இசை நின்றவுடன்
நாற்காலியை பிடிப்பதில்
குறியாய் இருந்துவிட்டவனுக்கு,
நாற்காலிகள் தீர்ந்த
அப்போது தான் உரைக்கிறது
இனி இசை
கிடைக்கபோவதில்லையென.
oOo
இசை நின்று போனதும்
யாரோ ஒருவனுக்கு
நாற்காலி இல்லாமல் போக போகிறது.
அந்த ஒருவனாய்
தான் இருக்க மாட்டோம்
என்னும் நம்பிக்கையில் தான்,
தானாய் இருக்ககூடாது
என்னும் வெறியில் தான்
ஓடிக்கொண்டிருக்கிறார்கள் ஒவ்வொருவரும்.
oOo
இசை நிற்கிற வரை
எல்லோரும் ஓடிக்கொண்டிருக்க
ஒருவன் மட்டும் நடுவில் நுழைந்து
கால் மேல் கால் போட்டு
நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு
தான்தான் வென்றதாய் அறிவித்துக்கொள்கிறான்.
ஓடிகொண்டிருந்தவர்கள்
நாற்காலி கிடைக்கவில்லையென
வருத்தம் மட்டும் பட்டுக்கொண்டார்கள்.
oOo
நீங்கள் அடித்துக்கொள்ள வேண்டுமெனவேதான்
இசை நாற்காலி போட்டியில்
ஒரு நாற்காலி குறையாக இருக்கிறது எப்போதும்.
oOo
இசையையும் ரசிக்க விடாமல்,
நாற்காலியும் உனக்கு கிடைக்க விடாமல்
வெளியிலிருந்து ஒருவன்
உன்னை சுற்றவைத்துக்கொண்டிருக்கிறான்.
இன்றில்லாவிட்டால் என்ன?
என்றாவது கிடைக்கலாம்.
ஓடு. ஓடிக்கொண்டே இரு.
oOo
காலி நாற்காலி இருக்கிற
எல்லா இடத்திலும்
யாருக்கும் தெரியாமல்
உட்கார்ந்திருக்கிறது சண்டை.