Thursday, September 5, 2013

கடைசி நாள்



கடன்காரன் கொடுத்த கெடுவின்
கடைசி நாள் முடிந்திருந்தது 

காத்திருந்த கடைசி
இட்லியும் விற்றிருந்தது

மிச்சமிருந்த கடைசி
சொட்டுப்  பெட்ரோலும் தீர்ந்திருந்தது

பையில் இருக்கும் கடைசி
பத்து ரூபாயும் கிழிந்திருந்தது

தட்டப்போன கடைசி கதவும்
வெளிப்புறமாய் பூட்டி இருந்தது

நான் போகும் ஊரின்
கடைசி பேருந்து புறப்பட்டிருந்தது 

பேட்டரி இல்லாமல் கடிகாரம்
கடைசி மணி காட்டியபடி நின்றிருந்தது

பேருந்து நிலையத்தில் துணையாய் இருந்த
கடைசி நபரும் கிளம்பி இருந்தார்

மிச்சமில்லாமல் கடைசி
சொட்டுக் கண்ணீரும் தீர்ந்திருந்தது

என் கடைசி நாள் அது இல்லை
என்பது மட்டும் எனக்கு தெரியும்
இப்போதைக்கு
இந்த கடைசி நாளை கடந்துவிடுவது
போதுமானதாய் இருக்கிறது… – காதலிக்கப்படாதவன்

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்