மறக்கவில்லை இன்னும்,
நியாபகத்தில் இருக்கிறது
அந்த இரவு…
முகம்தெரியாத இருட்டாய் இருந்தாலும்
அவளை அடையாளம் கண்டுகொள்வதொன்றும்
அவ்வளவு கடினமாய் இல்லை அன்று.
அவளே தான் அது…
ஒரு குழந்தையை என் கைகளில் திணித்தாள்.
இன்னும் காதுக்குள் எதிரொலிக்கிறது
அந்த குழந்தையின் அழுகுரல்
இன்னும் என் கையில் பிசுபிசுக்கிறது
அந்த குழந்தையின் மென்மை ,
அந்த குழந்தையின் பிஞ்சு கைகள்,
பிளவாத பூ உதடு
இன்று நினைத்தால் கூட
மயிர்கூச்சிடுகிறது உயிர் கூசுகிறது…
இன்னும் நியாபகத்தில் இருக்கிறது
என் அவள் ஜாடையில் இருந்த அந்த குழந்தை
இன்னும் நியாபகத்தில் இருக்கிறது.
என்னவாயிற்று. தெரியவில்லை.
ஒன்றும் பேசாமல் கத்திக்கொண்டு
குழந்தையின் குரல்வளையை அறுக்கத்தொடங்கினால்…
வெண்ணையில் இறங்கும் ஊசி போல
அமைதியாக அறுபட்டது…
தோல்,நரம்பு என மெல்ல நிதானமாய்…
குழந்தையும் அழாமல் வாங்கிக்கொண்டது.
ஆனால் எனக்கு வலித்தது.
அந்த வலி,
சுமக்கும் கரு களவுபோகையில்
தாய் கொள்ளும் வலியது
விழித்த கருவிழியில் அமிலத்துளி
விழுந்த வலியது
உயிரோடு இருதயம் வெளிஎடுத்து
சுத்தியால் அடிக்கும் வலியது
வார்த்தைக்குள் அடங்காத வலியது
உங்களால் புரிந்துகொள்ள முடியாத வலியது
எதுவுமே நினைவில் இல்லை.
ரத்தம் நனைத்து விழித்துக்கொண்டேன்.
என்னவாயிற்று அந்த குழந்தைக்கு?
எதுவுமே நினைவில் இல்லை
அந்த வலியை தவிர
எதுவுமே நினைவில் இல்லை
நினைத்தாலே பிடரி நரம்புக்குள்
மெல்ல பரவுது அந்த வலி…
எழுந்து பார்த்தேன்
அந்த குழந்தை என் அருகே
அமைதியாய் உறங்கிக் கொண்டிருந்தான்.
வேப்பம் பூ தேனைப் போல
அந்த பிஞ்சுதட்டில் சிறுப் புன்னகை…
இப்போது வலிப்பதில்லை.
எப்பேர்பட்ட வலியும்
அந்த புன்னகையில் தீர்ந்துவிடுகிறது