Friday, February 14, 2014

ஒரு இளவரசியின் கதை

டெட்டி பியர் இல்லாமல்
உறக்கமின்றி புரண்டு கொண்டிருந்தவளை
மார்போடு அணைக்கும் அந்த அரவணைப்பில்,

இரவுகளின் முடிச்சுகளை அவிழ்த்து
இளவரசியின் மந்திர தூக்கம் கலைக்கும்
அந்த இளவரசனின் முத்தத்தில்,

சமைக்கும் ஆசையில்
வெண்டைக்காயென விரலை நறுக்கிக்கொண்டவளை
சமையலறைக்குள் நுழைய விடாமல்
முறுகலாய் கருகி போன அவன் தோசையில்

கோபித்துக்கொண்டதாய் நான் நடிக்கிற பொழுதுகளில்
கண்டுகொள்ளாததாய் நடிக்கிற அவனின் குறும்புகளிடம்
தோற்றுப்போகும் ஊடலின் தோல்வியில்

அவனிடமே சண்டை போட்டு
அவனையே கட்டி உறங்கும் அந்த பொழுதுகளில்

மொட்டை மாடி நிலா மழை,
காற்றுக்கும் அனுமதியில்லாத
அவனுடனான தனிமையினில்

என் ஒவ்வொரு மாதிரியான
"ம்"-க்கும் இருக்கும் அர்த்தத்தை
சரியாய் புரிந்துகொள்ளும் அவன்

கருத்துக்கள் வேறுபடும்போது
கோபித்துக்கொள்பவன் பின்னால்
மிட்டாய் வண்டிபின் போகும் பிள்ளையாய்
ஓடும் நான்

இன்னமும் இன்னமும் காதல்.

கூண்டுக்குள் அடைத்துவிட்டு
பூனையை காவல் வைத்ததாய் நினைத்துவிட்டார்கள்
பூனையும் பழகிக்கொண்டது
என்னோடு வான் பறக்க

இளவரசியாக வளர்க்கப்பட்டவள் நான்.
இளவரசியாகவே வாழ விடுகிறான் அவன். - காதலிக்கப்படாதவன்

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்