பொம்மை வாங்கவென
கடைக்கு இழுத்து சென்றாள் என்னை.
கடையை சுற்றி வந்த திவ்யா குட்டி,
பிடித்த பொம்மையென
இரண்டை எடுத்து வைத்திருந்தாள்.
என் கூடையிலோ பாதிக் கடை இருந்தது.
அவளுக்கு பொம்மை வாங்க போய்
நான் குழந்தையாய் மாறி இருந்தேன்.
o
என்னிடம் காற்றூதி தரச்சொல்லி
பலூனொன்றைக் கொடுத்தாள்.
இரண்டு முறை ஊதியதும். போதுமென்றாள்.
நான், இன்னும் ஊதலாம் என்று ஊதினேன்.
மீண்டும் போதுமென்றாள்.
நான் இன்னும் பெரிதாய் ஊதினேன்.
போதும் போதும் போதுமென்றாள்.
இன்னும் ஒரே முறை என்று ஊத,
வெடித்து சிதறியது பலூன்.
கண் கலங்கியே விட்டாள் திவ்யா.
துடைத்துக் கொண்டு,
அடுத்த பலூனைக் கொடுத்து
இதையாவது உடைக்காமல் ஊதித் தாவென்றாள்.
தனக்கதிகமானதை தாண்டி
ஆசைபடுவதும் இல்லை.
தன்னை விட்டு போனதையே எண்ணி
கண்ணீர் சிந்துவதும் இல்லை திவ்யா குட்டி.
o
அலுவலகத்திலிருந்து வந்த அம்மா,
“செல்லம், மம்மிக்கு முத்தா கொடு என்கிறாள்”.
திவ்யா குட்டி ஓடி போய்
டெட்டி பியரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கிறாள்.
o
திவ்யா குட்டிக்கு பிறந்த நாள்.
தாய் மாமன் சீரென்று என்னால் முடிந்ததென்னவோ
அந்த பத்து ரூபாய் பொம்மை தான்.
பரிசீலாய் கொடுக்க
தகுதி இல்லாத பொம்மை அது என்பது
எல்லோர் பார்வையிலையே புரிந்தது.
ஆனால் என்னவோ,
திவ்யா குட்டிக்கு மட்டும்
பொம்மை ரொம்ப பிடித்திருந்தது.
நான் கொடுத்தது
வெறும் பொம்மையில்லை என்பது
திவ்யா குட்டிக்கு மட்டுமே தெரியும்.
o
ஆயிரம் பொம்மைகள் வந்தாலும்
திவ்யா குட்டிக்கு பிடித்தது
அந்த ஒரே ஒரு பொம்மை தான்.
ஏன்? எதற்கென்றெல்லாம் கேட்காதீர்கள்.
திவ்யா குட்டி சொல்வதாய் இல்லை.
அந்த பொம்மை அவளுக்கு உயிர் அவ்வளவு தான்.
- காதலிக்கப்படாதவன் 07-01-2014
No comments:
Post a Comment