Thursday, April 25, 2013

க்ஆ-த்அ-ல் – 4


இரட்டைக் குழந்தைகள்.
காலம் காதல் அவர்கள் பெயர்.

சுவரில் காதல் ஒரு ஓவியம் வரையும்
காலம் திடீரென்று
அடித்து, அழித்து, காதலை அழவைத்துவிட்டு
தான் விரும்பிய ஓவியம் வரையும்…
ஓவியம் விரியும்…காதல் கரையும்
அந்த சுவர் என் வாழ்க்கை…

அவர்கள் இருவரும்
ஒரு மிட்டாய்கென சண்டைபோட்டு,
அமைதியாகி சேர்ந்துவிடுகிறார்கள் நிமிடத்தில்…
மிட்டாய் மட்டும் மண்ணில்.
அந்த மிட்டாய் என் இரவு…

குழந்தை கடித்தால் அம்மாவிற்கு வலிக்குமா?
வலிக்காது என்பது பொய்…
வலிப்பதை வெளியில் சொல்வதில்லை…
இரண்டு குழந்தையின்
கடியை ரசிக்கும் தாய் என் நெஞ்சம்

காதல் ஒரு குழந்தை
காலம் ஒரு குழந்தை
அவர்கள் இருவர் கையில் மாட்டி
உடையும் பொம்மை நான்…
.
.
க்ஆ-த்அ-ல் – 1 | 2 | 3




Friday, April 19, 2013

முடிந்த இரவு விடியாத பகல்

அழுத பிள்ளை உணவு உண்ணவென
வானம் வந்த நிலா…
இன்னும் விழித்து கிடக்கிறது
பிள்ளை உறங்கும் அழகை ரசித்தபடி…

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு ஒரு முத்தமென
எண்ண தொடங்கிய காதலர்கள்
எண்ணுவதை மட்டும் விட்டுவிட
பரிமாறிக்கொண்ட முத்தங்கள் நட்சத்திரமாய்

“தூங்கிட்டியா செல்லம்” அவள் விரல் மடலில்
உறங்கவே தொடங்காத அவன் இரவு
இரண்டு மணிக்கெல்லாம் விடிந்து விடுகிறது…

எல்லோருக்குமான  இரவு நகர்ந்து கொண்டிருக்க
இவனுக்குமட்டும்மேனோ
தூண்டில் முள் முழுங்கிய மீனின் ரணமாய்
இரவு முடியவும் இல்லை  பகல் விடியவும் இல்லை

இரவு பண்ணிரெண்டானால் என்ன?
பரவாயில்லை நான் அனுப்பிய
குட்மார்னிங் குறுஞ்செய்திக்கு பதிலனுப்பி
என் நேற்றை விடிய விடு…
இல்லை போனால் போகட்டும்
சற்று முன் அனுப்பிய ஸ்வீட் ட்ரீம்ஸ்க்காவது
பதிலனுப்பி இன்றை முடிய விடு 
நீ என்றோ அனுப்பிய குறுஞ்செய்தி ஸ்மைலி
என்னை சிரித்து கொல்லுதடி…
முடியாத இந்த நாள் என்னை
எங்கோ இழுத்து செல்லுதடி

கடவுளின் கண்ணீர்

முன்குறிப்பு -
  • எல்லாம் கற்பனையே... யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
  • கடவுள்களே நீங்கள் என் நண்பர்கள் என்கிற உரிமையில் வம்பிழுத்துவிட்டேன். மன்னிக்கவும்.
  • இங்கே என் கடவுள்களை பற்றி நான் பேசி உள்ளேன். யாரவது வந்து ஏன் என் கடவுளை பற்றி பேசினாய் என்று கேட்டால்என்னிடம் பதில் இல்லை. மன்னிக்கவும்.
    யாரைபற்றியும் கவலைபடா(ட நேரமில்லா)த
    மாநிலத் தலைநகரின் மூலையில்
    ஒரு ஆண்கள் தங்கும் அறை அது…

    மூலையில் சிலுவை மரம்
    தரையில் தங்க சங்கு சக்கரம் அடகு ரசிது
    தூசி படிந்த ஹம்சதூளிகா மஞ்சம்* நான்கு

    மூன்று மாத கடன் பாக்கியுடன்
    நாயர் கடை பையன் வைத்துவிட்டு போன
    டீ யில் ஒரு ஈ உயிர் தியாகம் செய்திருந்தது…

    சிவந்த கண்கள் முழுக்க வெறித்த பார்வையுடன் லட்சுமிமணாளன்
    மறுகன்னம் காட்டிய வலியுடன் பரமபிதா
    பழைய செய்திதாளில் மூழ்கிய நபிகள்
    நிம்மதி இழந்து குறுக்கும் நெடுக்குமாய் அலையும் புத்தன்

    ஆண்கள் தங்கும் அறை அது…

    என்னை சிலுவையில் அறைந்த
    கல்வாரி மலையை குவாரிகாரனுக்கு தின்று தீர்த்துவிட்டான்
    என்னை அறைந்து சிலுவை நட வேறு இடம் வாங்கலாமென்றால்
    சதுர அடி ஆயிரம் ரூபாயாம்!!
    மனித பிறப்பிற்கு மட்டும் தான் சாவதற்கு கூட காசு வேண்டும்
    இந்த ஈயை பார் எவ்வளவு நிம்மதியாய் மரணம்…
    முடிந்தால் மூன்றாம் நாள் உயிர்தெழாத ஆணி கொண்டு
    என்னை அறைந்து விடுங்கள் அடுத்த முறை…
    அமைதியை உடைத்தார் பரமபிதா

    நீ பரவாயில்லை மச்சி ஆயிரம் ரூபாய் போதும்
    இந்த பாவியின் உலகிலிருந்து தப்பித்துவிடுவாய்…
    என்னை பார்… இந்த பாவிகள் கொலைகளை செய்துவிட்டு
    புனிதம் என்கிறார்கள், என் பெயரை சொல்கிறார்கள்…
    அந்த புத்தகத்தில் எவ்வளவோ நல்லது சொல்லி இருக்கிறேன்…
    அதில் ஒன்றை கூட கேட்டதில்லை…
    அழிவை மட்டும் பல் இழித்து கொண்டு கடைபிடிக்கிறார்களாம்…
    பேசாமல் நானும் புனித போரில் கலந்து கொண்டு
    பாவிகளின் உயிர் பருக போகிறேன்…
    நாளிதழில் இருந்து தலை நிமிர்த்திய நபிகள் இது

    இப்பொழுதெல்லாம் பாற்கடலில் உறக்கமே இல்லை
    கண்ணயர்ந்தால் ஆதிசேசன் அப்பரைசல் கடுப்பில்
    கடலெல்லை கடந்திடுவானோ! பயம்…
    கடலில் எல்லை எது?
    கடந்தால் மீனவர்களை மட்டும்தானா இல்லை
    மீனாட்சி அண்ணனே ஆனாலும் சுடுவீர்களா?
    இதை எல்லாம் சகோதர தேசத்திடம்
    கேட்டு தெரிந்தால் தான் பயமின்றி உறங்க முடியும் இனி…
    சிவந்த கண்களை தேய்த்துகொண்டே அழுது முடித்தார்…

    பேசி முடித்த மூன்று பேரையும்
    நின்று ஒரு முறை பார்த்தான் புத்தன்…
    மீண்டும் குறுக்கும் நெடுக்கும் நடக்க துவங்கினான்
    அவர்கள் எல்லோர் இதயத்துள்ளும் டமால் என்ற ஓசை
    புத்தன் சிரித்துவிட்டன்** போலும்…

    * – ஹம்சதூளிகா மஞ்சம் - அன்னப்பறவையின் இறகு கொண்டு நெய்த புத்தனின் மஞ்சம் .
    **- புத்தன் சிரித்தான். இந்தியா நடத்திய அணுகுண்டு சோதனையின் பெயர் என்று படித்ததாய் நியாபகம். தவறெனில் மன்னிக்கவும்.

முடிவிலியின் தாகம்

கொன்று கொய்து கொண்டையில்
கொண்டிடும் கைக்கு மத்தியில்
கண்டு ரசித்திடும் இதயம்
இருந்தும் அந்த ரோஜா
கிள்ளி கொய்யும் கைக்கே சொந்தமாம்
.
o.o.o
.
கண்ணாடி தன் முன்னின்றவன்
பிம்பம் கொள்கிறது…
பிம்பத்தின் சொந்தகாரனுக்கு பிடிக்காமல்
கல்லெடுத்து அடிக்கிறான்…உடைந்த கண்ணாடியோ
இரண்டு பிம்பம் கொண்டு நகைக்கிறது
சில்லு சில்லாய் நொறுங்கியும்
கண்ணாடி தான் களவாடிய பிம்பம் தரவே இல்லை
தோற்று போய் நகருகிறான்… கண்ணாடியும் தோற்று போகிறது
சில சமயம் இருவரின் தோல்வி தான்
பெரும் தீர்வாகும் … தீர்ப்பாகும்
.
o.o.o
.
மீண்டிட நினைத்து
திறந்த சிறைக்கதவோ
மீண்டும் சிறை கூட்டி செல்லுகிற வாசல்…
தெரிந்தா திறந்தேன்… தெரிந்தே நுழைந்தேன்…
மீண்டிட நினைத்தேன்…

Saturday, April 6, 2013

க்ஆ-த்அ-ல் – 3

 
யாரென்கிறாய்???…
நீ தான் என சொல்லிவிட முயல்கிறேன்
நெடிலுக்கு  மாத்திரை இரண்டாம்…
“நீ” என்பதின் மாத்திரை கோடியானது தெரியுமா?
 
o.o.o
 
நீ முறைப்பதை மொழிபெயர்த்தால் கூட
காதல் கிடைக்கிறது…
ஒரு சொல் பன்மொழி போலும்
 
o.o.o
 
காதலின்  இலக்கணத்தில் மட்டும்
“நான் உன்னை காதலிக்கிறேன்” என்பதின்
இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம்
நான் உன்னை காதலிக்கிறேன் என்பதே…
 
o.o.o
 
இதழும்இதழும் இதழோடு இதழானது…உம்மை தொகை
 
கைப்பேசி முத்தம் பெயரெச்சம்
கன்னத்தில் முத்தம் வினையெச்சம்
இதழ் முத்தம் … இதற்கு மேலும் பேச என்ன மிச்சம்
 
o.o.o
 
நாம் என்பது இரட்டை கிளவி
பிரிந்திருந்தால் ஏது பொருள்?
 

க்ஆ-த்அ-ல் – 1 | 2

 

தங்க கூண்டு

 
கடவுளே! நாங்கள் திருந்தவே மாட்டோம்?
 
காபியோடு எழுப்பிவிட அலாரம் வேண்டும்
அப்பா ATM லிருந்து கறந்து தர கார்டு வேண்டும்
போதையில் வந்தால் காப்பாற்றிவிடும் கேடயம் வேண்டும்
தனித்தனியே வாங்க எவனிடம் துட்டு உண்டு
அம்மா ஒன்றை படைத்துவிடு
 
“நான் முதலில் உச்சரித்த கவிதை நீ
மண்ணில் வாழும் தெய்வம் நீ”
என்ற குறுஞ்செய்தி கவிதையில் சிக்கனமாய் முடியும் செலவு …
 
கடவுளே! நாங்கள் திருந்தவே மாட்டோம்?
 
அம்மியும் ஆட்டுரலும் மிக்சி ஆச்சாம்
எவனோ சொன்னான்…
யாருக்கு வேண்டும் கட்டிவந்தவள்
கெட்டிக்காரி. எதிர்த்து பேசாமல் எல்லாம் செய்வாள்
அன்பே என்ற ஒற்றை வார்த்தை போதும்
 
கடவுளே! நாங்கள் திருந்தவே மாட்டோம்?
 
நாங்கள் காதலிக்கலாம்
அது கலாச்சார வளர்ச்சி
அவள் எப்படி நண்பனிடம் பேசலாம்
அது எவ்வளவு பெரிய நாகரிக சீர்கேடு
நாங்கள் பொறுப்பான அண்ணன் தம்பிகள் தெரியுமா?
 
கடவுளே! நாங்கள் திருந்தவே மாட்டோம்?
 
மணி கட்ட எலியிடம் கழுத்து நீட்டும்
பூனைகள் நாங்கள் …
எலிக்கு தெரியுமா பூனையின் பல் கூர்மை
அவளும் அப்படித்தான்
வெளி பிரச்சனைகளுக்கு பயப்படவே
அவளுக்கு நேரம் சரியாய் இருக்கிறது…
கூடவே வளரும் வாழும் பிரச்னையை
புரிந்து கொள்ள நேரம் போதவில்லை அவளுக்கு
 
கடவுளே! நாங்கள் திருந்தவே மாட்டோம்?
 
மயிலே குயிலே என்றழைத்து
தங்க கூண்டில் சிறைபிடிக்கும்
சாதாரண வேடுவன் நான்(ங்கள்)
கடவுளே! நாங்கள் திருந்தவே மாட்டோம்?
எல்லோரும் இப்படி இல்லை
ஆனால் எல்லோருக்குள்ளும்
இப்படி ஒருவன் இருக்கிறான்
அப்படித்தான் வளர்க்கப்பட்டிருக்கிறோம்

க்ஆ-த்அ-ல் – 2

 
நீ நிலா
நான் நிலா ரசிக்கும் பிள்ளை
நான் உன்னை தான் காதலிக்கிறேன்
நீ என்னை காதலிக்க
வேண்டுமென்றெல்லாம் அவசியமில்லை

o.o.o

யாரென்று தினம் கேட்கிறாயே
நீ தானென்று உனக்கு தெரியாதா?
தாய் தந்தை யாரென்றெல்லாம்
கேட்டா தெரிந்து கொண்டோம்…
என் காதல் உனக்காக வாழும்
இன்னொரு தாய் இன்னொரு தந்தை

o.o.o

நான் சொன்னால் கூட
ஆம், இல்லை இரண்டு பதில்கள்
நீ சொல்லலாம்
 
சொல்லாத வரை
தினம் நீ எதற்கோ சொல்லும்
“ஆம்” இதற்காகவென கேட்கிறதே
 
அறிவியலே!
இதயத்தில் காதுகள் இருக்கிறது

o.o.o

மூன்று ஆங்கில வார்த்தை சொல்லி
கையோடு கைகோர்த்து
பங்குனி வெயில் ரசித்து
கைப்பேசியை எச்சிலால் இம்சித்து
இப்படி இந்த பாழாய் போன
உலகத்தை போலத்தான் காதலித்தாக வேண்டுமா?

தூரத்தில் உனை பார்த்து
உள்ளுக்குள்ளே தினம் சிரித்து
நான் அனுப்பிய குறுஞ்செய்திக்கு தாமதாமாய்
நீ அனுப்பும் அந்த பதிலை நிதம் ரசித்து 
உன் புகைப்படத்தோடு தினம் பேசி 
சிறு பிள்ளை புத்தக மயிலிறகாய் காதலை வைத்து
என்னையே தினமும் அரிசியாக்கி
வளராது என தெரிந்தும்
வளரும் வளரும் என்று காத்து கிடக்கும்
என் நிலை மாறுமா?
என் அன்பு, மயிலே உனக்கு புரியுமா…
மாறினாலும் புரியாவிடிலும் அரிசியாக நான் என்றும்

o.o.o

சொன்னால் காதல் மிட்டாய் போல
அன்றோ இல்லை என்றோ
ஒரு நாள் கசக்கலாம்…
சொல்லாத காதல் கரும்பினை போல
காய்ந்தாலும் செத்து வீழ்ந்தாலும்  இனிக்கும்

என் காதல் கரும்பு 

க்ஆ-த்அ-ல் – 1

குடைகம்பிச் சாரல்

காதலிக்கப்படாதவன்