Thursday, May 15, 2014

நாற்காலி சண்டை


இசை நின்றவுடன்
நாற்காலியை பிடிப்பதில்
குறியாய் இருந்துவிட்டவனுக்கு,

நாற்காலிகள் தீர்ந்த
அப்போது தான் உரைக்கிறது
இனி இசை
கிடைக்கபோவதில்லையென.

oOo

இசை நின்று போனதும்
யாரோ ஒருவனுக்கு
நாற்காலி இல்லாமல் போக போகிறது.

அந்த ஒருவனாய்
தான் இருக்க மாட்டோம்
என்னும் நம்பிக்கையில் தான்,
தானாய் இருக்ககூடாது
என்னும் வெறியில் தான்
ஓடிக்கொண்டிருக்கிறார்கள் ஒவ்வொருவரும்.

oOo

இசை நிற்கிற வரை
எல்லோரும் ஓடிக்கொண்டிருக்க
ஒருவன் மட்டும் நடுவில் நுழைந்து
கால் மேல் கால் போட்டு
நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு
தான்தான் வென்றதாய் அறிவித்துக்கொள்கிறான்.

ஓடிகொண்டிருந்தவர்கள்
நாற்காலி கிடைக்கவில்லையென
வருத்தம் மட்டும் பட்டுக்கொண்டார்கள்.

oOo

நீங்கள் அடித்துக்கொள்ள வேண்டுமெனவேதான்
இசை நாற்காலி போட்டியில்
ஒரு நாற்காலி குறையாக இருக்கிறது எப்போதும்.

oOo

இசையையும் ரசிக்க விடாமல்,
நாற்காலியும் உனக்கு கிடைக்க விடாமல்
வெளியிலிருந்து ஒருவன்
உன்னை சுற்றவைத்துக்கொண்டிருக்கிறான்.

இன்றில்லாவிட்டால் என்ன?
என்றாவது கிடைக்கலாம்.
ஓடு. ஓடிக்கொண்டே இரு.

oOo

காலி நாற்காலி இருக்கிற
எல்லா இடத்திலும்
யாருக்கும் தெரியாமல்
உட்கார்ந்திருக்கிறது சண்டை. 

Saturday, May 3, 2014

Sydney Sheldon, Train & காதல்

||பேருந்துக் காதல் - 1 | 2 | 3 | 4 || இரயில் காதல் - 1 | 2 ||

கையில் சிட்னி ஷெல்டனுடன்
எதிரே உட்கார்ந்து வாசிக்க தொடங்கினாள்.

138வது பக்கத்தின் பாதியில்
புத்தகம் திறந்திருக்க உறங்கி இருந்தாள்.

நான் மட்டும்
என் முன் இருக்கும் கவிதை புத்தகத்தின்
முதல் பக்கத்தையும் கடக்கவும் முடியாமல்,
மூடிவைத்துவிட்டு உறங்கவும் முடியாமல் தவிக்கிறேன்.

 When people tell me I’ve kept them up all night, I feel like I’ve succeeded. - Sydney Sheldon

 oOo

அன்று
வந்து சேர்ந்தது ரயில்கள் மட்டும் தான்.
வெளுத்திருந்தது வானம் மட்டும் தான்.
பிரிந்து போனது திசைகள் மட்டும் தான்.
முடிந்து போனது நாவல் மட்டும் தான்.

ரயில் இஞ்சின் அணைக்கப்பட்ட பிறகும் கூட
அதை தாண்டியும்
தண்டவாள பாதை மட்டும்
இன்னமும் ஓடிக்கொண்டிருந்தது.

…but ready or not,life goes on. – Sydney Sheldon

P.P.S. – Ok! It is just another Crush starts at Tambaram and ends while I’m in sleep :P

நிஇஇலாஆஆ


வெள்ளை முற்றுபுள்ளியில்
அழகாய் தொடங்குகிறது
அந்த கவிதை…

தொட்டில் சீலை வழியே
தாய் கண்ட குழந்தையாய்
சிரிக்கிறேன் நிலா பார்த்து,

அழுது கொண்டிருந்தவன்
கண்களை துடைத்து
சிரிக்க காரணமான
இன்னொரு பெண்,

அவளின் இன்மையை நிரப்பிவிடுகிற
இன்னொரு பெண் இவள் மட்டும்தான்.

எல்லா இரவும்
அமாவாசை ஆகிவிட்ட போது,
தூரத்தில் தெரியும்
வெள்ளை வெளிச்சத்தை
நிலவென்று நம்பி உறங்கப்பழகிக்கொண்ட
குழந்தையாய் நான்…

நம்புவதற்கும் ஏமாறுவதற்கும்
நிறைய வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது.

குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்