Tuesday, September 17, 2013

பூனையும் பாலும்


அடுப்படியில் யாரோ,
எதையோ தேடப்போய்
கை தட்டி சிந்திய பாலுக்கு

அப்பாவி பூனைமேல்தான்
பழி விழுகிறது…

o

பாலை எடுத்துக்கொள்கிறார்கள்.
மாட்டிடமிருந்து இவர்கள்.
இவர்களிடமிருந்து பூனை.

எது திருட்டு?
எது மட்டும் திருட்டு?

o

ஒரு பூனையால்
குடிக்க முடியாத அளவு
பால் களவு போயிருப்பது போதாதா?

திருடியது பூனையில்லை
என்பதற்கு சாட்சி.

o

உரிமைககளையே இங்கே திருடத்தான்
வேண்டி இருக்கிறது.

பால் திருடிக்கொள்கிற
பூனையை போல்.

o

சுடும். தெரியாமல் இல்லை.
இருந்தும் பூனைக்கு
அவசரம், ஆசை.

சூடுபட்டுக் கொள்வதின் சுவை
பூனைக்கு மட்டும் தான் தெரியும்.

o

பசித்த பூனை நான்
சுடச்சுட
என்னை திருடிக்கொண்ட பால் நீ…

Thursday, September 5, 2013

கடைசி நாள்



கடன்காரன் கொடுத்த கெடுவின்
கடைசி நாள் முடிந்திருந்தது 

காத்திருந்த கடைசி
இட்லியும் விற்றிருந்தது

மிச்சமிருந்த கடைசி
சொட்டுப்  பெட்ரோலும் தீர்ந்திருந்தது

பையில் இருக்கும் கடைசி
பத்து ரூபாயும் கிழிந்திருந்தது

தட்டப்போன கடைசி கதவும்
வெளிப்புறமாய் பூட்டி இருந்தது

நான் போகும் ஊரின்
கடைசி பேருந்து புறப்பட்டிருந்தது 

பேட்டரி இல்லாமல் கடிகாரம்
கடைசி மணி காட்டியபடி நின்றிருந்தது

பேருந்து நிலையத்தில் துணையாய் இருந்த
கடைசி நபரும் கிளம்பி இருந்தார்

மிச்சமில்லாமல் கடைசி
சொட்டுக் கண்ணீரும் தீர்ந்திருந்தது

என் கடைசி நாள் அது இல்லை
என்பது மட்டும் எனக்கு தெரியும்
இப்போதைக்கு
இந்த கடைசி நாளை கடந்துவிடுவது
போதுமானதாய் இருக்கிறது… – காதலிக்கப்படாதவன்

திவ்யா குட்டி – 1


ஆசையாய் வாங்கிய ஐஸ்க்ரீமை
“அழகா இருக்குதுல்ல” என்று சொல்லி
பார்த்துக்கொண்டே இருக்க நீங்கள்
திவ்யா குட்டியாய் இருந்திருக்க வேண்டும்

கார் கேட்டு அடம்பிடிக்கும் ராமுவை
பாதி கடித்த எச்சில் மிட்டாயில்
சமாதானம்படுத்த முடிவதற்கு நீங்கள்
திவ்யா குட்டியாய் இருந்திருக்க வேண்டும்

“ஏன் அப்படி செஞ்ச?”
என்று கோபித்துக்கொண்ட அடுத்த நொடி 
“இனிமே அப்படிலாம் செய்யக்கூடாது”
என்று சிரிப்பதற்கு நீங்கள்
திவ்யா குட்டியாய் இருந்திருக்க வேண்டும்

மண்ணை சோறென்று தந்து பசி போக்க
ஜெம்ஸ் மிட்டாயை மருந்தென்று கொடுத்து
வலிக்காத ஊசி குத்தி காய்ச்சல் போக்க நீங்கள்
திவ்யா குட்டியாய் இருந்திருக்க வேண்டும்

எனக்கு அது வேண்டும்.
எனக்கு இது கிடைத்தால் உனக்கு அது செய்கிறேன்
என்று எல்லோரும் சாமியை நச்சரித்துக்கொண்டிருக்கையில்
சாமி சாப்பிட்டுடியா? இந்தா ஆப்பிள்
என்று சாமிக்கு கொடுக்க நீங்கள்
திவ்யா குட்டியாய் இருந்திருக்க வேண்டும்

எல்லோர் வீட்டிலும் ஒரு திவ்யா குட்டி.
ஆனால் யாரும் அவளை
திவ்யா குட்டியாகவே இருக்க விடுவதில்லை – காதலிக்கப்படாதவன்

குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்