Monday, June 25, 2012

பதில் தேடி

உன் என் தோழிகள்
உன்  வயதுக்காரிகள்
பத்திரிகை நீட்டையில்
உன் வீட்டு சாப்பாட்டு மேசையில்
மீசைக்கார மேகம் மிரட்டலுடன்
வரன் மழை போழிமோ? என்று...

பக்கத்து வீட்டில் பல்லு போன பாட்டி
பத்து பதினாறு பேரன் பேத்திகள்...
உன் வீட்டிலும் ஒரு பாட்டி
உன் வயிற்றுப் பிள்ளை வழி
தனது ஐந்தாம் தலைமுறையை
பார்க்கவென உயிரை எமனுக்கு
தர மறுத்துக் கிடக்குமோ? என்று...

கல்யாண வீடுகளில்
தேவதைகளின் தாய் காதுகளில்
ஆண்டி  பூதங்கள்
அமெரிக்காவில் அவள் மகன்
ஆஸ்திரேலியாவில்  இவள் மகனென்று
சொல்லும் கதை கேட்டேன்...
உன் தாயின் காதுகளில்
எந்த குந்தானியாவது
உனக்கு திருமணம் நிச்சயித்திருப்பளோ? என்று...

தினம் என் நாளத்தில்
நடந்தேறும் பூகம்பங்கள் என்னவென்பேன்...
மார்பின் இடப்பக்கம் பதமாய்
இறங்கிடும் ஆயிரம் வோல்ட்டை என்னவென்பேன்...

வார்த்தைகள் வர்ணித்திடா வலிகளை
சுமந்து திரிகிறேன்...
வாழ்க்கை தூரத்தை கண்டு
திகைத்து நிற்கிறேன்...


Sunday, June 24, 2012

கண்ணீர்

 


அச்சோ! எறும்பு கடிச்சுருச்சா?
செல்லத்துக்கு பசிசுருச்சா?
என்று தாய்க்கு மட்டும் 
உண்மை அர்த்தம் புரியும் 
மழலைக் கண்ணீர்...

கருவிழி வாயிலிருக்கும்
தண்ணீர்  பற்களால் சிரித்து 
பெரும் மகிழ்வை சொல்லும்
ஆனந்தக் கண்ணீர்...

வராத கண்ணீரால்
அவன் பெற்றோரால்முடியாததையும்
முடிக்க வைக்கும் காதலியின் கண்ணீர்...

நெடுந்தொடருக்கு தொடங்கி
படும் துயருக்கும் கொட்டும்...
செல்ல நாயின்  மரணம்  தொட்டு
உடையும் காதல் வரை சொட்டும்
இளகிய பெண் பூக்களின் கண்ணீர்.

இரவுகளின் தனிமைகளில் 
இருதயம் முழுக்க ஒட்டி நிற்கும் 
அவள் நினைவை கழுவி போக்க 
நினைத்து தோற்கும் ஒருதலைக் கண்ணீர்..

மத மாதம் மணி ஆர்டரில் வரும் 
"மகனின் அன்புள்ள அம்மாவிற்கு"
கடிதத்தில் பணக்கற்றைகளில் 
எங்காவது மகன் அன்பு ஒளிந்திருக்குமா? 
தேடி எங்கும் முதியோர் இல்லக் கண்ணீர்...

திரும்ப வருவது உத்தேசமில்லை 
வந்தாலும்பார்க்கப் போவதுமில்லை 
இருந்தும் எல்லோரும் தயக்கமின்றி 
எழுதிப்  போகும் மொய் 
ஒப்பாரிக் கண்ணீர்...

வெறும்உப்பு நீர்...
ஆனால் மனிதம் அறிந்த 
ஒரே  பயங்கர ஆயுதம் ... கண்ணீர்...


Saturday, June 23, 2012

"பேய்"வீகக் காதல்

பேய் தான் என் காதலி
அவளுக்காய்
பொய் கலவா கவி வரி...

மரணத் தாயின் கல்லறைக் கருவறையில்
அதிக நாள் உறங்கினாயோ?
உந்தன் அழகு கூந்தலை
ஒட்டடை பூக்கள் மேலும்மெருகேற்றுது...

மரணம் என்ற எதிர்காலம்
காதலின் சாயலில்
உன் கண்களில் தெரியுது...

மரணத்தால் ஊமையான
இரு துளை புல்லாங்குழல் உன் நாசி...
வராத இசையும் எனை வசிகரிக்குது...

குருதி  ருசிபார்த்த கறைகளின்

சுவடுகள் உதடுகளில் இருக்குது
இருந்தும் உந்தன் முத்தம் தென் சுவைதான்...
இது உண்மையிலே அசைவ முத்தம் தானே

ஆயுள்  முடிந்த பிறகு கடந்த ஆண்டுகளால்
உன் அழகை ஒன்றும் செய்ய முடியவில்லை...
உன்னை சித்தன்ன வாசலோவியம்
என்று வடித்த கவிதையை திருத்திக்கொண்டேன்...


நீ  எந்தன் சாதி தான்
இருந்தும் நாம் செய்யப் போவது
கலப்புத் திருமணம் தானே?

மரணங்களில் சேரப் போகும்
ஒரேக்  காதல் நமதாகும்...

இருவேறு உடல்களில்
ஒற்றை உயிர்களாய் வாழ்கையில்
பொய்த்துப் போகும் காதல்களுக்கு மத்தியில்
இருவேறு சவப்பேழைக்குள்
உயிர்  வாழும் நம் காதல்
ஆண்டுகள் தாண்டி...

Sunday, June 17, 2012

சோலைமலைகளுக்கு ராமானுஜங்கள் எழுதுவது


திருமணத்தில் உங்களுக்கு அழகே
இது தாங்க என்று அன்று அம்மா
ஆசையாய் சொல்லிய மீசையை...
முத்தவேளையில் எனைக் குத்தும் என்பதற்காய்
வெட்டிக் கொன்றாயே...
அந்தக் கொலையில் உன்னுள்ளும்
தாய்மை உயிர்த்ததட...

90 மதிப்பெண் நான் எடுத்த போது
10 மதிப்பெண் எங்கே என்று நீ அரட்டியதை விட
என் மகன் 90 எடுத்தான் என்று
உன் கூட்டாளிகளிடம் பீற்றியது தான்
அதிகம் என்று நானறிந்தேன்...

நீயாய் நீச்சலடித்து வந்தால்
மேலே வா இல்லை உள்ளே போ
என்று நீ தூக்கி எரிந்தபோதும்...
என்  பின்னாலேயே நீயும் உள்குதித்து
நான் தத்தளித்து நீந்த பழகியதை
நீ ரசித்ததை என்று நானறிந்தேன்...

கண்டபடி காகிதங்களில் கிறுக்கி
குப்பைக்கு பொய் கொண்டிருந்தது
இப்படிக் கவிதைகளானது
உன்னால் தானே  என்று நானுணர்வேன்...

ராமானுஜம் என்றால்
இஸ்திரிக்கப்பட்ட உடை,
மாதம் ஐந்து இலக்க சம்பளம்,
கவிஞன் ஓவியன் என்று
தெரிந்த உலகத்திற்கு

அதன் பின்னால்
அழுக்கு உடை
அள்ளி சுமக்கும் மூட்டை
பள்ளி தாண்டாத சோலைமலை இருந்தான்
என்று எப்படி உணர்த்துவேன்...

நான் வெள்ளிக் கரண்டி
இல்லாமல்  பிறந்த
சோலைமலையின் வாரிசு
ஆனால் எந்த வெள்ளிக் கரண்டியும்
தந்திருக்க முடியாது இந்த சுகமான வாழ்கையை...

இன்றும் நம் பெயர் என்பது
வெறும் வார்த்தை தான்
அவன்  பெயர் பின் இல்லாமல் 
அர்த்தம் அதற்கில்லை...

அவன் நமக்காய் இழந்தவைக்கு
இழப்பிடு ஈடு செய்ய முடியாது...
உழைத்து ஓய்ந்தவனுக்கு
கொஞ்சம் இளைப்பாறல் கொடுக்கலாம்...

இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்.

 #O#

தந்தையர்  தினக் கவிதை - v 2011 

#O#


Wednesday, June 13, 2012

மகாபாரதத்துடன் ஒரு தர்மயுத்தம் - 1


அடுத்தவன் மனைவியை
தொட்டால் கேட்டாய்
என்று சொல்லத்தானே
ராமயானத்தில் ராவணன்
பத்து தலை இருந்தும் செத்து வீழ்ந்தான்...

உலகம் அறிய எழுதியதை
உலகம் அறிந்த கணபதி
அறியவில்லையோ? அறிந்திருந்தால், 
ஒடிந்த  அவனது தந்தம்
தந்திருக்குமா துச்சாதணனை?

சூதால் கவ்வப்பட்ட தர்மம்
கூர் பற்களில் உயிரிழக்கும்முன்
தப்பி  வந்து சூதின் வேரறுக்கும் 
என்று சொல்ல 18 நாள் போர் வேறு...

காக்க வேண்டிய கடவுள்
ஏற்படுத்திய அழிவுதானே அது...
கண்துடைப்பாய்  நிலைநாட்டப்பட்ட நியாதி...

துச்சாதணனை கெட்டவனாக படைத்து
பின் நியதியை காக்கும் தன் நாடகத்திற்கு
பலி கொடுக்கும் கயமை தெய்வீகம்
என்று அழைக்க சொல்லும் மடமையோ?

ஒரு  படைப்பில் தான் செய்த பிழையை
இன்னொரு படைப்பால் சரிசெய்து கொள்கிறாய்
ஆனால் அதற்காய் வீணாய்
படைப்பின் தர்மம் உன் தவறென்னும்
சூதின் வாயில் தானே இறந்து கிடக்கு?

பின்குறிப்பு  - காயப்படுத்த எழுதியதல்ல... கடவுள் என்னும் பெயரில் சாயம் பூசப்பட்டிருக்கும் உண்மையை வெளி கொண்டு வர எழுதப்பட்டது...

Monday, June 11, 2012

சாரல் சிதறல்


பிறந்த வீடு பிரிந்து
புருஷன் வீடு போனவ
தலை பிரசவத்திற்கு தாய் வீடு
வந்தப்ப நிறைமாதத்திலும்
தோழி என்ன பார்க்க ஓடி வந்தா
ஆவியாகி மேகமாகி தூறி
ஊற்றாகி அருவியில் ஊற்றி
பள்ளம் தேடி ஓடி வரும்
இந்த மழையப் போல...

#.#.#.#.#.#

பங்குனித் திருவிழாவிற்கு
விடுமுறையில் வந்தவன்
படிச்ச பள்ளி போய்
பச்சை ரிப்பன்காரிய நினச்சு
காதல் வரி எழுதிய
தேக்கம் மேசை தடவியது போல்
உச்சாணி தொட்டு
என் அடிப் பாதம் வர
இச்சென்ற சத்தம் இல்லாத
முத்தம் தரும் அந்த மழ...

#.#.#.#.#.#

மேகம் விசித்திர சலவக்காரி
இவ அடிச்சு இடிச்சு
துவச்சப்புறம் தான்
இந்த வானம் கிழியாமல்
ஏழு வர்ணத்தில் சாயம் ஏறும்

#.#.#.#.#.#

தென்றல் மருத்துவம்
கொளுத்த மேகத்தை
மாதம் மும்மாரி ஓடச் சொல்ல
சோம்பேறி மேகம்
வருடம் ஐந்தாறுமுறை ஓடிப்பார்க்க
குறையும் அதன் வியாதி
மழை வியர்வையாய்

#.#.#.#.#.#

மழை என்ன பெண் சாதியா
என் மேல் விழுந்து
என்னுள் பார்த்த ரகசியத்தை
இப்படி ஊருக்கெல்லாம் சொல்கிறது
என் உடை நனைத்து

#.#.#.#.#.#

அந்த மேக பேனா
மையை சும்மா கொட்டிவச்சாலும்
அது ஓர் எழுத்தில்லா கவிதை
என்கிறது அழகிலக்கணம்...
அதை மழை என்னவளிடம் தான்
கற்றிருக்கும் என்கிறேன் நான்... 

காத்திருந்து காய்ந்து போவோம்

தங்கம் மண்ணில் கிடக்கும் 
வெறும் உலோகம் வகை
என்றுமட்டுமே அறிந்த உலகம் அது
.
காசுகளை பார்த்தால்
காகிதங்கள் என்று மட்டுமே
சொல்லத் தெரிந்த தேசங்கள் அங்கே
.
கிரகம் முழுக்க
பலர் பசியின் வாசல் பொய்
மரணத்திற்கு விருந்தாகும் வேளையில்
.
சிலருக்குத்தான் சிக்குகிறது 
கொளுத்த தங்க முட்டையிடும் சேவல்
அறுத்து சமைத்து ருசி பார்க்காமல்
தினம் முடிவில் குண்டுமணி அளவிளிடும்
தங்கத்திற்காய் காத்துத்தான் கிடக்கிறார்கள்
ஒரு சானை பசிக்கப் போட்டு...
.
முட்டையிட்டு முட்டையிட்டே
அந்த சிகப்பு கொண்டைக்காரி
காணமல் கரைந்து போகிறாள்...
இப்பொழுதான் பசியை உணர்ந்தவர் போல்...
குத்தி கிழித்து பற்றி இழுக்கும்
பேய் நகம் கூர் தீட்டி
ஒற்றைக் கடியில் ஆழம் பாய்ந்து
உயிரின் உள்ளே உறங்கும் சாரையும்
வெளி எடுக்கும் பற்களை பதம் பார்த்து
பாய்ச்சுகிறார்கள் செல்லாமல் மிஞ்சி இருக்கும்
தங்க முட்டைகளின் மேல்...
.
பாவம் பதம் பார்த்ததும் வீண்
கூர் தீட்டியதும் வீண்...
பசியிக்கே ருசியாகிப் போகிறார்கள் சிலரும்...
கவிஞர் லதா மகன் சொல்லும் பிறழ்வு இலக்கணத்தில் எழுத முற்பட்டக் கவி இது 

Friday, June 8, 2012

கண்டேன் அழகை

நான் பார்க்கவில்லை என நினைத்து 
ஓர விழி பார்வையாலே 
எனை நனைக்கையில்தான்
கயல் விழியாள் கார்விழி பேரழகு ...
.
நான் பார்ப்பதை தெரிந்த பின்பு 
கலைந்துகிடக்கும் அவள் முடி சரிசெய்து 
தன்னை அழகாக்கி கொள்ளும் 
அந்த பதட்டத்திலும் அவள் ஓரழகு ...
.
அவள் போகும் வழி நெடுக
நான் தொடர்ந்து பின் தொடர
திரும்பிப் பார்க்கும் அவள்
நீ என்ன இந்தப் பக்கம்
என்று முறைக்கிறாளா?
இப்படி போகணும் என் வீட்டுக்கு
என்று வழி சொல்கிறாளா?
குழப்பமும் இங்கே தனி அழகு ...
.
வேண்டுமென்றே தாமதமாய் வந்து 
வராத என் இடத்தில் என்னைத் தேடும் 
அவள் தேடலை ரசிக்கையில் 
அவள் சோகமும் ஓர் சுக அழகு ...  
.
தினமும் பார்க்கும் நான்
பார்க்காமல் அன்று நடிக்க
என் பார்வையினில் படுவதற்காய்
அலைபாயும் அவள் மனதும்
காதலும் முழு அழகு ...
.
உன்னில் இவ்வளவு அழகை
கண்டுபுடித்த எனக்கு
தாடி அழகாய் இருக்கும்
நான்  அழுதால் அழகாய் இருக்கும்
என்று கண்டவள் நீயடி...

Tuesday, June 5, 2012

கிறுக்கன் சொல்லியது


சொல்லப்பட்ட முதல் காதலுக்கு 
ஒப்புக்கொள்ளும் முன் 
நீ கேட்ட முதல் பரிசு 
உன்னை மறந்திட வேண்டுமென்பது 
கடைசி வரை அதை
கொடுக்க முடியாமலே போனதேனோ?
.
காதலை மறந்து
சந்தோசமாய் இரு, அன்று
நீ சொன்ன வாழ்த்தும்
சாபாமாய் கேட்டதேனோ?
.
ஆசையாய் வாங்கிவந்த பொம்மையை
பரிசாய் வாங்கிய பிள்ளை உடைத்தது போல்
உனக்காய் படைக்கப்பட்ட என்னுடைய இருதயம்
20 ஆண்டுகள் என்னிடம் பத்திரமாய் இருந்தது
காதலால் நீ உடைப்பதற்கோ?
.
நீ இல்லை தெரிந்தும்
உனதாய் தெரியும்
எல்லார் முகத்தையும்
இரண்டு முறை பார்ப்பது ஏனோ?
.
கோடையாதலால் 
தலையணை நனைக்கும் கண்ணீரை 
வியர்வை என்று சமாளித்துக் கொள்கிறேன்...
என்ன செய்யப்போகிறேன்
ஜூலை முதல்?

Monday, June 4, 2012

நீர்த்து போன கவிதை


என் காதலை கவிதையாய் படித்தவர்கள்
மீண்டும் மீண்டும்
படிக்கத்தூண்டியதாய் சொல்லும்போது
எனக்கு மட்டும் ஒரு முறைக்கு மேல்
படிக்கமுடியா வலியேனென்று
உன்னிடம் கேட்க ஆசைப்பட்டேன்
.
என் காதலின் ஆசையை படித்தவர்கள்
உன் காதலி அதிர்ஷ்டசாலி என்றபோது
அதை உதறிப் போகும்
துரதிர்ஷ்டசாலியாய் நீ ஆவது என்?
என்று உன்னிடம் கேட்க ஆசைப்பட்டேன்
.
நான் அழுகிறேன்
என் கண்ணீர் எங்கே?
நான் மரிக்கிறேன் 
உயிர் மட்டும் போகாதது ஏனோ?
என் இரவுகள் இனி 
கருத்துப் போன பகல்தானோ?
 .
இன்னும் எவ்வளவோ 
எழுதி வைத்தேன் கேட்பதற்கு 
என் வரிகள் எல்லாம்
வழிந்த என் கண்ணீரில்
நீர்த்து போனது ஏனோ?
 .
தமிழகத்தின் இந்த எல்லையிலிருந்து
அந்த எல்லையிலிருக்கும் உன்னிடம்
கத்தி கேட்கிறேன்...
உன் இருதயம் செவிடல்ல
என் இருதயத்தின் முனங்களும்
உனக்கு கேட்கும் நானறிவேன்...

Sunday, June 3, 2012

பிறந்த எட்டாவது சுவரமே...


(22)ஸ்ருதி (7)ஸ்வரம் (35)தாளம் (108)ராகம்
என்று நான்கு தாய் பெற்றெடுத்த இசை...

ச - ரி - க - ம - ப - த - நி என்று கர்நாடகமாய்
ச - ரீ- க - ம - ப - த - நி என்று ஹிந்துஸ்தானியமாய்
டூ - ரீ - மி - ஃபா - சொல் - ல - சி என்று மேற்கத்தியமாய்
மூன்று சுவர் சிறைக்குள் சிறை இருந்த இசை


20ஆம் நூற்றாண்டில் பண்ணையபுறத்து 
புல்லாங்குழல் தென்றலால் இந்த இசைக்கு
சிறகு முளைத்தது சிறை கலைத்தது...

இவனால்
பொதிகை  மூங்கில் ஜாஸ் பேசியது
தஞ்சாவூர் தவில் ராக், மெட்டலாய் உறுமியது
உறுமியும் பறையும் பாப் பாடியது

பாடறியாத  படிப்பரியாத பாமரனின்
நாட்டுப்புறம் எட்டுக் கட்டை கட்டி
ஏழு சுவரம் ஏற்று மேடை ஏறியது இவனால்...

மேற்குபுறம் மட்டுமே மழை தந்த
பல இசைத்தென்றல்...
இசைஞானியின் ஹார்மோனியத்தால்
கிழக்குபுறம் திசை திரும்பியது...


லண்டன் ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவில்
முழு கீதம் அமைத்த முதல் ஆசியன் இவன்...
அதனால் தான் ராக்கம்மாவுடன் சேர்ந்து
இந்தியாவுடன் 155 நாடுகள் கை தட்டியது...

மொசார்ட், ஜோஹானன், பீத்தோவன்
என்ற மூன்று துரனர்களின் ஏகலைவன் இவன்...
அவர்களின் திறம்  விரலை
மாணவதட்சனையாய் பெற்றவன் இவன்...

எந்த ஒரு தொழில்நுட்ப வசதியின்றி
இந்த ஒரு தென்றல் உண்டு பண்ணிய
மாற்றத்தை, இந்த உலகத்தில்
பல புயல்கள் உண்டு பண்ண முயற்சித்து கொண்டிருக்கிறது
புதுப் புது நுட்பத்தின் துணை கொண்டு...

அந்த முயற்சியில் தீர்ந்து கொண்டிருக்கிறது
எங்கள் இசை பசி...
இருந்தும் நீ உண்டாக்கிய ருசி இல்லை...

இசைஞானியே... பாமரக் கவியே... இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 
 [02/06/2012]

தொடர்புடைய கவிதை +



Saturday, June 2, 2012

குற்றுயிருடன் தமிழ்




 ஐஞ்சு வயதாகுது எருமைக்கு
இன்னும் "MOMMY" சொல்லத்
தெரியவில்லை என்ற உதடுகளில்
சாகடிக்கப்படும்  தமிழ்
"ம்மா அடிகாதம்மா சொல்றேன்"
என்ற  மழலையில்
இன்னும் குற்றுயிருடன்...

"Hey dude" "Dear" என்று
ஊரெல்லாம் தமிழை
சாகடித்து வீடு வரும் மகனை
செல்லம் என்று வருடும்
அன்னையின்  பாசத்தில்
இன்னும் குற்றுயிருடன்...


"Darling, I love you" என்று காதலிக்கையில்
சாகடிக்கப்படும் தமிழ்
தங்கமே என்றோ
தரிதிரமே என்றோ
திருமணத்திற்குப் பின்
இன்னும் குற்றுயிருடன்...

பிறந்த வீட்டில் கொடுமைபடுத்தப்பட்டு
புகுந்த வீடுகளில் போற்றப்படும்
ஒரே பெண் தமிழ் மட்டும் தான்...

 பின்குறிப்பு - முகப்புத்தகத்தில் தமிழ் வளர்ப்போம் என்ற பக்கத்தில் நடந்த ஒரு போட்டிக்காய் எழுதியது.

Friday, June 1, 2012

தாகத்திற்கு கண்ணீர்




பாட்டி முந்தாநேத்து  ஆத்தா நேத்து 
அக்கா இன்று மனைவி நாளை
மகள் நாளை மறுநாள்
.
மருமகளாய் இவர்கள் அனுபவிதவைகளுக்கு
மாமியாரை மருந்திட விழைவதை விட 
பழிவாங்கத் துடிக்கும் இன்னொரு 
விலங்கின் பசிக்கு இரை 
ஆனவர்கள் ஆகிறவர்கள் ஆகப்போகிறவர்கள் 
.
அவ மகளோட மாமியார 
கரிச்சுக் கொட்டுவா 
அதையே மருமகளுக்கு 
இவா செய்கையில் 
அறிவை காற்றில் வீசுவா...
 .
அவா வீட்டின் ஏவல்களெல்லாம்
மிருகத்தணமாம்...
அதையே விடுமுறைக்கு வந்த நாத்தனா
அண்ணன் பொஞ்சாதி தலையில்
ஏற்றுவது என்ன குணமோ?
 .
இவா மகா மருமகன்கூட பேசுனா
சின்னஞ்சிறுசுக அப்டிதான் என்பவள்
அங்க என்ன அவன்கிட்ட பல்ல இழிகுற
வேல கிடக்கு தல மேல என்று
மருமக தல மேல ஏறுவது ஏனோ?
 .
இவோளோட வளர்ப்போடு
தினம் பாடுபடுபவளை
பிள்ளை வளர்க்கும் லட்சணம் பாரு
என்று வக்கன பேசுவா
 .
உட்காரவும் விடாம நிக்கவும் விடாம
இல்லாத கொடுமைய செஞ்சுப்புட்டு
என் மகனின் மனசக் கெடுத்து
தனிக்குடித்தனம் போறா என்று
பல்லுபோனவள்களோடு சேர்ந்து
புரணி பேசுவா
.
மகனின் பாசத்திடம்
தான் சாவதை சொல்லி மிரட்டியே
தினம் ஒருபூவை உயிரோடு சாவடிப்பா
 .
இவ மக வாரவாரம்
ஓய்வு உலா இங்க வரணும்
வரும் அவா வேலைய
மருமகா செய்யணும்...
உன் ஆத்த உன்ன கட்டிகொடுத்தாச்சு
இன்னும் அங்க உனக்கென்ன உறவென்று
சொல்லும் இவ, இவ மகள
வாடகைக்கா விட்டா வாழத்தான விட்ட
எங்கே சம உரிமை?
.
இவா மாமியா வாங்கிய
வேலையில தவிச்சுப் போனாவா
மருமக கண்ணீர் குடிச்சு இளைபாருகிறாலாம்...
அவளை பாசத்தோடு பார்...
அவள் பொழியும் அன்பு மழையிலும்
தாகம் தீரும்... அவள் உன் (மரு)மகள்
மலரை மதிக்கலனாலும் பரவாயில்லை
தயவு செய்து மிதிக்காதே

குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்