Tuesday, December 3, 2013

வெற்றிடத்தின் கனம்


மூன்று நாள் முன்னாள் அழைக்கையில்
வேறு அழைப்பில் இருப்பாதாய் சொல்லப்பட்ட
நண்பனின் “சாரி மச்சி. கொஞ்சம் பிஸி. சொல்லுடா”
குறுஞ்செய்தி வந்து எழுப்பிய ஓர் இரவது.
“சும்மா தான். தூங்கு, பிறகு பேசலாம்”.
என்று அனுப்பிவைத்தேன். மூன்று நாளில்,
பேச நினைத்த வார்த்தைகள் தொலைந்துவிட்டேன்.
வேறு என்ன சொல்ல?

நேரம் இரவு 3.28.
வாட்ஸாப்பில்
அவளுடைய last seen 2.57 என்றது.
9.50க்கு அனுப்பிய  ”"Hi”க்கு பதிலில்லை.
உறங்கி இருப்பாள். ஏமாற்றிக்கொண்டேன்.
last seen பற்றி யோசிக்கும் அளவு
என் இருதயம் புத்திசாலி இல்லை.

மூன்று கோடியாவது முறையாக
அன்புத் தோழி எழுதிய பக்கத்தை வாசிக்கிறேன்.
“பத்திரிக்கை அனுப்புகிறேன். நிச்சயம் வரவேண்டும்.
எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும்.
அவள் மகனுக்கு என் மகள் தரவேண்டும்” என்று விரிந்தது.
திருமண மேடையில், புகைப்பட நிமிடங்களில்
அவள் மாமியார் முறைக்க கடைசியாய் பேசிய நியாபகம்.
பேசலாம் என்றழைக்கையில்
அந்த எண் உபயோகத்தில் இல்லை என்றது.
மூன்று கோடியில் முதல் முறையாக
அழுகிறேன். மீண்டும் ஒரு முறை வாசிக்கிறேன்.
நல்ல வேளை. அழைப்பை எடுத்து யாரென்று கேட்டிருந்தால்?
இன்னமும் வலித்திருக்கும்.

மார்புகூட்டில் இடப்பக்கம்,
எதோ ஒரு கனம்.
உதறி எறியப்பட்டு நிராகரிக்கப்பட்டு மறக்கப்பட்ட
இருதயம் கிடந்து கனக்குது.
“என்னை நிராகரித்து விலகிப் போக அவர்கள் யார்?”
என்று சொல்லிவிடத்தான் ஆசை.
ஆனால் எதோ ஒரு கனம்
மார்புகூட்டின் இடப்பக்கம்.

எதுவும் இல்லாமல்
என் வாழ்க்கைக்குள் வந்தவர்கள் எல்லோருமே
வெறும் கையுடன் தான் திரும்பிப் போகிறார்கள்.
இருந்தும் எதோ ஒன்றை
நான் தொலைத்திருக்கிறேன்.
நிறைய நினைவுகளை விட்டு சென்றிருக்கிறார்கள்.  

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்