டர்க்கி டவலில் தலைதுவட்டி
வீட்டு பால்கனியில் நின்றுகொண்டு
பளிங்குக் கோப்பையில்
தேநீர் உறிஞ்சிக்கொண்டே
எழுதப்படும் மழைகவிதைக்கும்
ரோட்டோரம்
ஒழுகும் பாலிதீன் கூடாரத்தில்
தலை சாய்க்க இடமின்றி, உட்கார்ந்துகொண்டு
நடுங்கும் கரங்களில், கடுஞ்சாயாவின்
கண்ணாடி குவளையை இருக்க பிடித்துக்கொண்டு
எழுதப்படும் மலைக்கவிதைக்கும்
நிறையவே வித்தியாசம் இருந்தது.
ஒரே வானம் தான்.
ஆனால் இருவருக்கும் வேறாய் பெய்தது மழை.
o
சாலையில் தேங்கி நின்ற
மழை நீரில் விளையாடிய குழந்தை
முதுகில் அடி வாங்கி வீட்டுக்குள் விடப்பட்டது.
பூட்டிய வீட்டின் கண்ணாடி சன்னல்வழி
விளையாடும் தன் நண்பர்களை பார்க்கிறது.
வெளியே இருந்த குழந்தையின் மழைக்கும்
உள்ளே அடைபட்ட குழந்தையின் மழைக்கும்
நிறையவே வித்தியாசம் இருந்தது.
ஒரே வானம் தான்.
ஆனால் இருவருக்கும் வேறாய் பெய்தது மழை.
o
சிலருக்கு சிரிப்பாய். சிலருக்கு அழுகையாய்.
என்னையும், அந்த மழையையும்
எல்லோராலும் வெறுக்கவும் முடியாது.
எல்லோராலும் ரசிக்கவும் முடியாது. - காதலிக்கப்படாதவன்