Thursday, November 21, 2013

தராசுமுள்ளின் கூன்


பள்ளி கட்டிடங்களுக்கு
விதிமுறைகள் வகுக்க
சில பூக்கள் சாம்பலாக வேண்டியிருந்தது.

ஒழுங்கில்லா பள்ளி வாகனங்கள்மீது
நடவடிக்கை எடுக்க
ஒரு ஸ்ருதி சக்கரத்தில் நசுங்க வேண்டியிருந்தது.

பெண்களுக்கெதிரான வன்கொடுமை
எதிர்த்து சட்டம் கொண்டுவர
ஒரு நிர்பயா கொல்லப்படவேண்டி இருந்தது.

தராசுத் தட்டு ஒரு பக்கம் சாய்கிற பொழுதெல்லாம்
நம் பிணங்களை காட்டி சட்டம் எழுதி
நிமித்தி நிறுத்தி இருந்தார்கள் தராசு முட்களை.

மூன்று நாள் கழித்து,
அதிகப்படியாய் ஒரு வருடத்தில்...
அந்த பூக்களை
அந்த ஸ்ருதியை
அந்த நிர்பயாவை
நீங்கள் மறந்துவிடுவீர்கள்.
அஹிம்சைக்காரன் சிரிக்கிற நோட்டை கொடுத்துவிட்டு
அத்துமீறல்கள் சுதந்திரமாய் திரியத்தான் போகிறது.

மீண்டும் தராசு முட்கள்
நிமிர்ந்து நிற்க
பிணங்கள் கேட்கலாம்...
ஒரு நாளுக்கு ஒரு வீட்டிலிருந்து என்னும் கணக்கில்
ஒரு நாள் உன் வீட்டிலும். 

2 comments:

  1. nama enna seiyalam nu nenaikiringa..

    ReplyDelete
    Replies
    1. மனமிருந்தா என்ன வேனும்னாலும் செய்யலாம் சகோ :)

      Delete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்