கடவுளே! நாங்கள் திருந்தவே மாட்டோம்?
காபியோடு எழுப்பிவிட அலாரம் வேண்டும்
அப்பா ATM லிருந்து கறந்து தர கார்டு வேண்டும்
போதையில் வந்தால் காப்பாற்றிவிடும் கேடயம் வேண்டும்
தனித்தனியே வாங்க எவனிடம் துட்டு உண்டு
அம்மா ஒன்றை படைத்துவிடு
“நான் முதலில் உச்சரித்த கவிதை நீ
மண்ணில் வாழும் தெய்வம் நீ”
என்ற குறுஞ்செய்தி கவிதையில் சிக்கனமாய் முடியும் செலவு …
கடவுளே! நாங்கள் திருந்தவே மாட்டோம்?
அம்மியும் ஆட்டுரலும் மிக்சி ஆச்சாம்
எவனோ சொன்னான்…
யாருக்கு வேண்டும் கட்டிவந்தவள்
கெட்டிக்காரி. எதிர்த்து பேசாமல் எல்லாம் செய்வாள்
அன்பே என்ற ஒற்றை வார்த்தை போதும்
கடவுளே! நாங்கள் திருந்தவே மாட்டோம்?
நாங்கள் காதலிக்கலாம்
அது கலாச்சார வளர்ச்சி
அவள் எப்படி நண்பனிடம் பேசலாம்
அது எவ்வளவு பெரிய நாகரிக சீர்கேடு
நாங்கள் பொறுப்பான அண்ணன் தம்பிகள் தெரியுமா?
கடவுளே! நாங்கள் திருந்தவே மாட்டோம்?
மணி கட்ட எலியிடம் கழுத்து நீட்டும்
பூனைகள் நாங்கள் …
எலிக்கு தெரியுமா பூனையின் பல் கூர்மை
அவளும் அப்படித்தான்
வெளி பிரச்சனைகளுக்கு பயப்படவே
அவளுக்கு நேரம் சரியாய் இருக்கிறது…
கூடவே வளரும் வாழும் பிரச்னையை
புரிந்து கொள்ள நேரம் போதவில்லை அவளுக்கு
கடவுளே! நாங்கள் திருந்தவே மாட்டோம்?
மயிலே குயிலே என்றழைத்து
தங்க கூண்டில் சிறைபிடிக்கும்
சாதாரண வேடுவன் நான்(ங்கள்)
கடவுளே! நாங்கள் திருந்தவே மாட்டோம்?
எல்லோரும் இப்படி இல்லை
ஆனால் எல்லோருக்குள்ளும்
இப்படி ஒருவன் இருக்கிறான்
அப்படித்தான் வளர்க்கப்பட்டிருக்கிறோம்
No comments:
Post a Comment