Tuesday, October 28, 2014

பசி தீரா கனவு


கலி முற்றும் சாமத்தில்,
புயலேரிய கடலாகும் கட்டில்.
உச்சிமண்டையில் நடமாடும் களிறிரண்டின்
காலிலிருந்து கழன்று உருளும்
சலங்கை மணிக்குள் அனு பிளவும்.
பிடரி பூத்த வியர்வை பற்றி எரிய
நிலா வந்து நெய் வார்க்கும்.
பயந்து, பூமியிலிருந்து இறங்கி
வின்நதி மீது ஓட எத்தெனிக்கையில்
மீன்களின் முள் இடறி உயிர்
முடிவறியா குழிக்குள்ளே விழப்போகையில்…
அவள் மடியில் விழித்துக்கொள்கிறேன் நான்.

திருவிழாவில் தொலைந்த குழந்தையை
தேடி வந்து தூக்கி கொஞ்சும் தாயென
தலை வருடி, உச்சி முகர்கிறாள்.
மீண்டும் ஒரு கனவு. வேறொரு கனவு. தொலைகிறேன்.

- காதலிக்கப்படாதவன் 

Monday, October 20, 2014

அப்பிகை மழை


அவன் காதல்,

நின்று நிதானமாய்,
யோசித்து, ஒத்திகை பார்த்து,
அழகாய், கவிதையாய் எல்லாம்
பெய்யத் தெரியாத
அப்பிகை மழை.

பெய்யென பெய்கையில்,
குடை விரித்துக்கொ(ள்ளா)ல்லாதே…
தாங்காது.

o

அவன் காதல்,
கொட்டும் அப்பிகை மழை.

தேநீர் குவளையின் கதகதப்பில்
ரசிக்கக் கூடியதில்லை,

குடைபிடித்து, ஒதுங்கி
ஓடத் தேவையில்லை,

இறங்கி நட, மெல்ல நனை,
மழையிடம் உன்னைக் கொடு,
மழையை கொஞ்சம் கையில் ஏந்து.
உனக்கும் பிடிக்கும்.

o

மழையின் கல்லறையில் பூக்கும்
வானவில் ரசிக்கும் தேவதை அவள்.
அவளுக்கான வானவில் செய்ய
மீண்டும் மீண்டும் பிறக்கும் மழை அவன்.

தேவதையே வானவில் வேண்டுமா?

- காதலிக்கப்படாதவன்

குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்