Thursday, May 31, 2012

நீ நாசமாய் போனால் எனக்கென்ன?
நீ நாசமாய் போனால் எனக்கென்ன?

அந்த காகித சுருளுக்குள்
எந்த கருமத்தை எரித்து
நீ சம்பலானால் எனக்கென்ன
 ஆனால் உருவாகும் புகையையும்
சேர்த்து முழுங்கிவிடு
வீணாய் பூமியை மூச்சுத் திணறவிடாதே

விஷம் அருந்தியவனுக்கு ஒரு வலி என்றால்
அதை பார்த்தவனுக்கு மும்மடங்கு வலி...
எங்கள் அருகே அந்த விசத்தை உறிஞ்சாதே

பயன்படுத்தியதை போடத்தான்
எங்கள் பூமியின் குப்பைத் தொட்டிகள்
வீணாய் போனதின் சாம்பலை தட்டாதே
பூக்களைத் தூவத்தான் எங்கள் பாதைகள்
அக்கினிப் பூக்களைத் கசக்காமல் தூவ அல்ல.
உன் சட்டைப்பைக்குள் இடம் இருக்கு காலியாக...

நீ நாசமாய் போனால் எனக்கென்ன?

உன் பற்களின் பாதங்களில்
எந்த கருமத்தை போட்டு மிதித்து
நீ நசிந்து போனால் எனக்கென்ன?

நசிந்து போன இலையின்
மலத்தை சுமக்கும் எச்சிலை
எங்கள் பூமியின் கிண்ணத்தில் துப்பாதே
உன் வயிற்றுக்குள் இருக்கும்
தங்கக் கிணத்தில் சேர்த்துக்கொள்

நீ நாசமாய் போனால் எனக்கென்ன?

Wednesday, May 23, 2012

அதுதானா இது?


உன்னை இரண்டாமுறை பெற்றெடுக்கும்
அது என்றான் அவன்
உயிரோடு  உன்னை சாவடிக்கும்
அது  என்றான் இவன்

வாழவைக்கும் விஷம்
அது  என்றான் அவன்
சாகடிக்கும் மருந்து
அது என்றான் இவன்

எதை வேண்டுமானாலும் புசி,
இதைத் தவிர என்றுகேட்டதை
ருசி  பார்க்க தவித்த
அதாம் ஏவாளின் மனம் போல்
காதலை அறிய தவித்தது என் மனம்...

நம்மை யாரோ கடற்கரையில் பார்த்துவிட்டார்கள்
எனக்கு  கல்யாணம் தயாராகிறது
என்று பயந்து கொண்டிருந்தது ஒரு காதல் 

"இதுசரியாய் வராது, நாம் பிரிந்துவிடுவோம்"
என்று  ஒரு இருதயத்தை அங்கே
நொறுக்கியது ஒரு காதல்...

நண்பனாகத்தான்  உன்னை பார்த்தேன்
என்று இருதயத்தை பிளந்து கொண்டிருந்தது
இன்னொரு காதல்...

நேற்று உன் பைக்கில் யாரவளென்று தொடங்கி
எக்கேடும்கெட்டோழி என்று முடியும்
கோபத் தீயில் கருகிக் கொண்டிருந்தது ஒருக் காதல்

சாதி பணம் அந்தஸ்து
என்ற பாகுபாடுகளின் காலில்
நசுங்கிக்கொண்டிருந்தது ஒரு காதல்...

தன் வயதுக் குழந்தையை தோளில்போட்டு
மீசைவைத்த  அன்னை அவன் தாலாட்டும்
இங்கொரு காதல்...

இதழ் வழி இருதயம் கொடுத்து
இருதயம் வாங்கிக் கொண்டிருந்தது
இங்கொரு காதல்...

கண்களின் வாய் வழி
கண் எனும் போதை மருந்தை
அள்ளி தின்றே உலக மறந்துகொண்டிருந்தது
அங்கொரு காதல்...

கை இதழால் இவன் பேச
பூ மேனி சிலிர்த்தது
இன்னுமொரு காதல்...

கண்காளால் அவன் பேச
வெட்கத்தால்  இவள் விடைகொடுக்க
புது  மொழியின் இலக்கணம்
அரங்கேற்றியது  இன்னுமொரு காதல்...

பைக்கில்  ஒருத்தி பார்க்கில் ஒருத்தி
செல்போனில் ஒருத்தி இடப்புறம் ஒருத்தி என்று
ஏமாத்தி(ந்து) கொண்டிருந்தது ஒரு காதல்...

தீண்டல்களில் ஆரம்பித்து
படுக்கை வரை இனித்து
இருவரையும் சர்க்கரை நோயாளியாக்கி
கசந்து போனது ஆசை தீர்ந்த காதல்...

அவள் தின்று போட்ட மிட்டாய் தாள் தொடங்கி
உதிர்ந்த தலை முடி வரை
பொறுக்கித் திரிந்தது இங்கொரு காதல்...

குட்டி ஆரஞ்சு இதழ் வெட்டித் தள்ளுது,
முகத்திலாடும் முடி என்னை தூக்கிழுடுது
என்று புலம்பிப் போகுது கவிதுவக் காதல்...

இன்று  நானும் அவளும் ஒரே நிறஉடை,
என்னை இன்று அவள் கண் கடந்தது
என்று தூரத்திலிருந்தே ரசிக்கும்
சொல்லத் தைரியமில்லாக் காதல்...

இருதயத்தில் பூட்ட முடியாதது
இன்று தாடிக்குள் புதைந்து கிடக்கும்,
கண்களில் வாழ்ந்த கனவு
கண்ணீராய் வடியும், குறையாது
சுகமென்று  நினைத்து தெரிந்தது
வழியாய் மாறிப் போனது
விடை என்று நினைத்துக்கொண்டது
புதிராகி  குழப்பிபோகும்...
ஒரு  தலைக் காதல்...

இப்படி ஆயிரம் பார்த்தேன்...

இவ்வளவு காதல்  காட்டிய இந்த உலகுக்கு
உண்மைக் காதல் காட்டிட ஆசைப்பட்டேன்... 
மன்மதனின் மலர் கனைக்கு 
மார் நிமிர்த்திக் காத்துக்கிடந்தேன்...

Tuesday, May 22, 2012

இப்படி வேண்டும், என் காதல்


"குட் நைட்"  சொல்லிய பிறகும்
ஒரு மணி நேரம் பேசி...
மூன்று மணி வாக்கில்
பாதி குறுஞ்செய்தி தட்டச்சியவரே
உறங்கிப்போக வேண்டும்
அவள் கொடுக்கும்
ஒரு மிஸ்டு கால் தட்டி எழுப்ப
காலை எழ வேண்டும்...

பெப்சோடென்ட்  தடவிய
டூத்பிரஷ் மென்றுகொண்டிருக்கையில்
நேற்று sms சொன்ன காதலை
அசைபோட்டு சிரித்திட வேண்டும்...
எந்த வண்ணம் அவளணிவாள் குழம்பி
என் அலமாரியை அலங்கோலமாக்கி
அறைக்கண்ணாடியை தினம் அழவிடவேண்டும்...

அவளையும் என்னையும் தூக்கி சுற்றியே
என் காதல் ரதம் boxer 150 க்கும்
தினம் பெட்ரோல் தாகம் எடுத்திட வேண்டும்
சுற்றி திரிபவர்கள் முகங்களில்
அவள் முகமூடி பார்க்க வேண்டும்...

விக்கல் வந்தால்
அவள் தான் நினைப்பதை சொல்லி
நான் அவளை நினைக்க வேண்டும்

பெண்  மலர் அவள் மகரந்தம் தூவிய
கைக்குட்டை கிடைக்க
பொய்யாகவாது நான்கைந்து முறை
தும்மல் வர வேண்டும்...

அவள் தாமதமாய் வருவாள் தெரிந்தும்
மொட்டை மலை உச்சியில்
விரைவாய் போய் காத்துக்கிடக்க வேண்டும்..
அவள் தாமதத்திற்காய் 
பொய் கோபமாய் நடிக்க வேண்டும்
பொய்யென்று தெரிந்தும் அவள்
ஒரு முத்தம் கொடுத்திட வேண்டும்...
விரல்களில்தானா இதழ்களில் இல்லையா
என்று நான் நொந்து கொள்ள வேண்டும்...

சுடுகிற  பாறையில் நோகும்,
உன் பாதத்தை என் நிழலினில்
நான் காத்திட வேண்டும்...
கிடக்கிற மீதி தூரத்தை
என் கரங்களில் உனை சுமந்து
நான் கடந்திட வேண்டும்...

எப்போதாவது  பெய்திடும் மழையில்
அவள் துப்பட்டா குடை போதாமல்
இருவரும் நனைந்திட வேண்டும்...
நேற்றே சொன்னேன் கேட்டாயா
என்று  வருகிற ஒவ்வொரு தும்மலுக்கும்
ஒரு குட்டு அவள் கொடுத்திட வேண்டும்...

அப்போ அப்போ அவள் மடியில்
நான் சாய வேண்டும்...
அவள் பூங்கரம் வருடுகையில்
உலக பாரம் எல்லாம் நான் மறக்க வேண்டும்...

பெண் அவள் கண்ணீரை
எல்லாம்  என் சட்டை துடைத்திட வேண்டும்...
அன்பானவள் பயத்தை எல்லாம்
என் தோள்கள் துரத்திட வேண்டும்...

கண்களால் உச்சரிக்கும்
காதல் தேசத்து மௌன மொழி
நாங்கள் கற்க வேண்டும்...
சொல்ல நான் தவிக்கும் என் காதலை
என் இறுதய புத்தகம் திறந்து
அவள் மொழி பெயர்க்க வேண்டும்...

free hairஇல் அவள் வருவாள் தெரிந்தும்
"உன்  பொஞ்சாதிக்கு வாங்கிப் போ"
என்ற பூக்கார கிழவியின் அந்த சொல்லுக்காய்
ஒரு  முழம் பூ நான் வாங்கி வரவேண்டும்...

பங்குனி வெயிலில்
கடற்கரை மணல் சுடுவதை
நான் உணர மறக்க வேண்டும்...
என் எதிரே என் எதிர்காலம் அவள் இருந்தும்
"ஜோடி பொருத்தம் அருமை"  என்ற சொல்லுக்காய்
அந்தக் கிழவியிடம் கைரேகை பார்த்திட வேண்டும்...
உங்களுக்கு  ஆண்பிள்ளை பிறப்பானென்று
வாழ்த்திய முதியவளின் சொல்லுக்காய்
ராமன் நான் கர்ணனாய் மாறிட வேண்டும்....

ஊரில் உள்ள எல்லா தெய்வத்திடமும்
எங்கள் காதலுக்காய் வேண்டிக் கொள்ள வேண்டும்...
இன்றே நாம் குழந்தை பெயர் பார்க்கனும்
உனக்கு  என்ன பிள்ளை பிடிக்கும் என்று
அவளை தினம் நச்சரிக்க வேண்டும்...
இரண்டானாலும்  எனக்கு சரிதானென்று
அவளை வம்பிழுக்க வேண்டும்...

விடுமுறை  நேரத்தில்
என்னை இந்த சொர்கத்தில்
தனியாய் அவள் விட்டு போகையிலே
நரகம் இது என்று கவிதை பாட வேண்டும்...

அவள் தாய்க்கு இரண்டாவது  செல்லமாக
தந்தையின் அரசியல் வாரிசாக மாறி
அவளை அதிர்ச்சிக்குள்ளாக்க வேண்டும்...
அவள் தங்கையோடு குறும்பு செய்து
அவள் கோபம் ரசிக்க வேண்டும்...

என்  வாழ்கையை 
அவள் என்ற மொழியாலே
புதிதாய் எழுதிட வேண்டும்...
எனக்கு எதற்கு புரிய?
அவள் முழுதும் அருகிலிருந்து
வாசித்துக் காட்ட வேண்டும்...


நான் காதலிக்க வேண்டும்
இப்படி ஒரு காதல் வேண்டும்

Thursday, May 17, 2012

மே 18

[ஓவியம் - விகடன் ]

ரத்தத்தால்  எழுதி முடிக்கப்பட்ட 
ஒரு சகாப்தம்...

வீரம் மடிந்து...
அறம் தோற்று
ஓர் போர் முடிந்தது...
இன்னும் ரத்தம் மட்டும் நிற்கவில்லை
கண்ணீரும் துடைக்கப் படவில்லை...

உலகின் பெரும் போர் குருஷேத்ரம்
என்று இதிகாசம் சொல்லியது...
பேரழிவு கிரோசிமா
என்று  வரலாறு சொல்லியது...
இரண்டையும் அடங்கிய
ஒரு  இனத்தின் அழிவு ...
புதைக்கக்கூட இடமின்றி
அழுகவிடப்பட்ட தினம்...

எந்தக்  கண்ணனும் வந்து நிற்கவில்லை
என் தங்கை பாஞ்சாலிகள்
துயில்  உரிக்கப் படுகையில்...
நய வஞ்சக அரசியல்
நாகாஸ்திரமாய் அர்ஜுனனின்
கழுத்தை குறிவைக்கையில்...

ஆட்டம் தொடங்கும் முன்
பலகையை கவிழ்த்து
காய்களை சாய்த்து
சதுரங்கத்தில் வென்றதாய்
மார்தட்டும்  கோழைகளின் தினம்...

அந்த தேசத்தின்
பெரும்  மக்கள் அடிமைகள்
அனால் மே 18
அவர்களின் இரண்டாம் சுதந்திர தினம்...

உன்  சகோதரன் செவிடன்
ஆனால் உலகத்தவர் இல்லை...
தர்மம் வெல்லும் என்று சொல்லிய தேசம்
அதர்மத்தின் பக்கம் நிற்கும்...
சொல்லாத தேசம் உனக்காய் பேசும்...

உங்கள் உடல்கள்
பாய்ச்சிய  ரத்தங்கள்
விழுதுகளுக்கல்ல வீரத்துக்கு...
நீங்கள் அழிக்கப்படவில்லை...
விதைக்கப்பட்டிருக்கிறீர்கள்
.
தேசத்திற்காக... தேச மக்களுக்காக... வாழும் போது நரகம் அனுபவித்து சுவர்க்கம் எய்திய வீரர்களே, அரசியலுக்கும் அலட்சியத்திற்கும் உணவான அப்பாவிகளே, தங்கைகளையும் தமக்கைகளையும் தாயையும் கூட குருரமாய் பார்க்கும் காமகர்களின் காமத்திற்கு இரையான சகோதரிகளே... கண்ணீர் அஞ்சலி... வீர வணக்கங்கள்

Wednesday, May 16, 2012

Corporate கவிஞன்உன் மனதை புரிந்து கொள்ள
ஒரு KT * கொடுப்பாயா?
உன் இருதய கணினிக்குள்
என்னை அனுமதிப்பாயா?

உன் இருதய தேசத்திற்கு
வரும் என் கனவுக்காகதான்
அந்த காதல் வீசா
என் கன்னத்து விண்ணப்பத்தில்
உன் அனுமதி இதழ் முத்திரை பதி

நீ ஒன்றும் என் RSA டோக்கன்**
எண்கள் அல்ல எனக்கு
60 நொடிகளில் மாறி(றந்து)ப்போக
ஆயுள் முழுதும் நீயே தானடி...
.
excel இல்லாத
மென்பொருள் அலுவலகம் போல்
நீ இல்லாமல் நான் ...  பூமிக்கு பாரமாக

உன் கோபத்தின் டிக்கெட்களுக்கு
என் முத்தங்களில் தீர்வு தருகிறேன்...
உன் கண்ணீரின் டிக்கெட்களுக்கு
என் அன்பாலே தீர்வு தருகிறேன்...
.
உன் முத்தம் முதல் வாளி***
கோபம் கடை வாளி
ஒரே கால இடைவெளியில்
எனக்கு இரண்டும் கிடைப்பது எப்படி?
.
சந்தை சரிந்த நேரத்திலே
வந்த சம்பள உயர்வைப் போல்
என் வாழ்வில் உன் வருகை...

தெரிந்தும்
ஜிமெயில் முகப்புத்தகம் போல்
என் காதலும்
நேரம் இல்லாமல் பார்க்கப்படமாலே அன்று ...
.
இன்று KT களை பயன்படுத்தி  
elearning களை செவ்வனேமுடித்து
காதல் ப்ராஜெக்ட்களில் திறம்காட்டி
உன் காதலனாய் பணியுயர்வை எதிர்பார்த்து...
எனக்கு வரவேண்டியது என்னை சேருமா?

* - Knowledge tranfer. A kind of small training session in a project at software company.
** - RSA is a  security token. which has a digit of no changing for every 60 seconds and which act as password.

***-bucket is the rating given for a worker based on his performance.

Saturday, May 12, 2012

ஆக்கியவளுக்காய் ஒரு ஆக்கம்


ஈரைந்து மாதங்கள்...

முதல் மும்மாதம்
உன்  எடைகூட்டி,
உண்டதெல்லாம் வாந்தியாக்கி,
உணவேதும் இல்லாமலும் எடை கூட்டி,
சோர்வேற்றி உறக்கம் பறித்தேன் ...

இரண்டாவது மும்மாதம்
உடலை  வலிக்கவிட்டு,
விரல்களை மதமதப்பாக்கி,
அடிவயிறு வீங்க விட்டு
புரண்டு  படுக்க தடை இட்டு,
விரல் முகம் கணுக்கால் வீங்கி
உலக அழகி உன்னை உருகுழைத்தேன்...

முன்றாம் மும்மாதம்
வீட்டுக்குள் சிறை வைத்து
வயிறை வீங்க விட்டு
இதயம் எரியிலிட்டு
உறக்கத்தை புடுங்கிவிட்டு
உன் அடிவயிற்றுள் உருண்டேன் நான்...

விஷம் செய்யும் எல்லா
விஷமம் நான் செய்தும்...
விளா எழும்பு உருக்கி
மூச்சையே நிறுத்தி...
உயிரின் விசைகொண்டு
எனை புறம் தள்ளி பெற்றேடுத்தாய்
பத்தாவது மாதம்...

குந்தியின் தேசம் இது...
குப்பைத்தொட்டிகள் இருந்தது...
வறுமையும் விரட்டியும்  பசி மிரட்டியும்
வீசி எரியவில்லை என்னை

கைகேயின்  தேசம் என்று
எழுதி இருந்த வரலாற்றை
திருத்தி எழுதிய கோசலையே
உன்னால் ராமன் ஆனேன் நான்...

பஞ்சத்தில் வறண்ட
உன் பாலை தேகத்து
மார் கள்ளிச் செடி மட்டும்
என்னை வாழ வைக்கும்
தாய்ப் பாலை சுரந்ததெப்படி?

உன்னை  ஒரு நாள்
பிசாசின் பேச்சில் மயங்கி
முதியோர் இல்லம் சேர்ப்பேன்...
தெரிந்தும் பாசத்தோடு தான் வளர்த்தாய்...

என்  எழுத்துக்கள் விலைமதிப்பற்றது
என்று அன்றே தெரியுமா...
விரல் பிடித்து எழுத்தறிவித்தாய்

குழம்பு கூட ஊற்றிக் கொள்ளாத
அடி  பிடித்த சோறு மட்டும் நீ உண்டு
ருசி சேர்த்து எனக்கு பசியாற்றினாய்...

ஆத்திசூடி  சொன்ன "கந்தலுக்கு"
பொருள் தெரியாத வாழ்கையை எனக்கு தந்தவளே
அதன் அர்த்தத்தை உடுத்தி தான் நீ வாழ்ந்தாயே....
 
கிறுக்கித்  தள்ளுகிறேன்
என் மகன் கவிஞனென்று பீற்றிக் கொள்கிறாய்
எதற்கு வீண் செலவேன்று அலுத்துக்கொண்டவள்
என் மகன் வாங்கிக் கொடுத்ததென்று ஊரெல்லாம் பகட்டு காட்டினாய்...

நான் அழுதிருக்கிறேன்...
என் கண்ணீர் கரித்ததில்லை...
காரணம்  நீ...
பசி  என்ற சொல்லை
புத்தகத்தில் படித்திருக்கிறேன்
உணர்ந்ததே இல்லை காரணம் நீ...
பத்து மாதம் வயிற்றிலும்
மீத காலம் வாழ்கையாலும்
என்னை நீ தான் சுமந்து திரிகிறாய்...

உனக்கு தாயாகும் ஒரே ஒரு வரம்
அடுத்தஜென்மம் வரை காத்திருக்க வைப்பான் அந்தக் கடவுள்
தெய்வமேநீ கொடு இந்த வரத்தை இந்த ஜென்மத்திலே...

அவனுக்கு அன்னை மட்டும் இல்லாமலிருந்திருந்தால்
அந்தக் கடவுள் கூட
ஒரு அநாதை இல்லத்தின் வாசல் தொட்டிலில் தான் கிடந்திருப்பான்...
ஆனால்  அநாதையாய் இல்லை...
அங்கேயும்  ஒரு தாய்மை இருந்திருக்கும் காத்திட...
 
இனிய  அன்னையர் தின நல் வாழ்த்துக்கள்

பின்குறிப்பு - கற்ப கால மும்மாத பிரிவுகள் கடினங்கள் பற்றி இங்கே படித்து எழுதினேன்.

oOo 

இணையான கவிதை - தந்தையர் தினம்

oOoFriday, May 11, 2012

ஆண்டிராய்டு தலைமுறை

1 ஜிகா ஹெர்ட்ஸ் வேகத்தில்
டவுன்லோட் செய்யப்பட்ட வாழ்க்கை
அடுத்த வேர்சனில் பக் பிக்ஸ் செய்யப்படும்
நம்பிக்கையில் திருப்தியுடன் ஓடும் தினமும்...

பச்சை சிகப்பு நிறமாய் மாத்திரைகள்
சாப்பாடிற்கு முன் பின் அல்ல
சாப்பாடே அது தான் இங்கு
தண்ணீரில் விழுங்கினால் நேரம் ஆகும்
என்று சுவைத்து சாப்பிடும்
மிட்டாய் ரகம் சந்தையில் புதுசு...

தாலாட்டு பாட ஒரு ஆப் இருக்கு
அதன் டவுன்லோட் ஆப்பரில் பாசம் இலவசம் நமக்கு
பேரனுக்கு கத சொல்ல சிமுலேட்டட் பாட்டி
கிராமத்து சமையல் முதல் ரகசிய மூலிகை மருந்து வர
யூடுபில் ஸ்ட்ரீம் ஆகுது ...
முதியோர் இல்லம் நிறைக்கும் பெற்றோர் எதுக்கு
என்று கொள்ள துணிந்த கூட்டம் இது...

O3 கூர் பிளந்து
வேதியல் பலாத்காரத்தில்
ஆக்சிஜென் தயாரிக்கும் கடை இருக்கு
புது தண்ணீர் இல்லை என்றால் என்ன
அழுகிப் போன திராட்சை ஒழுகிப் போன
சாராயம் இருக்கு உன் தாகம் தீர
ஒரே ஒரு முறை
உன் கருவிழி அலகிட்டால் போதும்
உன் வங்கிக் கணக்கு ஒரு லட்ச ரூபாயில்
உன் பெயரில் செவ்வாய் கிரகத்தில் ஒரு ஏக்கர் இருக்கு
அப்புறம் இந்த நாசமாய் போன பூமி பற்றி கவலை எதற்கு
என்று குப்பை மேடாக்கும் தலைமுறை அது...

உனக்கு தம்பி வேணுமா
பாப்பா வேணுமா என்கிறாள் தாய்
xx க்கிரோமோசோம்க்கு
torrent இல் seeders இல்லை
பாப்பா தான் என்று சொல்ல சொன்னான்
கணவன் கணினி முன் உட்கார்ந்து கொண்டு...
நுட்பம் அதிகமாகிய தலைமுறை அது...

இருதய os களில்
துணை என்னும் அப் கோளாறு செய்தால்
non compatible version
என்று எளிதாய் துடைத்துக்கொள்ளும்
ஆறறிவு சந்ததி அது...

அன்பு என்றால் ...
எந்த forum இலும் தெளிவான
பதிலில்லை, ஒரு நிமிடம்
யாஹூவின் பதிலை பார்க்கிறேன் என்றும்
அணுவை பிளக்கும் அசத்தியம் தெரிந்தவனிடம்
136 - 36 கேட்டால்
ஸ்டார்ட் மெனுவில் கணிப்பான் தேடும்
புத்திசாலி தலைமுறை...

எல்லாம் இருப்பதாய் பீற்றிக் கொண்டு
ஒன்றுமே இல்லாது வாழும் பிணங்கள்
அது ஆண்டிராய்டு தலைமுறை

அன்பே அச்சாணி, பிசராத பயணத்திற்கு
என்று கேட்டு வளர்ந்த தலைமுறை
அச்சாணி புடுங்கிப் போட்டுவிட்டு
போகும் பயணமாகிவிடக்கூடாது நம் எதிர்காலம்

Tuesday, May 8, 2012

பேருந்துக் காதல் - IV

|பேருந்துக் காதல் - 1 | 2 | 3 | இரயில் காதல் - 1 | 2

ஐந்து  நிமிடம் 
அரை நொடி போல் முடிந்து போன 
அந்த பேருந்து பயணத்தில் 
என் மொத்த வாழ்கையும் 
வாழ்ந்துவிட்ட நிறைவு...

என்  இருதயம் போல்
காலியாக என் இருக்கையும்...
என் இருதயத்திலும் இருக்கையிலும் 
இடம் பிடித்தாள் அவள்...

நீலகண்டனின் நெற்றிக் கண்ணில்
எரிந்து போன நக்கீரரை 
மீண்டும் எழுப்பி அவள் கூந்தலில் 
இயற்கையிலையையே மணமுண்டு என்று 
வம்பிழுக்கும் ஆசை கொண்டேன்...
மோதிப் போன உந்தன் கூந்தல் முகர்ந்த பின்னே

முதல்  முறை இந்திய சாலைகளின்
அருமை உணர்ந்தேன்...


பற்றாமல்  உரசி வந்தோம்
பஞ்சும் நெருப்பும்...
விலகி அவள் போன பின்பு
பற்றி எரியும் காதல் உணர்ந்தேன்...

பெருந்துத்  தரையின் அதிர்வில்
என் இருதயமும் அவள் இருதயமும் மோதிக்கொள்ள
என் எண்ண சுனாமி எழுந்து
இழுத்து செல்லுது என்னை கனவுக் கடலுக்குள்...


இறுதி வரை உன் முகம் பார்க்கவில்லை
அனால் நீ விட்டுசென்ற வாசம் சொல்லியது
உன் முகவரி முழுதாய்...

 இது வரை வெட்டியாய் மட்டுமே இருந்த
என்டெய்லி ஸ்க்கெடுலில்
6:14 pmல் இந்த பேருந்து பயணத்தை
சேர்த்துவிட்டு  போனாள்...

இரயில் காதல் - 2

பேருந்துக் காதல் - 1 | 2 | 3 | இரயில் காதல் - 1


  உறக்கத்தை RAC பயணம் புடுங்கி கொண்டு போக...
உயிரை, அழகி அவள் புடுங்கி போனாள்...

கருப்பு நிலவோ! கரிய தங்கமோ?
இப்படி  கருப்பு உவமைகளைத்
தேட  வைத்த கருப்(பு அழகி)பி அவள்

சன்னலோரத்தில்  அவள் இருக்க
இரவு நேரத்தில் வேடிக்கை பார்த்த
முதல் அசடு நான்...

TTR கேட்ட அடையாள அட்டைக்கு
உன்னை விரல் நீட்டி கட்டுகிறேன்...
என்  அடையாளம் நீயாகிப் போனாய்...

இரயிலின் நித்திரைப் பெட்டியில்
மெத்தை இருக்கை தானே!!
அதை முள் படுக்கையாக்கிப் போனாள்...நான் உறங்க தன் இடத்தை கொடுத்துவிட்டு
தூக்கத்தை  தூக்கிக்கொண்டு போனால் விழுப்புரத்துக்காரி...

இரவு  முழுக்க
ஒரேக் கவிதையை
திரும்பத் திரும்ப படித்தேன்...
ஏனோ அவள் போன நொடியில்
மறந்து போனதை உணர்ந்தேன்...
நெஞ்சம் கனத்தது பிரிவில்...


பின்குறிப்பு : நல்ல வேளையாய் நான் ரசித்து வந்ததை அவள் தந்தை பார்க்கவில்லை... பித்தன் போல் தனியாய் சிரித்து ரசித்ததை அவள் பார்க்கவில்லை... இன்னும் அவள் இந்த கவிதை படிக்கவில்லை... இதில் எது நடந்திருந்தாலோ! நடந்தாலோ நான் தொலைந்தேன்...

Monday, May 7, 2012

நீ இல்லாத இடத்தில்


அங்கு  காலியாக இருந்தது 
உன் இருக்கை மட்டுமல்ல 
என் வாழ்க்கையும் தான்...

என்னைக் காயப்படுத்த நீ 
அந்த இடத்தில் இருக்கவேண்டிய அவசியமில்லை
உன் இன்மை தான் என்னை அதிகம் காயப்படுத்தும்

நரகம் எது என்று என்றாவது 
உன்னிடம் கேட்டேனா நான்...
பின் எதற்கு நீ இல்லாத இடம் அது என்று 
எடுத்துக்காட்டோடு விளக்கம் எதற்கு?

உனதை சேர்த்து இரு உயிர் நான் சுமந்தும்
நீ இல்லாத இடத்தில் பிணம் தான் நான்...

என் இசைப்பட்டியலை காதலால் நிரப்பியவள்
இன்று என் சோகத்தால் நிரப்புகிறாய்...

உன்னால் என் வாழ்கை பலருக்கு
ஆச்சரிய குறியாயிற்று...
இன்று எனக்கே கேள்விக் குறியாயிற்று


விடை நீ என்று தெரிந்த பிறகு
குழப்பும் புதிரானேன் நான்...
அவிழ்த்திட  வா...


குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்