும் கணவன்,
வேண்டுமென்றால் போட்டு குடி
என்று சொல்ல முடியாத அளவு சுதந்திரம்

என்கின்ற சாபங்கள் மட்டும் தான்…

இந்த தேவதைகளுக்கு மட்டும்தான்
சிறகுகள் கூட சிலுவை மரங்களால் செய்யப்பட்டது

அனுகுண்டிடம் கூட தப்பித்துவிடுகிற
கரப்பான் இவளின் துடைப்பானில் நைந்து போகும்
எனவே இன்னுமொருமுறை
இவளை இம்சிக்க நினைத்தால்
நெற்றிக்கண் திறந்து எரிக்கும்…
சிவனின் நெற்றிக்கண் பற்றி எனக்கு தெரியாது
இது சக்தியின் நெற்றிக்கண் நிச்சயம் எரிக்கும் பாவிகளே!

அம்மா, கடவுள் அப்படி இப்படின்னு எவ்வளவோ எழுதலாம் எதுவும் ஈடாகது… அந்த தண்டனை இந்த தண்டனை ன்னு எவ்வளவோ பேசலாம் சரியான கற்பிதம் தான் பெண்களுக்கான அநீதியை/அடக்கு முறையை மாற்றும். அது விரைவில் வரும் என்ற நம்பிக்கையோடு வாழ்த்துக்கள்

என்ன ஒரு முறை பெற்றெடுத்த ஒரு பெண்ணிற்கும், என்னை ஒவ்வொருமுறையும் புதிதாய் பெற்றெடுக்கும் ஒவ்வொரு பெண்ணிற்கும், காதலை எனக்கு காட்டிய அந்த பெண்ணிற்கும், என் காதலை நிராகரித்த அந்த பெண்ணிற்கும், நான் சொல்லாமலே காதலிக்கும் அந்த பெண்ணிற்கும், என் ஒவ்வொரு நாளையும் அர்த்தமுள்ளதாய் மாற்றும் எல்லா பெண்ணிற்கும் இனிய மகளீர் தின நல்வாழ்த்துக்கள்.
 


 

Monday, March 4, 2013

பிள்ளை கறி தின்னும் பூமி

அது பகிர்ந்துண்ண
விரும்பாத காக்கா கூட்டம்

கண் அசந்தால்
பிணமென்று சொல்லியே திண்று தீர்க்கும்
ஆணையும் பெண்ணையும்...

அப்படி என்ன பசியோ?
பிள்ளை கறி தின்றது காக்கா ஒன்று
இந்திய பெருங்கடலின்
மயான தனிமையில்

பிள்ளை கறி தின்றுவிட்டு
திருப்பதி கோபுரத்தில் வந்து
அழகின் அழுக்கை துடைத்து கொள்கிறது...

வெங்கடாசலபதியோ சிரித்துகொண்டே
பார்த்திருந்து கல்லென்று நிருப்பித்துவிட்டான்...
அவன் என்ன செய்வான் பாவம்
அவனுக்கு உண்டியல் துட்டை
கணக்கு பார்க்கவே நேரம் சரியாய் இருக்கிறது

பெரிய புராணத்தில்
பிள்ளைக்கறி சிவன் கேட்கையில்
திருவிளையாடலென்ற கூட்டம்
கோகுலத்தில்
கண்ணன் கோபியரின் தாவணி திருடுகையில்
திருவிளையாடலென்ற கூட்டம்
கலியுகத்தில் இரண்டையும்
ஒரு பேய் செய்கையில் திருவிளையாடலென்று
ரசிக்குது போலும் ...
வரும் நாளில் கோவில்கட்டி
கும்பிட்டாலும் கேட்பதற்கில்லை

யுத்த நீதி வகுத்த
பீஷ்மனே கௌரவருக்காய்
போர்புரிந்த பூமி இது...
இங்கே சகுனியை போய் தர்மனுக்காய்
வாதாட சொல்வதில் என்ன கிடைக்கும்?

ஒரு பிள்ளை கறி

உணவானது இன்று தெரிந்தது
தெரியாமல் எத்தனையோ?
அவர்களுக்காய் கண்ணீர் சிந்த கூட
புகைப்பட சாட்சி வேண்டுது இந்த உலகிற்கு

நீ புதைக்கப்படவில்லை விதைக்கபட்டாய்
என்று புலம்பும் இந்த உலகம்
நீ எத்தனை முறை பிறந்து வந்து இறந்தாலும்
உன் உறவுகள் சிந்திய ரத்தத்திற்கு பதில் கிடைக்காது
என்று சொல்லாமல் சொல்கிறது...
ஆம் நீ புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டாய்

நாலு கண்ணீர் நாலைந்து மெழுகுவர்த்தி
நாற்பது வரி கவிதை
முகபுத்தகத்தில் வீரமகன் என்று
புறநானூறை மேற்கோளிட்டு நானூறு லைக்...
நல்லவேளை இந்த பாவப்பட்ட பூமியிலிருந்து
அவனுக்கு வேகமாய் ஒரு விடுதலை
நிச்சயமாய் அவன் ஆத்மா சாந்தியடையும் ...

Sunday, March 3, 2013

சிங்கம் 65 விலை ஒரு App****al

தேவையான பொருட்கள் :
 • ஒரு சிங்கம்
 • சிங்கத்திற்கு கொஞ்சமாய் அ**சல் ஆசை
செய்யப்படும் முறை:

கத்தி வைக்கையில்
துள்ளி குதித்து ரத்தம்
எங்கும் சிதறும் என்று அஞ்ச வேண்டாம்

ஒன்று ஒன்றாகவா?
இல்லை வெந்நீரில் முக்கி ஒரே மூச்சகவா!
எப்படி ஆய்வது இதன் பிடரி முடியினை
ஐயம் வேண்டாம்

நீ விழாவிற்கு வந்து
வேடிக்கை பார்த்தால் மட்டும் போதும்
தானாய் வேடிக்கை காட்டும்
தானே வேடிக்கை ஆகும்

கருப்பனின் அருவாளை
எதிர்க்கொள்ளும் ஆடாய்
தாலியை தொட துணியும்
ஒரு இளைஞனாய் தன்னை
ஆயத்தபடுத்திக் கொள்ளும் சிங்கம்
ஒரே வித்தியாசம்
இதனிடம் வாழும் ஆசை இருக்கும்

சுவைக்கெல்லாம் வேண்டாம்
பார்த்தாலே மயங்கிடுவோம்
அப்படியோர் மசாலா தயாரித்து…
தன் குற்ற நிர்வாணத்தில் பூசிக்கொள்ளும்
பக்குவமாய் பருவம்வர காத்திருக்கும்
நடுநடுவே சுவை பார்க்கும்
சூடு சுரணை ஏற்ற உப்பும் காரமும்
எட்டிவிட்டதா சோதித்துக்கொள்ளும்…
 
புது கணவனுக்கு சமைக்கும்
மனைவியின் அக்கறையோடு
சிங்கம் தன்னை தயார் படுத்தும்…

தக்க சமயத்தில்
தங்க நிறத்தில் தன்னை தானே
வறுத்தெடுக்கும்…
ஊரெல்லாம் இதைபற்றி பேசும்
எத்திக்கும் இதன் வாசம் வீசும்
கூடி வந்து பூனையெல்லாம்  
வாய் புண்ணானாலும் பரவாயில்லை என
சிங்கத்தை கொஞ்சம் அள்ளி சுவை பார்க்கும்
வாய் முழுக்க அள்ளிக்கொண்டாலும்
வக்கனையாய் குறை சொல்லும்…

ஆறாயிரம் ஆறாகும்
ஆறே நாளில் காணாமல் போகும்
ஆனாலும்
அந்த நெயிட்டு வறுத்த மசாலா வாசமட்டும்
ஆறுமாசம் எங்கும் பேசும்…

தின்று சுவை பார்த்துவிட்ட
பூனையோ பசி தீரமால்
அடுத்த பந்தியிலும் நுழையும்…
போன பந்தி வறுவல் போல
இந்த பந்தியில் இல்லை என்று
இலை மூடி மொய் எழுதாமல் ஓடும்…

பின்குறிப்பு – ……………………………………………………………….. [என்ன எழுதனும்]

அடடே ஆச்சரியக் குறி – 4

முன்குறிப்பு – ஒரு கவிஞனின் கவிதைக்கு சோதனை எலிகள் நண்பர்கள் தான்… இங்கே என் தோழி… நன்றி தோழி…

வைவா கேள்விக்கு முழிக்கும்
என்ஜினீயர் மாணவன்  ஆகிறேன் 
“நல்லா இருக்கா?” என்று நீ கேட்கையில்

வானத்து வானவில்லிற்கே
ஏழு தான்…
அடி பூமியின் வானவில்லே
உனக்கு எல்லா வண்ணமும் அழகு…
 
அழகான உடைதான்
வாங்கவேண்டுமென்றால்
கடையையே வாங்கலாம் உனக்கு…
-    இப்படிக்கு trial அறை கண்ணாடி 
o.o.o

அவளுக்கோ இவளுக்கோ வைத்தால்
கடனே என நான் சிவப்பென்
உனக்கு வைத்தால் மட்டும் தான்
நான் வெட்கப்படுவேன்

உன்னை அழகென்றெல்லாம்
சொல்ல மாட்டேன்
வேண்டுமென்றால் இனி அழகை
உன் பெயர் சொல்லி வர்ணிக்க சொல்லிவிடுகிறேன்…

-    இப்படிக்கு நீ வைத்து கொண்ட மருதாணி
o.o.o

ஒரு கவிஞன் படிக்கும்
கவிதை நீ
நித்தம் ரசிக்கும் 
இசை நீ 
எந்தன் வயதில்
என் தாய் நீ
நான் கொஞ்சிக்
கொள்ளு(ல்லு)ம் பிள்ளை நீ   
என் காதை திருகும்
தோழி நீ
எவ்வளவு சொல்ல தீருமா?
நட்பென்ற சொல்லின் உயிர் மெய்  நாம்…
இது போதுமா? 

o.o.o

கவிதைக்கு பொய் அழகென்ற
அந்த கவியரசனை பொய்யாக்கி விட்டாய்
இங்கே மெய்யாய் இதோ…
-    இப்படிக்கு நான்
அடடே ஆச்சரியக்குறி – 1 | 2 | 3

குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்