Monday, April 14, 2014

அழட்டும். தடுக்காதீர்கள்.


தோள்சாய்ந்து அழுதுகொண்டிருந்தவன்
எழுந்து கன்னங்களை துடைத்துக்கொள்கிறான்.

கண்ணீரில் நனைந்த அந்த நாளை
தூக்கிக்கொண்டு நடக்கிறேன்,
சிலுவை சுமந்த தேவனாய்.

பின்னாடியே வரும் அவன் விசும்பலோசை
தசையடியாய் விழுகிறது முதுகில்.
நடந்துகொண்டே இருக்கிறேன்.
முதுகில் விழும் சவுக்கின் சரடுதிரிகள்
அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

சிலுவையில் இறந்து
மீண்டும் நான் உயிர்த்துவருவதர்க்குள்
அழுதுகொண்டிருந்தவர்களை இந்த உலகம்
உயிரோடு வைத்திருக்குமா என்று தெரியவில்லை.

எனவே, இந்த சிலுவையை
இன்னொரு தோளுக்கு மாற்றிவிட்டு
இந்த தோளை இன்னுமொருவன்
அழக்கொடுத்துவிடுகிறேன்.

இன்னுமொருவருக்காய் சாவ
எவ்வளவோ பேர் இருக்கிறார்கள்.
ஆனால் அழுபவனுடன் ஆறுதலாய்
உட்கார எல்லோருக்கும் கொஞ்சம் தயக்கம்.

oOo

நிம்மதியாய் உறங்கிவிட்ட பின்னிரவில்
அழுகை விசும்பலுடன்
உங்கள் வீட்டுக்கதவு தட்டப்பட்டால்
கொஞ்சம் திறந்து பாருங்கள்.
அது நானாக இருக்கலாம்.

ஏன்? எதற்கென்றெல்லாம் கேட்காதே.
நடந்துவிட்டதை மாற்றிடவோ,
நடக்கப்போவதை தடுத்திடவோ
உங்களால்(லும்) முடியப்போவதில்லை.

இப்போதைக்கு
அழுகை மறந்துரங்க வேண்டும் நான்.
முடிந்தால் மடியில் கொஞ்சம் இடம் கொடுங்கள்.

இல்லையென்றால் கதவை
முகத்தில் அறைந்து மூடிக்கொள்ளுங்கள்.
என் முகத்தில் அறைந்த முதல் கதவு இது இல்லை.
ஆனால் என்னை தாங்கிக்கொள்ளும்
முதல் மடி நீங்களாய் இருக்கலாம்.

தனிமையில் உட்கார்ந்திருக்கும் என்னிடம்,
என்னவென்று கேளுங்கள்.
நான்,
உடைந்து உண்மையாய் அழ வேண்டும்.
அன்னை முன்னால் அழும்
குழந்தையின் உண்மையான அந்தக் கண்ணீரோடு.

குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்