Friday, August 22, 2014

அன்புள்ள கருவாச்சிக்கு

அன்புள்ள கருவாச்சிக்கு,

எனக்குள் திருட்டுத்தனமாய் நுழைந்த நீ நலம்.
என்னிடம் திருடிக்கொண்டு போன நான் நலமா?

காதலை, சொல்லிவிடுகிற வார்த்தைகளை
இன்னும் பிரசவிக்காத மொழி பேசும் ஊரில்,
அடை மழையில் சிக்கிய உப்பு வியாபாரியாய் இருந்தேன்  நான்.
காதலை சொல்ல பயப்படுகிறவன் கோழை இல்லை.
காதலிக்க பயபடுபவன் தான் கோழை.

நான் கோழையாய் சாவதை விட,
காதலிக்கப்படாதவனாய் செத்துப் போகிறேன்.
இந்தா படி. பிடித்திருந்தால்,
பதிலை கடிதமாய் தான் தர வேண்டுமென்றில்லை.
ஒரு ஸ்மைலி போதும்.
பிடிக்காவிட்டால்?!!! பிடிக்கும்.

எதிலிருந்து ஆரம்பிக்க?

உனக்கு குட் மார்னிங் அனுப்பி பேசும் ஆர்வத்தில்
2 மணிக்கே விடிந்து விடுகிற என் காலை,
குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ் தாண்டி
கைபேசி வெளிச்சத்தில் அழகாய் நீளும் இரவு,
சாதாரண ஒரு நிமிடத்தைவிட பெருசாகும்
நீ பேசாத ஒவ்வொரு நிமிடமும்…
எதை பற்றி சொல்ல?

இன்னும் எத்தனை நாள்
வெறும் ஸ்மைலிகளில் உன் முகம் நான் பார்க்க?

எல்லா அலங்காரமும் களைந்து
புன்சிரிப்பு மட்டும் கொண்டு உறங்கும்
உன்னை பார்த்தே விடியட்டும் என் நாட்கள்.
இரவு உறங்கும் உன்னை முத்தமிடுகையில்
குழந்தையாய் சிணுங்க
இன்னுமொரு முத்தத்தோடு நீளட்டும் நம் இரவு.
இவ்வளவு தான்.

உன் சமையலறை சுதந்திரத்தில்
போர் எடுக்கும் என் குறும்புத்தனத்தை…
அடி பிடித்த பாலும், சமையலறை சுவரோவியமும்
கதை பேசட்டும்.
கவிதைகளின் வரிகளிலே
என் கன்னங்களை பதம் பார்த்த
உன் நகத்தளும்புகளின் சாயல் தெரியட்டும்
இவ்வளவு தான்.

இருட்டறை, அழுக்கு போர்வை,
என் மார்பில் நீ, உனக்கு(நமக்கு) பிடித்த இசைவரிசை,
உன்னிடமிருந்து பிடுங்கிகொண்ட ஒரு பாதி ஹெட் போன்,
இவ்வளவு தான்.

தாலி, மெட்டி, முத்தம், கலை
முந்தானை முடிச்சு, தலையணை மந்திரம்
உன் சீப்பில் இருக்கும் என் முடி
என் சட்டையில் படியும் உன் சேலை சாயம்,
கோபித்துகொண்ட இரவுகளின் பட்டினி..
வீம்பை பசி வெல்லும் இரவுகளில் ஒரே தட்டில் நிலா சோறு…
இந்த கடிதத்தை படித்து சிரிக்கும் நம் பேரன்
இதில் எதிலோ தான் நீயும் நானும் நாமாகி இருப்போம்.
இவ்வளவு தான்.

இந்த காதலை இப்படி பக்கம் பக்கமாகவும் சொல்லலாம்.
உன்னை காதலிக்கிறேன் என்றும் சொல்லலாம்.
சொல்ல வந்த வார்த்தை இன்றி,
உன் முட்டை கண்களுக்குள் நான் சொல்லாமலே தொலைந்தும் போகலாம்.
இவ்வளவு தான்.

இப்படிக்கு

உன் ராம் கருவாயன்


1 comment:

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்