Monday, March 4, 2013

பிள்ளை கறி தின்னும் பூமி

அது பகிர்ந்துண்ண
விரும்பாத காக்கா கூட்டம்

கண் அசந்தால்
பிணமென்று சொல்லியே திண்று தீர்க்கும்
ஆணையும் பெண்ணையும்...

அப்படி என்ன பசியோ?
பிள்ளை கறி தின்றது காக்கா ஒன்று
இந்திய பெருங்கடலின்
மயான தனிமையில்

பிள்ளை கறி தின்றுவிட்டு
திருப்பதி கோபுரத்தில் வந்து
அழகின் அழுக்கை துடைத்து கொள்கிறது...

வெங்கடாசலபதியோ சிரித்துகொண்டே
பார்த்திருந்து கல்லென்று நிருப்பித்துவிட்டான்...
அவன் என்ன செய்வான் பாவம்
அவனுக்கு உண்டியல் துட்டை
கணக்கு பார்க்கவே நேரம் சரியாய் இருக்கிறது

பெரிய புராணத்தில்
பிள்ளைக்கறி சிவன் கேட்கையில்
திருவிளையாடலென்ற கூட்டம்
கோகுலத்தில்
கண்ணன் கோபியரின் தாவணி திருடுகையில்
திருவிளையாடலென்ற கூட்டம்
கலியுகத்தில் இரண்டையும்
ஒரு பேய் செய்கையில் திருவிளையாடலென்று
ரசிக்குது போலும் ...
வரும் நாளில் கோவில்கட்டி
கும்பிட்டாலும் கேட்பதற்கில்லை

யுத்த நீதி வகுத்த
பீஷ்மனே கௌரவருக்காய்
போர்புரிந்த பூமி இது...
இங்கே சகுனியை போய் தர்மனுக்காய்
வாதாட சொல்வதில் என்ன கிடைக்கும்?

ஒரு பிள்ளை கறி

உணவானது இன்று தெரிந்தது
தெரியாமல் எத்தனையோ?
அவர்களுக்காய் கண்ணீர் சிந்த கூட
புகைப்பட சாட்சி வேண்டுது இந்த உலகிற்கு

நீ புதைக்கப்படவில்லை விதைக்கபட்டாய்
என்று புலம்பும் இந்த உலகம்
நீ எத்தனை முறை பிறந்து வந்து இறந்தாலும்
உன் உறவுகள் சிந்திய ரத்தத்திற்கு பதில் கிடைக்காது
என்று சொல்லாமல் சொல்கிறது...
ஆம் நீ புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டாய்

நாலு கண்ணீர் நாலைந்து மெழுகுவர்த்தி
நாற்பது வரி கவிதை
முகபுத்தகத்தில் வீரமகன் என்று
புறநானூறை மேற்கோளிட்டு நானூறு லைக்...
நல்லவேளை இந்த பாவப்பட்ட பூமியிலிருந்து
அவனுக்கு வேகமாய் ஒரு விடுதலை
நிச்சயமாய் அவன் ஆத்மா சாந்தியடையும் ...

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்