தீண்டாமை ஒழிந்துவிடவில்லை
வேறு ஒரு உருவம் எடுத்துள்ளது
குடும்பத்தினருக்கு மட்டும் வாடகைக்கு
என்ற பலகை
நாய்களை அனுமதிக்கிற அந்த வாசல்வழி
எங்களை அழையா விருந்தாளியாக்கிவிடுகிறது
நாங்கள் வந்தாலே மகள்களை
உள் போகச் சொல்லி
முகத்திலடிக்கப்படுகிறது
அபார்ட்மென்ட் வீடுகளின் கதவு
அப்படி செய்வது அவர்களின் மகள்
ஸ்பெஷல் கிளாஸ் போவதை
தடுத்திடுமோ
எங்கள் யோக்கியதனத்தை
அவ்வளவு சோதிப்பது
இவர்களின் வீட்டு கழிவறை சன்னலில்
புகை கசிவதை தடுத்திடுமோ
ஆனந்த விகடனிலும் ராணியிலும்
தொலைந்த நடுப்பக்கத்தை மீட்டிடுமோ
நாங்கள் குளிர்பான பாட்டிலும்
வாழைப்பழ சீப்புமாய் வந்தால்
கீழும் மேலுமாய் பார்த்துவிடுவது
அவர்களின் மகன்
குருப் ஸ்டடி போவதை
தடுத்திடுமோ?
பனை மரம் என்று
எழுதிய இடத்திலிருந்து கூட
எங்களால் பால் குடிக்க முடிவதில்லை
மருமக உடைச்சா
மண்சட்டியும் பொண்ணாம்
எனக்கு நீ மாமியாரும் இல்ல
நான் உனக்கு மருமகனும் இல்ல
இங்க எந்த சட்டியும் உடைபடவில்லை
ஏனோ எங்கள் மீது குற்றசாட்டு மட்டும்
சோதனை நாய்களாய்
எங்களை அவர்களின் கண்கள்
தினம் முகர்ந்து பார்க்குது ஏனோ!!
என்ன முகர்ந்தென்ன
கழுதையால் என்றும்
கற்பூர வாசம் உணர முடியுமா என்ன?
No comments:
Post a Comment