இரட்டைக் குழந்தைகள்.
காலம் காதல் அவர்கள் பெயர்.
சுவரில் காதல் ஒரு ஓவியம் வரையும்
காலம் திடீரென்று
அடித்து, அழித்து, காதலை அழவைத்துவிட்டு
தான் விரும்பிய ஓவியம் வரையும்…
ஓவியம் விரியும்…காதல் கரையும்
அந்த சுவர் என் வாழ்க்கை…
அவர்கள் இருவரும்
ஒரு மிட்டாய்கென சண்டைபோட்டு,
அமைதியாகி சேர்ந்துவிடுகிறார்கள் நிமிடத்தில்…
மிட்டாய் மட்டும் மண்ணில்.
அந்த மிட்டாய் என் இரவு…
குழந்தை கடித்தால் அம்மாவிற்கு வலிக்குமா?
வலிக்காது என்பது பொய்…
வலிப்பதை வெளியில் சொல்வதில்லை…
இரண்டு குழந்தையின்
கடியை ரசிக்கும் தாய் என் நெஞ்சம்
காதல் ஒரு குழந்தை
காலம் ஒரு குழந்தை
அவர்கள் இருவர் கையில் மாட்டி
உடையும் பொம்மை நான்…
.
.
No comments:
Post a Comment