வீட்டுப்பாடம், டீச்சரின் அடி எல்லாம்
திடீரென்று நினைவில் வர
போர்வைக்குள் இருந்துகொண்டு
"அம்மா தொட்டு பாரு.
உடம்பு சுடுதுல. காய்ச்சல் அடிக்குது.
இன்னைக்கு மட்டும் ஸ்கூல்க்கு வேண்டாம் மா"
என்று சொல்லுகிற குழந்தையாய்
எல்லோரையும் மாற்றிவிடுகிறது
இந்த திங்கள் கிழமை
o
இன்னொரு முறை
தாத்தாவை சாகடிக்க மனமில்லாமல்
நண்பனுக்கு திருமணம் செய்து வைக்க
தூண்டும் திங்கள் கிழமை.
அடுத்த வாரமே இந்த தோழனுக்கு
குழந்தை பிறந்தாலும் பிறக்கலாம்.
o
சம்பள நாளுக்கு காத்திருப்பது போல்
நான் மட்டும் காத்துக்கொண்டிருக்கிறேன்.
இந்த திங்கள்கிழமைக்கு.
உனக்கே தெரியும் எதற்கென்று.
ஆனால்,
வெறும் திங்கள்கிழமை மட்டும் தான்
வந்து வந்து போகிறது.
o
வெறுக்கும் அவளை
விரும்பும் என்னை போல
விரட்டினாலும், விரட்டி வந்து
அன்பை சொல்லித்தரும்
இந்த திங்கள்கிழமை
இது தான் உலகின் முதல்
ஒரு தலைக் காதல்
No comments:
Post a Comment