"என்ன ஆனதென்று"
விசாரிக்கும் அக்கறைகளை
வழக்கம் போல்
"ஒன்றும் இல்லை, சும்மா "
என்று ஏமாற்றி விடுகிறேன்...
அந்த ஒன்றுமில்லைக்கு பின்னால்
உன் மடியினுள் புதைந்து அழுவதற்கான
அழுகையை சுருட்டி வைத்திருந்தேன்.
யாருமே மீண்டுமொருமுறை கேட்டகவில்லை.
என்னை நிரகரித்திருந்தார்கள்.
என்னை மறந்திருந்தார்கள்.
சுமையென்று ஒதுக்கியிருந்தார்கள்.
அதற்கான காரணமும் வைத்திருந்தார்கள்.
எப்படி தேவைபடுவதற்கு, அப்போ
காரணம் இருந்ததோ அதே போல்
இப்போ தேவைபடாததற்கும்.
கண்களைப்போல் காதுகளையும்
முன்னாடி வைத்திருந்திருக்கலாம்...
இப்படி, என் முதுகிடம் பேசுபவர்களை
கேட்க நேர்ந்திருக்காது. தேவைப்பட்டிருக்காது.
என் smileyகள் எனக்காய்
பொய் சொல்ல கற்றுக்கொண்டது.
என் உதடுகள் பல் காட்டி
அழுவதற்குக் கற்றுக்கொண்டது
என் இரவுகள்
என் கண்ணீரில் சாயம் போய்தான்
பகலாய் வெளுக்கிறது...
விடிந்ததா? தெரியவில்லை.
தண்ணீர் பஞ்சத்தில்
என் தேவதைகளின் இதயம்
ஈரமின்றி வறண்டு போனது...
என் கண்ணீர் கேட்கிறார்கள்
ஈரப்படுத்திக்கொள்ள
எவ்வளவு கொடுத்தும் போதவில்லை.
ஈரமில்லா தேவதை சபிக்கிறாள்.
எல்லோரும் காயபடுத்த துடிக்கும்
என் இருதயத்தை கல்லாக்கி கொண்டேன்...
காயப்பட்டு போனார்கள்.
கண்ணீர் வடித்தேன், அவர்களுக்கு தெரியாது.
காய்ச்சலின் கசப்பாய்
என் நாட்களை விழுங்கிக்கொள்கிறேன்.
முடியாவிடினும் தனியொரு ஆளாய்
தின்று தீர்க்கிறேன்.
எப்போது முடியும் இது.
யாருக்கும் தெரியாமல்
யாருக்கும் சுமையாய் இல்லாமல்
என்னை தொலைத்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்
நான் தொலைந்த பிறகு
சிரித்தவர்கள் இருக்கலாம். அழுதவர்கள் இருக்க கூடாது.
என் இருப்பினில் வருந்தியவர்கள்
என் இழப்பினில் பொய் கண்ணீர் எதற்கு
கொண்டாடிவிட்டு போகட்டும்...
No comments:
Post a Comment