Wednesday, March 26, 2014

திவ்யா குட்டி L.K.G. ‘A’


சோட்டா பீம், சாக்லேட்
எதுவும் வேண்டாமேன்றுவிட்டு
அழுதுகொண்டே பள்ளிக்கூடம் வந்தவள்
வாசலில் தோழி அனிதாவை பார்த்ததும்
ஓடி பொய் கைகோர்த்துக்கொண்டு
“டாட்டா மாமா” என்கிறாள் சிரித்துக்கொண்டே.

இப்போ அவளை விட்டுவிட்டு
வீடு போவதை நினைத்து
நான் அழத்தொடங்குகிறேன்.
வீட்டுக்கு செல்லும் பாதையையும் மறந்திருந்தேன்.

oOo

சிங்கம் காட்டின் ராஜா
குகையில் வசிக்கும் என்று
பாடம் சொல்லிக்கொண்டிருந்தார் ஆசிரியர்.

“Miss க்கு எதுவுமே தெரியல,
வீட்டு remote-ல 702 அமுக்குனா
சிங்கம் காட்டுவாங்க.
இப்ப சிங்கம் காட்டுல எங்க இருக்கு? 
டிவில மட்டும் தான் இருக்கும்”,
என்று தோழியிடம் சொல்லி சிரிக்கிறாள்.

oOo

சாமி கும்பிட்டுக்கொண்டிருந்தாள் திவ்யா குட்டி.

“லஞ்ச்க்கு சப்பாத்தி வச்சுருக்கேன்.
யாருக்கும் கொடுக்காம புல்லா சாப்டனும்”
என்று அம்மா சொன்னதை கேட்டதில்லை.

அப்பா அந்த மஞ்ச கலர் டப்பால இருந்து
வெள்ளை கலர் சாக்லேட் எடுத்து 
புகையோட சாப்பிடும் பொது அதிகமா இருமுறார்னு
அதை எடுத்து ஒளிச்சு வச்சுட்டேன்.

“i love you. i miss you :( ”
என்று யாருக்கோ எங்க அண்ணா எழுதி வைத்திருந்தான்.
அப்படி என்றால் என்னவென்றெல்லாம் தெரியாது.
நான் அதில்
“எங்க அண்ணன் நல்லவன்.
அவனை அழ வைக்காதிங்க. ப்ளீஸ்”
என்று கிறுக்கி வைத்துவிட்டேன்.

நான் செய்தது
எதுவுமே அவங்களுக்கு தெரியாது.
என்ன மன்னித்துவிடு சாமி. - காதலிக்கப்படாதாவன்

Sunday, March 16, 2014

கொஞ்சம் அவகாசம் கொடு


மாற்றிய பிறகும் கூட
பழைய கடவுச்சொல்லை  விரலால்
உடனே உதிர்த்துக்கொள்ள முடியவில்லை தான்.
ஆனால் புதிதிற்கு தன்னை பழக்கிகொண்டது.

வீடு மாறிய பிறகும் கூட
பழைய வீட்டுப் பாதையை கால்களால்
உடனே மறக்க முடிவதில்லைதான்.
ஆனால் மெல்ல நானே பழகிக்கொண்டேன்.

நீ இல்லை என்று சொல்லிக்கொண்ட பிறகு
நிச்சயிக்கப்பட்டவளுக்கென எழுதும்
"i love you"க்கு பக்கத்தில்
எவ்வளவு முயன்றும் உன் பெயரைத்தான் எழுதுகிறேன்.

மறப்பதற்கு நீ கடவுச்சொல்லும் இல்லை,
மாற்றிக்கொள்வதற்கு நீ பழைய வீடும் இல்லை தான்.
ஆனால் எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடு,
அன்பில் என்னை அமிழ்த்துக் கொள்ள அவள் வருவாள். வரட்டும்.

அவள் கரமெடுத்து என் விழிகளை
இருக்க போர்த்திக்கொள்ளப்போகிறேன்கிறேன்.
பேய் கதை கேட்ட இரவில்
இருட்டை பார்த்து
போர்வையெடுத்து போர்த்திக்கொள்கிற
குழந்தையின் நம்பிக்கையோடு.

Friday, March 7, 2014

இந்த பூக்களை பறிக்காதீர்கள்


வந்து நின்ற பேருந்தில் ஏற வந்தவள்
ஐந்து ஆண்கள் மட்டும் இருப்பது பார்த்து
யோசனையுடன் பின் வாங்குகிறாள்.

"மாமாவோடு போய் விளையாடு"
என்று சொல்லும் அனிதா அக்கா,
இன்றெல்லாம் விளையாட கூப்பிட்டாள்
தயங்கி தயங்கி அனுப்புகிறாள் தியா குட்டியை.

பேசிக்கொண்டிருந்த தோழி
சரியாய் இருக்கும் மாராப்பை
மீண்டுமொருமுறை சரி செய்துகொள்கிறாள்.

அம்மாவும் சகோதரியும் கூட
என்னைப்பார்த்து
பயப்பட ஆரம்பித்துவிட்டார்கள்.

வன்கொடுமையால் கொல்லப்பட்ட  சிறுமி
என்று செய்தி வந்த அதன்பிறகு
ஆண் பிள்ளை பிறந்த வீடுகளின்
சங்குகளில் கள்ளிப்பால் தயாரானாலும் ஆகலாம்.

பெரிதாய் ஒன்றும் மாறிவிடவில்லை.
கள்ளிப்பால் எதிர்த்த தாய் கூட
பெண் குழந்தை வேண்டாமென பயப்படுகிறாள்.
அடுப்பூதி அடைந்து கிடந்தவர்கள்
தாங்களே உள்ளே போய் அடைத்து கொள்கிறார்கள்.

இதுதான் ஆண்கள் நாம் கொடுத்த பெண் சுதந்திரம்.
கொடுத்தோமா?
அவர்களிடமிருப்பதை எடுக்காமல் இருந்தால் போதும்.

பூக்களை பறிக்காதீர்கள்
என்று சொன்னால் எவன் கேட்டான்?
காவல் காரன் தடி எடுக்கும் வரை. எடுத்தும் கூட.

- காதலிக்கப்பாடாதவன் 

அர்னாப் கோஸ்வாமி கிட்ட மாட்டிக்கிட்ட ராகுல்  காந்தி மாதிரி எதுக்கெடுத்தாலும் "Women Empowerment, Women Empowerment"-ன்னு மட்டும் வெறும் வார்த்தையோடு நின்றுவிடாதீர்கள்.

நிர்பாயாக்கு, அமிலத்தில் அடி வாங்கியவளுக்கு இப்படி எல்லோருக்கும் நீதி கிடைக்குதோ இல்லையோ வீர பெண்மணி விருது கிடைத்துவிடுகிறது. குற்றவாளியை தண்டித்துவிட்டோமே, நீதி கிடைத்துவிட்டது என்று சொல்பவர்களுக்கு புரியவில்லை. இன்னுமொரு நிர்பாயா, உமா, லக்ஷ்மி உருவாகாத சமுதாயம் அமையும் வரை HAPPY WOMEN'S DAY என்று வாழ்த்துவது நெஞ்சுக்குள் லேசாய் உறுத்தத்தான் செய்கிறது.








குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்