Tuesday, May 28, 2013

என்னை மன்னிப்பாயா?

மன்மத கணை
பூ கணை என்று நினைத்துதான்
உன் மீது எய்தேன்…
கணை உன் இருதயம் காயபடுத்தும்,
தெரியாமல் இருந்துவிட்டேன்.
என்னை மன்னிப்பாயா?

0

தேன்கூடாகத்தான்
நம் காதலை
இதயத்தில் கட்டினேன்…
என் இம்சை தேனீ.
கொட்டும் என்பதை மறந்துவிட்டேன்.
என்னை மன்னிப்பாயா?

0

ரோஜாக்கள் என்றெண்ணி தான்
என் கவிதையை
உன் பாதையில் கொட்டினேன்.
என் பேனா முட்கள்.
குத்தும் என்பதை மறந்துவிட்டேன்.
என்னை மன்னிப்பாயா?

0

நீ ரசிக்க, ரசித்து சிரிக்க
காத்தாடியாக உன் வானத்தில்
பறந்து வந்தேன்…
மாஞ்சா கயிறு கழுத்தறுக்குமென்று
நினைக்கவில்லை.
என்னை மன்னிப்பாயா?

0

நீ இன்னொரு வானத்து நிலா
நான் நிலா ரசிக்கும்
பிள்ளையாய் பிறந்து(தொலைந்து)விட்டேன்.
என்னை மன்னிப்பாயா?

ஈரமில்லாத மழை – 3



இடி மட்டும்
விழுந்து கொண்டே இருந்தது
மழை வரவும் இல்லை…
இடி தாக்கிய மரம் மீண்டும் தளிர்க்கவும் இல்லை

o + o + o

ஓங்கி பெய்த மழை ஓய்ந்ததும்
எல்லோரும் நகரத் துவங்கினர்…

அவர்கள்  விட்ட குடை
அவர்கள் நினைவிற்கு வரவே இல்லை…
அடுத்த மழை வரும் வரை

o + o + o

வானவில்லும் வேண்டுமென்கிறாய்.
மழையையும் பிடிக்காதென்கிறாய்!

o + o + o

எந்த மேகம் மழை மேகமென்று
அந்த மயிலுக்கு மட்டும் தெரிகிறது..

என்னை சரியாய்
மொழிபெயர்த்துவிடுகிற அவளை போல…

பல நேரங்களில்
தோகை விரித்த மயில்
ஏமாந்து போகிறது… ஏமாற்றப்படுகிறது.
அந்த பொய்யை நம்புவது தான்
மயிலுக்கு நல்லதென்கையில்
மேகம் மயிலை ஏமாற்ற யோசிப்பதே இல்லை

o + o + o

மழை நிற்கபோகிறதென
தெரிந்த பிறகு
மழையை ரசிக்க பயமாய் இருக்கிறது…
நாளை மழை கேட்டு அடம்பிடிக்கும்
என்னை எதை காட்டி ஏமாற்றுவது…

o + o + o

மழை வர காத்திருந்தவர்கள்
இன்று நிற்க காத்திருக்கிறார்கள்…

ஈரமில்லாத மழை – 1 | 2

Wednesday, May 22, 2013

எதுவேண்டுமானாலும் நடக்கலாம்

இன்னும் 20 வருடத்தில்
எதுவேண்டுமானாலும் நடக்கலாம்

எந்தவேறொரு இனமும்
இல்லாது போய்விடுமெனில்
இனி தேசிய விலங்கு மனிதன்
தேசிய பறவை மனிதன்
தேசிய மரம் மனிதன்
என்று அறிவிக்கப்படலாம்

எந்தவொரு இடமும்
இல்லாது போய்விடுமெனில் 
காலை தொலைக்காட்சியில்
சென்னைக்கு மிக அருகே வெள்ளி கிரகத்தில்
2 சதுர அடி வெறும் 25 கோடி
நடிகைகள் விளம்பரம் செய்யலாம்…

எந்தவொரு உணவும்
இல்லாது போய்விடுமெனில்
மனிதன் மனிதனையே
அ(பி)டித்து தின்ன துவங்கலாம்

போகும் கண்டமெல்லாம் குப்பை
பார்க்கும் திசையெங்கும் பாலிதீன் புழுதி
சுவாசிக்கும் காற்றுகூட நஞ்சு
குடிக்கும் நீருக்கு கூட காசு என்று மாற்றி 
எதை நோக்கியோ ஓடுகிறானே மனிதன்
அதை வென்றுவிடலாம்…

ஆறறிவின் அட்டூழியம் தாங்காமல்
மற்ற ஜீவன்கள் சுதாரித்து
மனித இனத்தை துரத்திவிட்டு
பூமியை காப்பாற்றிவிடலாம்

ஆறறிவு இருந்தும்
முட்டாளாகவே இருக்கும் மனிதன்
திடிரென்று ஞானோதயம் கொண்டு
மற்ற ஜீவன்கள் வாழவும் வழிசெய்யலாம்
பூமியை வருங்காலத்திற்கென மிச்சம் வைக்கலாம்

இன்னும் 20 வருடத்தில்
எதுவேண்டுமானாலும் நடக்கலாம்
அந்த இருபது வருடமே இல்லாமல் கூட போகலாம்

Tuesday, May 21, 2013

அடடே ஆச்சரியக் குறி – 5


நீ, சயனைடு நதி
நான் உன்னில் வாழப்பழகிய மீன்.
நம் காதல் மரணம் வெல்லும்.

நீ, வற்றா நதி
நான், தீரா தாகம்.
நம் முத்தம் முற்றாமல் நீளும்

நீ,  நிஜம்
நான் கனா.
நான் நீயாகிறேன். காதல் நாமாகும்.

நீ, இனி நான்.
நான் எப்போதோ நீ.
இன்னும் இதழ்கள் நான்கு எதற்கு?

சில ஜோடிகள் சொர்க்கத்தில் உருவாகின்றன
சில ஜோடிகள் சொர்கத்தை உருவாக்குகிறார்கள்
நாம் சொர்கத்தை உருவாக்கும் ஜோடி


அடடே ஆச்சரியக்குறி – 1 | 2 | 3 | 4

Saturday, May 18, 2013

தண்டசோறு


என்னை தண்ட சோறு
என்று திட்டியவர்களுக்கு தெரிந்திருக்குமா?

யாரோ குடித்துவிட்டு போட்டு போன
பாட்டில்களுக்கு நான் கர்தாவாகாமல் காரணம் மட்டுமானது
“கீழ் வீட்டு பெண்ணை காணவில்லையாம்” என்றதும்
அவனாகத் தான் இருக்கும் … என்று என் பெயர் அடிபட்டது
“வேலைக்கு போகலாம்ல, காசோட அருமை தெரியுதா” என்றவர்க்கு
தெரிந்ததால்தான் ஆறு ரூபாய் டிக்கெட் மிச்சமாக்க
10 கிலோமீட்டர் நடந்தது

என்னை தண்ட சோறு
என்று திட்டியவர்களுக்கு தெரிந்திருக்குமா?
.
நான் பக்கத்து வீட்டு குழந்தைக்கு
சோறு ஊட்டுகையில் பூச்சாண்டியாக பயன்பட்டது…

என்னை தண்ட சோறு
என்று திட்டியவர்களுக்கு தெரிந்திருக்குமா?

இந்த தண்ட சோறு(கள்) தோற்காமல்
அவர்கள் வென்றிருக்கவே முடியாதென்று

ஈரமில்லாத மழை – 2


அவளுக்கு சேராது என்று தெரிந்தபின்
அந்த மழை பொழியவே இல்லை…

என்றாவது பெய்யும் மழையால்
அவள் காய்ச்சல் கொண்டால் கூட
அந்த மழைக்கு பின்னான வானவில்
சாயம் இல்லாமல் தான் இருந்தது…

# o # o #

சாரல் துளியின் கணம் தாளாமல்
உதிரும் என்று தெரிந்தும்
அந்த மலர் மழை ரசித்து கொண்டிருந்தது
உதிர்வதின் வலி சுகம் என்பது
மலர் தவிர்த்து யாருக்கு புரியும்…

# o # o #

போன முறை
அவன் ரசித்துகொண்டிருக்கையில்
சட்டென்று நின்ற மழை
இந்த முறை மீண்டும் வந்திருந்தது
ஆனால் ரசிக்க அவன் இல்லை அங்கே
அவன் இருக்க போவதில்லை எங்கயும்…

# o # o #

நிமிடத்தில்
அந்த குழந்தை சிரிப்பை எடுத்துக்கொண்டு
ஓடிப் போக போகிற
அந்த மழை
ஓங்கி பெய்து கொண்டிருந்தது…
இது தெரியாமல் அந்த குழந்தை
சிரித்து விளையாடிகொண்டிருந்தது மழையில்

# o # o #

மேகத்தில் பிறக்கிற “அதே மழை”
மண்ணிற்கு வருவதில்லை
என் இருதய வார்த்தைகளும் கூட…

# o # o #

நான் மழை.
நீங்கள்
என் கண்ணீரை ரசிக்கும் வரம் பெற்றவர்கள்

ஈரமில்லாத மழை – 1

ஈரமில்லாத மழை - 1

நனையாமல் எல்லோரும்
குடை பிடித்துக்கொள்ள
கொட்டுகிற மழை கண்ணீர்.
அவள் இருதயம் குடை பிடித்துக்கொள்ள
என் காதலும் கூட மழையாய் அழுதது…

திட்டும் அம்மாக்கு தெரியாமல் சன்னல் வழி
மழை அள்ளி குழந்தை ஒன்று விளையாட
மழை சிரித்தது… நானும்…
அவள், என் இருதயம் வைத்து விளையாடும் குழந்தை…

# o # o #

மழைக்கு தெரிவதே இல்லை
அதனால் உயிர்கொண்ட பூக்கள் பற்றியும்
அதனால் உதிர்ந்த பூக்கள் பற்றியும்

# o # o #

நனைத்தது மழையின் குற்றமும் இல்லை…
நனைந்தது என் குற்றமும் இல்லை…
காய்ச்சல் தண்டனையாவது ஏனோ?
காதல் காய்ச்சல் எனக்கு…

# o # o #

மழையும் நானும் அழுகிறோம்…
யாருக்கும் தெரியாமல்
எல்லோரையும் மகிழ்வித்து
மழையும் நானும் அழுகிறோம்…

# o # o #

குடை பிடித்து போகிறவர்களே
இது தான் கடைசி மழை…
தெரிந்து தான்
குடைக்குள் போகிறீர்களா?

# o # o #

பங்குனி இரவில்
கனவினில் வரும் மழையை
யாரால் தடுக்க முடியும்…
நான் கொண்ட நினைவை போலது…
என் இரவெல்லாம் தூறுது…

# o # o #

மழை சுதந்திரம் யாருக்கு இருக்கு?
நினைத்தவுடன் அழுதிட முடிவதில்லை

முடியா முடிச்சு


தாகம் எடுத்தவன் கண்ணில்
தடாகம் சிக்குகிறது…
யாரையும் நெருங்க விடாமல்
தடாகம் சுற்றி வேலி போட்டுகொண்டு
இறங்கி குடிக்கத்தொடங்குகிறான்…
தடாகம் தீர்கிறது…
தடாகங்கள் தீர்கிறது…
தாகம் மட்டும் தீர்ந்ததாய் தெரியவே இல்லை…

+ o + o +
சட்டென்று அடைத்து
உட்புறம் தாழிடப்படும் கதவுகள்

உள்ளே நுழைய அனுமதி இல்லை என்றோ
உள்ளே நுழைய அனுமதி இல்லாதவர் எவரோ
நுழைந்துவிட்டனர் என்றோ

சொல்லிவிட்டு சட்டென்று மூடிக் கொள்கிறது

 
+ o + o +
தன் கனிகள் அடிக்கடி திருடுபோவதாய்
கனிமரம் ஒன்று அழுது கொண்டிருந்தது…

அதன் கண்ணீர் பற்றி யாருக்கும் கவலையில்லை?

அடிக்கடி திருட்டு போகும் கனிகள் என்றால்
இந்த மரத்தின் கனிகள் எவ்வளவு சுவையோ!!
என்று எல்லா திருட்டு புத்தியும் கணக்கு போட்டது

கனிமரத்தின் கண்ணீர் நிற்கவும் இல்லை
கனிகள் திருட்டு போவது நிற்கவும் இல்லை
இங்கே ஏகப்பட்ட கனி மரங்கள் மட்டும்
முளைத்து கொண்டே இருந்தது…
+ o + o +
உள்ளே ஒரு பூனை
குறுக்கும் நெடுக்கும் அலைகிறது…

போகும் வழியில் பாலை தட்டிவிட்டு
குடித்து கொள்கிறது…

மீண்டும் குறுக்கும் நெடுக்கும் அலைகிறது

மீண்டும் அதன் வழியில்
பால் நிரம்பிய செம்பு ஒன்று…
மீண்டும் பாலை தட்டிவிட்டு குடித்து கொள்கிறது

மீண்டும் குறுக்கும் நெடுக்கும் அலைகிறது
பாலை திருடியதல்ல குற்றம்
பாலை அங்கே வைத்தது குற்றம்
பூனையை அலையவிட்டது குற்றம்


பின்குறிப்பு - இரவு எவ்வளவு சொல்கிறது… அதை கேட்காமல் உதாசினப்படுத்திவிட்டு எப்படி உங்களால் உறங்க முடிகிறது…

Friday, May 3, 2013

சர்க்கரை வலி

பால் குடிக்கையில் பிள்ளை
மார் கடிக்கும் தாயின்பம்
 
உறங்கிய தந்தை முதுகில்
குதித்தாடும் பிள்ளை பாதம்
 
தந்தை முத்தம் நடுவே
குறும்பு செய்யும் மீசை
 
கொட்டும் மழை நடுவே
சுண்டி இழுக்கும் ஐஸ் வண்டி மணியோசை 
 
மறந்து போன கனவை 
மீண்டும் பார்த்துவிடும் ஆசை
 
கட்டெறும்பு முத்தமிட்ட கண் இமை
சொல்லி விளக்க முடியாத சயனைடு சுவை…
 
காதலித்ததுண்டா?
காதல் வலி கொண்டதுண்டா?
எல்லோரும் ரசிக்கின்ற வலி
காதல்…நானும்…

குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்