Tuesday, June 25, 2013

யாருமற்றவன்

எப்படி இங்கு வந்தேன் ?
தெரியாது …
யார் கூட்டி வந்தது ?
தெரியாது …
அழைத்து வந்த தேவை தீர்ந்திருக்கலாம்
இல்லை
அழைத்து வந்ததே வீணென்று நினைத்திருக்கலாம்.
விட்டுவிட்டுப் போய் விட்டனர், என்னை…

ஆம்
தேவை தீர்ந்ததும்
தூக்கி எறிவதொன்றும்
இவர்களுக்கு புதிதில்லையே … எனக்கும் பயமில்லையே …

எனக்கென்று நேரம் இல்லை,
என்னை அழைத்துவந்தது நினைவில் இல்லை,
என்னை சேர்க்கும் இடம் தெரியவில்லை,
தவற விட்டுவிடப்போகும் பேருந்து,
அவசர வேலை…
என்று அவர்களுக்கு சொல்லி கொள்ள
ஆயிரம் காரணங்கள் இருந்தது.

யாருமே செய்வதில்லை நான் மட்டும் ஏன்?
எப்படியும் அவர்கள் செய்வார்களே. அப்புறம் ஏன் நான்?
என்று ஒவ்வொருவர் பக்கமும்
ஒரு நியாயம் இருந்தது …

எனக்கென்று
கவலைபடக் கூட ஆள் இல்லாமல்
தெருவில் நிற்கிறேன்…

                                   இப்படிக்கு தெரு குப்பை…

Monday, June 24, 2013

என்னை வாசித்த கவிதை


ஒரு போட்டிக்கென
எழுதி வைத்த கவிதையை
எடுத்து படித்துவிட்டு
நன்றாக இருப்பதாய் சொன்னாள்…

போட்டி துவங்கும் முன்
வெற்றி பெற்றிருந்தது என் கவிதை
o
பிடித்திருப்பதாய்
அவள் சொன்ன பிறகு
என் சோக கவிதை கூட
அன்று முழுக்க சிரித்திருக்கிறது

என்னை போலவே

o
தனக்கு எழுத வருவதில்லை
என சொல்லி உதடு சுளித்தாள்…

என்னை எழுத வைத்துகொண்டிருப்பது
அவளென்று தெரியாமல்

o
அவள்களைவிடவோர்
ஆகச்சிறந்த கவிதையை எழுதி
அவளுக்கு கொடுக்க முயற்சித்துகொண்டிருக்கும்
அவன்களை தான்
இந்த உலகம் கவிஞன் என்கிறது..

என்னையும்…

தோற்று போன எல்லா கவிஞர்களும்
காதலை எழுதுகிறார்கள்
வெற்றி பெற்றுவிடுகிறார்கள்

நானும் கூட

o
என் கவிதைகள்
எல்லாமுமே கற்பனைகளே.
எல்லாவற்றிலும் பொய் கலந்திருந்தது.

“நான் உன்னை காதலிக்கிறேன்”
என்று சொன்னதைத் தவிர…

Sunday, June 23, 2013

நீ எனப்படும் நான்



கடவுள் சொல்ல கேளாமல்
சாத்தான் சொல் மீறாமல்

ஏவாள் தர
ஆப்பிள் தின்ற ஆதாமிற்கு
கடவுள் தந்த காதல் சாபமாம்.

அந்த கடவுளிடம் சொல்லுங்கள்
உண்மையில் அது வரமென்று.

காதலே!
நீ எனக்கான வரம்.

o

ஒரு பாதி என்பது
ஈசனின் இழப்பல்ல.
அவ(ளென்னும்)ளின் மறுபாதி
அவனை நிறை செய்த லாபம்

நீ என்னை
நிறை செய்த சரிபாதி

o

உன்னை காதலிக்காத
அவளை எப்படி காதலிக்கிறாய்
என்கிறார்கள்…

யாருக்கும் என்னை போல்
காதலிக்கத் தெரியவில்லை…
வேறு என்ன சொல்ல?

நான் உன்னை காதலிக்கிறேன்
இது இறவாத காலம்…

o

என் மனைவி அதிர்ஷ்டசாலி என்பதை
நீ சொன்ன பிறகு தான் தெரிந்தது
நான் துரதிர்ஷ்டசாலி என்பது…

நான் எனக்கான சாபம்…

Thursday, June 13, 2013

நின்ற(றாலும்) மழையில் நனைபவன்

கொட்டும் மழை.
எல்லோரும் ஒதுங்கி நிற்க
நான் மட்டும் இறங்கி நடந்தேன்…

எல்லோரும் என்னை
கிறுக்கனாய் பார்த்தார்கள்

அடுத்த நாள்
அந்த மழை இல்லை. வெயில்.

ஒதுங்க யாருக்கும் நேரம் இல்லை
ஓடும் கால்களுக்கு
பொசுக்கும் சூடு பொருட்டாய் தெரியவில்லையோ?

ஓரத்தில் ஒதுங்கி நின்ற எனக்கு
இன்று எல்லோரும் கிறுக்கன்களாய் தெரிந்தார்கள்

o.o.o.

அந்த மழையில்
இதற்கு முன் வந்த
அந்த மழையை போலவே

அவர்களுக்கு
சூடாய் தேநீர் தேவை
காதோரம் இன்னிசை தேவை
கதகதப்பாய் காதல் முத்தம் தேவை
உயிர் வரை சிலிர்ப்பூட்டும் குளிர் தேவை
இதை எல்லாம் தருகிற மழை தேவை

இப்படி தேவைமட்டும் படுகிற
மனிதர்களை(?) பார்த்து
மழைக்கு சலித்து விட்டது…

எல்லாம் தர தயாராய் இருக்கும்
அவர்களைத் தேடி தான்
மழையும் எப்பொழுதாவது வருகிறது

o.o.o.

கப்பல்கள் கவிழ்ந்த பிறகும்,
சிரிக்க நீ குழந்தையாய்
இருந்திருக்க வேண்டும்

                                                                        - #R#

குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்