Friday, July 11, 2014

அதே மழை, வேறொரு நாள்


வக்கனை காட்டி மழை தராமல்
காற்றில் கலைந்துவிடுகிற கார்மேகமாய்,
“typing… typing… ”
என்று காட்டிக்கொண்டே இருந்த
உன்னிடம் இருந்து வந்து சேரும் வெறும் ஸ்மைலி.

காற்றை மீறி பெய்யத்துவங்கி
சொல்லாமல் கொள்ளாமல் நின்று போன மழையாய்,
திரும்ப அனுப்பாமல் குப்பைக்கு போகும்
உனக்கு டெலிவர் ஆகாத குறுஞ்செய்தி.

நின்று போன பிறகு
மரம் தூறும் தூறலாய்
திரும்ப திரும்ப படிக்கையில்
உயிருக்குள் இனிக்கும் நீ அனுப்பிய
குட் நைட்டும், குட் மார்னிங்கும்.

12 மணி தாண்டி, அரை தூக்கத்தில்
உன் குறுஞ்செய்தியோடு நீளும் நாள்…
அன்று இரவெல்லாம்
தகர ஓட்டிடம் மழை பேசிக்கொண்டிருக்கிறது
நான் சொல்லாத ரகசியத்தை…

                                  - காதலிக்கப்படாதவன்

அவள் அனுப்பிய ஸ்மைலியாய் இந்த மழை, எவ்வளவு வந்தாலும் போதுவதில்லை. :)

1 comment:

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்