கருகலைத்த மருத்துவச்சியின் நக இடுக்கில்
மிச்சமிருக்கும் உயிரை,
முதுகிலிறங்கிய கத்தியிலிருக்கும்
கைரேகையின் ஜாடையை,
பிரசவ களைப்பில் தாயுறங்குகையில்
குட்டி கடத்தும் கோணிப்பையின் முனங்கலை,
நடக்க இடமில்லாது இருந்தும் அந்த தெருவில்
தன்னந் தனியாய் நடக்கும் இருதயத்தை,
அடுத்த வேலைக்கு காசில்லாத கவலையின்றி
இப்போது சாப்பிடுபவனின் பசியை
சூழ்நிலையால் கொலை செய்ததாய்
அழுதுகொண்டிருந்தவனின் கையிலிருக்கும் கத்தியை
நின்று ஒருமுறை திரும்பி பார்த்துவிட்டு
மெல்ல தன் நிறம் மாற்றிக்கொண்டு
பார்க்காதது போல் நடந்து போகிறது அந்த நிமிடம்.
அப்போதைக்கு தப்பித்துவிடுகிற பச்சோந்தியாய்.
அவர்களும் கூட.
No comments:
Post a Comment