Sunday, October 14, 2012

இரண்டாவது நாக்கு

பீசா கடையிலிருந்து ஐந்திலக்க சம்பளம்
ஐபோனில் அம்மாவிடம் கேட்கிறான்...
சாப்பிட்டியா அம்மா, என்ன சாப்பிட்ட?
நெல்லு சோறும் சாம்பாரும்
என்று பொய் உரைக்கிறாள் ...
கூழ் குடித்த வட்டிலில் கோலமிட்டபடி

பொய்யின் முந்தியில் முடிஞ்சுவச்ச காசு
இவன் எதிர்காலத்து உயிலெழுதா சொத்து

பத்துமாத பாசம் மூன்று முடிச்சு நேசம்
தலைஎழுத்தை  மாற்றிவிட அரபுநாடு போனவனிடம்
கேட்கிறது "வேலஎப்படி, தங்குற இடம் வசதியா" என்று
ராச வேல; போக வர காரு; தங்க வீடு
என்று பொய் உரைக்கிறான்
ரப்பர் ரோடு போட்ட களைப்பில் உறங்கிய
 20 பேருடன் ஓர் சிற்றறையிலிருந்து ...

பொய் வீச்சமெடுத்த அந்த அறையிலும்
அவர்களின் கனவு மட்டும் மணந்து கிடந்தது

நான் ஆட்சிக்கு வந்தால் அதை தருவேன்
நான் ஆட்சிக்கு வந்தால் இதை தருவேன்
என்று எதை எதையோ சொல்லி
எல்லாவற்றையும் எடுத்து போக
போட்டி போடும் அரசியல்வாதிகளின் பொய்கள்...

இந்த பொய்க்கு அந்த பொய் பரவாயில்லை
ஏதாவது  மா(ஏ)ற்றம் வருமென்ற நம்பிக்கையில்
எதோ ஒரு பொய்யிடம் சிக்கிவிடுகிற மக்கள் ...

எதோ ஒரு முதலிரவு அறையில்
நீங்க தான் என் முதல் காதல் என்கிற பொய்
காதலை தொலைத்தவன் நண்பனிடம்
அவளை(னை) மறந்துவிட்டேன் என்கிற பொய்
உன் மேல் சத்தியமாய் இனி
அந்த கருமத்தை தொடமாட்டேன் என்கிற பொய்
அம்மா  ஸ்பெஷல் கிளாஸ் என்கிற பொய்
அடுத்த பரிச்சையில் நல்ல மார்க் எடுப்பேன்
இப்ப ஒரு தடவ வாங்கி கொடுங்க என்கிற பொய்
"இந்த வருடம் முதல்" ஆண்டு முதலே
தொடங்கிவிடும் எதோ ஒரு பொய் 
 மச்சான் உன்ன தான் பார்க்கிறாள் என்கிற பொய்

என்று எதோ ஒரு பொய்யின்

கோர பல்லிடுக்குகளில் சிக்கி உலகம்
இரையாகி கிடக்குது ...
ருசி கண்டுவிட்டது உலகத்தின் நாக்கு

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்