இனி யாருக்கும்
வெறுப்பதற்கென்று
என்னிடம் எதுவும் இருக்காது.
இருந்தால் இனியும்
மறைக்க தேவை இல்லை.
என்னிடம் எடுத்ததை
கொடுக்கும் அவசியமில்லை
இன்னும் வேண்டுமென்பது
எடுத்துக்கொள்ளலாம்.
இனி அனுமதியும் தேவையில்லை.
அழுதுகொண்டிருந்தவர்
கண்ணீரில் எல்லாம் கலந்திருந்தது
நான் கொடுக்க மறந்த கடன்,
நான் பகிராத வங்கி கடவுச்சொல்,
நான் எழுதாத உயில்
என்று எதோ ஒரு கவலை.
ஒரு ரோஜா மாலை
கொஞ்சம் கண்ணீர்
நிறைய பொய் ஒப்பாரி
பகட்டாய் கருமாதி சீரென்று
இவ்வளவு தான்
அவரவர் பங்கிற்கு அன்பு காட்டப்பட்டது.
கட்டாயத்தில் வந்து
கடமைக்கேன்று
இருதுளி கண்ணீர் சிந்திவிட்டு
கடைசி பேருந்தில் ஓடிய அவசரங்கள்
கொண்டு வந்து எரிகாட்டில்
தனியாய் விட்டுப் போனார்கள்.
திரும்ப எழுந்து வந்திடுவேனோ
என்று பயம் போல்…
முழுதாய் எரிந்து முடியும் வரை
கவனமாய் பார்த்தும் கொண்டார்கள்.
எஞ்சி இருந்த சொத்து
தங்க முட்கிரீடமும், மர சிலுவை…
முள்ளாயிருந்தாலும்
யாருக்கென்பதில் சண்டை. தங்கமல்லவா?
அந்த வீட்டு முற்றத்தில்
சிலுவையும் நான் இறந்த துக்கமும்
கேட்பாரற்று கிடந்தோம்.
மூன்று நாட்களில்
ரோஜா குப்பைகள் காணாமல் போனது,
கூடிய அன்பு கூட்டங்களும்.
பதினாறாவது நாள்
வீட்டில் பத்தி வாடை மாறிப்போனது,
நான் இல்லாத இழப்பும்.
முப்பது நாள் கழித்து
அணையா விளக்கு மீண்டும் தூசிக்கு,
என் நினைவுகளோடு.
மொத்தம் வெந்து முடிந்த பின்னும்
எரி மேடையில்
சாம்பல் தகித்துக் கிடப்பது போல்
அந்த இரு கண்ணில்
மட்டும் எனக்கான கண்ணீர்
வற்றாமல் இருந்தது…
என் இந்த மரணம்…
வாழ்வதைக்காட்டிலும்
அவ்வளவு எளிதானது.
சாவதைக்காட்டிலும்
கொஞ்சம் கடினாமனது
எல்லாம் இருந்தும்
அநாதை பிணம் நான்...