உயிரோடு எறும்பு மிதக்கும் பாலை
கண்ணுக்கு நல்லதென்று சொல்லி
குடிக்கக் கொடுக்கிறீர்கள்.
"அப்போ, எறும்புக்கு?" என்று கேட்பாளென
எதிர் பார்த்திருக்க மாட்டீர்கள்.
இழவு விடொன்றில்
விளையாடிய திவ்யா குட்டியை
அடித்து அழவைக்கிறீர்கள்.
நீங்கள் அழுது வராத இறந்தவர்,
அவள் அழுதாலும் வரமாட்டார்
என்று தெரிதிருக்காது உங்களுக்கு.
அவளை, வருந்த வேண்டியதற்கு சிரிக்கவும்
மறக்க வேண்டியதற்கு அழவும் செய்கிறீர்கள்.
நீங்கள் திவ்யா குட்டி இல்லை,
விளையாடவென ஐபோனைக் கொடுத்தீர்கள்.
அவள் தூக்கி போட்டு விளையாடுவாள்
என்று எதிர் பார்த்திருக்க மாட்டீர்கள்.
அழுதுகொண்டிருக்கிறாள் திவ்யா குட்டி.
அவள் விளையாடிக்கொண்டிருந்த பலூன்
பீங்கான் பூந்தொட்டியை தட்டி உடைத்துவிட,
கோபத்தில் அவள் பலூனை பிடுங்கி
பரணில் எரிந்துவிடுகிறீர்கள்.
அழுதுகொண்டிருக்கிறாள் திவ்யா குட்டி.
நீங்கள் உடைத்ததை விட
அவள் உடைத்தது எல்லாம்
திருப்பி சரி செய்யக்கூடியாதகவே இருந்தது.
நீங்கள் திவ்யா குட்டி இல்லை.
திவ்யா குட்டியாய் ஆகவும் முடியாது.