கொட்டும் மழையில் போகும் பேருந்தின்
சரியாய் பூட்டாத சன்னல் கொண்ட இருக்கை மட்டும்
அவ்வளவு கூட்டத்திலும்
அடுத்த நிறுத்தத்தில் ஏறப்போகிறவனுக்கென காலியாய் கிடக்கிறது,
விரல் நிறைய காதல் வைத்து
உன் பெயர் பக்கத்தில் online எனக்காட்ட
கைபேசியுடன் காத்துக்கிடக்கும் நான்,
அன்ன நடையிடும்
மாநகர பேருந்தின் ஒழுகும் கூரைக்கு
“உச்” கொட்டி எரிச்சலடைபவர்கள் ரசிக்காமல்
கிடைக்கிறது சன்னலுக்கு வெளியே வானவில்,
ரொம்ப நேரமாய் காட்டும் typing-க்கிற்கு
காத்திருக்கும் பொறுமையின்றி தூக்கி நானெறிந்த கைப்பேசியில்
வந்து சேரும் உன் ஸ்மைலி,
முன் கண்ணாடியில் மழை பெய்ததும்
துடைத்துவிட்டு அமைதியாகும் பேருந்தின் wiper,
முன்னாடி விழும் அந்த ஒற்றை முடியை
விரலால் ஒதுக்கிவிட்டு அமைதியாய் பார்க்கிறாய்
ஒரு நிமிடம் துள்ளி குதித்துவிட்டு அமைதியாகும் என் இருதயம்.
ஊர் உறங்கிய இரவின் நிசப்தத்தில்
தகரக்கூரை மேல் பெய்யும் மழை…
பேசி நாம் தீர்ந்து போன
அந்த நிசப்தத்தில் உன் குண்டுக்கண்கள் பேசும் ரகசியம்.
மழை. நீ. நான்.
No comments:
Post a Comment