முன்குறிப்பு -
-
எல்லாம் கற்பனையே... யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல
-
கடவுள்களே நீங்கள் என் நண்பர்கள் என்கிற உரிமையில் வம்பிழுத்துவிட்டேன். மன்னிக்கவும்.
-
இங்கே என் கடவுள்களை பற்றி நான் பேசி உள்ளேன். யாரவது வந்து ஏன் என் கடவுளை பற்றி பேசினாய் என்று கேட்டால்என்னிடம் பதில் இல்லை. மன்னிக்கவும். யாரைபற்றியும் கவலைபடா(ட நேரமில்லா)த
மாநிலத் தலைநகரின் மூலையில்
ஒரு ஆண்கள் தங்கும் அறை அது…
மூலையில் சிலுவை மரம்
தரையில் தங்க சங்கு சக்கரம் அடகு ரசிது
தூசி படிந்த ஹம்சதூளிகா மஞ்சம்* நான்கு
மூன்று மாத கடன் பாக்கியுடன்
நாயர் கடை பையன் வைத்துவிட்டு போன
டீ யில் ஒரு ஈ உயிர் தியாகம் செய்திருந்தது…
சிவந்த கண்கள் முழுக்க வெறித்த பார்வையுடன் லட்சுமிமணாளன்
மறுகன்னம் காட்டிய வலியுடன் பரமபிதா
பழைய செய்திதாளில் மூழ்கிய நபிகள்
நிம்மதி இழந்து குறுக்கும் நெடுக்குமாய் அலையும் புத்தன்
ஆண்கள் தங்கும் அறை அது…
என்னை சிலுவையில் அறைந்த
கல்வாரி மலையை குவாரிகாரனுக்கு தின்று தீர்த்துவிட்டான்
என்னை அறைந்து சிலுவை நட வேறு இடம் வாங்கலாமென்றால்
சதுர அடி ஆயிரம் ரூபாயாம்!!
மனித பிறப்பிற்கு மட்டும் தான் சாவதற்கு கூட காசு வேண்டும்
இந்த ஈயை பார் எவ்வளவு நிம்மதியாய் மரணம்…
முடிந்தால் மூன்றாம் நாள் உயிர்தெழாத ஆணி கொண்டு
என்னை அறைந்து விடுங்கள் அடுத்த முறை…
அமைதியை உடைத்தார் பரமபிதா
நீ பரவாயில்லை மச்சி ஆயிரம் ரூபாய் போதும்
இந்த பாவியின் உலகிலிருந்து தப்பித்துவிடுவாய்…
என்னை பார்… இந்த பாவிகள் கொலைகளை செய்துவிட்டு
புனிதம் என்கிறார்கள், என் பெயரை சொல்கிறார்கள்…
அந்த புத்தகத்தில் எவ்வளவோ நல்லது சொல்லி இருக்கிறேன்…
அதில் ஒன்றை கூட கேட்டதில்லை…
அழிவை மட்டும் பல் இழித்து கொண்டு கடைபிடிக்கிறார்களாம்…
பேசாமல் நானும் புனித போரில் கலந்து கொண்டு
பாவிகளின் உயிர் பருக போகிறேன்…
நாளிதழில் இருந்து தலை நிமிர்த்திய நபிகள் இது
இப்பொழுதெல்லாம் பாற்கடலில் உறக்கமே இல்லை
கண்ணயர்ந்தால் ஆதிசேசன் அப்பரைசல் கடுப்பில்
கடலெல்லை கடந்திடுவானோ! பயம்…
கடலில் எல்லை எது?
கடந்தால் மீனவர்களை மட்டும்தானா இல்லை
மீனாட்சி அண்ணனே ஆனாலும் சுடுவீர்களா?
இதை எல்லாம் சகோதர தேசத்திடம்
கேட்டு தெரிந்தால் தான் பயமின்றி உறங்க முடியும் இனி…
சிவந்த கண்களை தேய்த்துகொண்டே அழுது முடித்தார்…
பேசி முடித்த மூன்று பேரையும்
நின்று ஒரு முறை பார்த்தான் புத்தன்…
மீண்டும் குறுக்கும் நெடுக்கும் நடக்க துவங்கினான்
அவர்கள் எல்லோர் இதயத்துள்ளும் டமால் என்ற ஓசை
புத்தன் சிரித்துவிட்டன்** போலும்…
* – ஹம்சதூளிகா மஞ்சம் - அன்னப்பறவையின் இறகு கொண்டு நெய்த புத்தனின் மஞ்சம் .
**- புத்தன் சிரித்தான். இந்தியா நடத்திய அணுகுண்டு சோதனையின் பெயர் என்று படித்ததாய் நியாபகம். தவறெனில் மன்னிக்கவும்.
No comments:
Post a Comment