Saturday, May 12, 2012

ஆக்கியவளுக்காய் ஒரு ஆக்கம்


ஈரைந்து மாதங்கள்...

முதல் மும்மாதம்
உன்  எடைகூட்டி,
உண்டதெல்லாம் வாந்தியாக்கி,
உணவேதும் இல்லாமலும் எடை கூட்டி,
சோர்வேற்றி உறக்கம் பறித்தேன் ...

இரண்டாவது மும்மாதம்
உடலை  வலிக்கவிட்டு,
விரல்களை மதமதப்பாக்கி,
அடிவயிறு வீங்க விட்டு
புரண்டு  படுக்க தடை இட்டு,
விரல் முகம் கணுக்கால் வீங்கி
உலக அழகி உன்னை உருகுழைத்தேன்...

முன்றாம் மும்மாதம்
வீட்டுக்குள் சிறை வைத்து
வயிறை வீங்க விட்டு
இதயம் எரியிலிட்டு
உறக்கத்தை புடுங்கிவிட்டு
உன் அடிவயிற்றுள் உருண்டேன் நான்...

விஷம் செய்யும் எல்லா
விஷமம் நான் செய்தும்...
விளா எழும்பு உருக்கி
மூச்சையே நிறுத்தி...
உயிரின் விசைகொண்டு
எனை புறம் தள்ளி பெற்றேடுத்தாய்
பத்தாவது மாதம்...

குந்தியின் தேசம் இது...
குப்பைத்தொட்டிகள் இருந்தது...
வறுமையும் விரட்டியும்  பசி மிரட்டியும்
வீசி எரியவில்லை என்னை

கைகேயின்  தேசம் என்று
எழுதி இருந்த வரலாற்றை
திருத்தி எழுதிய கோசலையே
உன்னால் ராமன் ஆனேன் நான்...

பஞ்சத்தில் வறண்ட
உன் பாலை தேகத்து
மார் கள்ளிச் செடி மட்டும்
என்னை வாழ வைக்கும்
தாய்ப் பாலை சுரந்ததெப்படி?

உன்னை  ஒரு நாள்
பிசாசின் பேச்சில் மயங்கி
முதியோர் இல்லம் சேர்ப்பேன்...
தெரிந்தும் பாசத்தோடு தான் வளர்த்தாய்...

என்  எழுத்துக்கள் விலைமதிப்பற்றது
என்று அன்றே தெரியுமா...
விரல் பிடித்து எழுத்தறிவித்தாய்

குழம்பு கூட ஊற்றிக் கொள்ளாத
அடி  பிடித்த சோறு மட்டும் நீ உண்டு
ருசி சேர்த்து எனக்கு பசியாற்றினாய்...

ஆத்திசூடி  சொன்ன "கந்தலுக்கு"
பொருள் தெரியாத வாழ்கையை எனக்கு தந்தவளே
அதன் அர்த்தத்தை உடுத்தி தான் நீ வாழ்ந்தாயே....
 
கிறுக்கித்  தள்ளுகிறேன்
என் மகன் கவிஞனென்று பீற்றிக் கொள்கிறாய்
எதற்கு வீண் செலவேன்று அலுத்துக்கொண்டவள்
என் மகன் வாங்கிக் கொடுத்ததென்று ஊரெல்லாம் பகட்டு காட்டினாய்...

நான் அழுதிருக்கிறேன்...
என் கண்ணீர் கரித்ததில்லை...
காரணம்  நீ...
பசி  என்ற சொல்லை
புத்தகத்தில் படித்திருக்கிறேன்
உணர்ந்ததே இல்லை காரணம் நீ...
பத்து மாதம் வயிற்றிலும்
மீத காலம் வாழ்கையாலும்
என்னை நீ தான் சுமந்து திரிகிறாய்...

உனக்கு தாயாகும் ஒரே ஒரு வரம்
அடுத்தஜென்மம் வரை காத்திருக்க வைப்பான் அந்தக் கடவுள்
தெய்வமேநீ கொடு இந்த வரத்தை இந்த ஜென்மத்திலே...

அவனுக்கு அன்னை மட்டும் இல்லாமலிருந்திருந்தால்
அந்தக் கடவுள் கூட
ஒரு அநாதை இல்லத்தின் வாசல் தொட்டிலில் தான் கிடந்திருப்பான்...
ஆனால்  அநாதையாய் இல்லை...
அங்கேயும்  ஒரு தாய்மை இருந்திருக்கும் காத்திட...
 
இனிய  அன்னையர் தின நல் வாழ்த்துக்கள்

பின்குறிப்பு - கற்ப கால மும்மாத பிரிவுகள் கடினங்கள் பற்றி இங்கே படித்து எழுதினேன்.

oOo 

இணையான கவிதை - தந்தையர் தினம்

oOo



8 comments:

  1. its a good one :) liked it

    ReplyDelete
  2. நல்ல கவிதை
    அம்மா தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் அண்ணா :D

      Delete
  3. “ இனிய அன்னையர் தின வாழ்த்துகள் “

    ReplyDelete
    Replies
    1. இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் அண்ணா :D

      Delete
  4. ரொம்ப ரொம்ப நல்ல இருங்குங்க ....சூப்பர் ..

    ReplyDelete
  5. ரொம்ப ரசிச்சி படிச்சேங்க எல்லாத்தையும் கடைசி வரி லாம் ரொம்ப நாலா இருக்குங்க ,....நல்லா எழுதுறிங்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி கலை.... இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் அண்ணா :D

      Delete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்