தான் சீருடை மாட்டி
பள்ளிக்கு ரிக்சாவில் போகையில்
அந்த தெருவொரக்கடையில்
தன் வயது ஒருவன் அழுக்கு உடையில்
அந்த இரும்புகளோடு என்ன செய்கிறான்?
அவன் கடையில் வேலை பார்த்தால்,
அவன் வீட்டுப்பாடங்களை யார் செய்வார்கள்?
அவன் வருங்கால கனவு
என்ஜினியரா இருக்குமா டாக்டரா இருக்குமா?
என்று யோசித்துக்கொண்டிருக்கும் குழந்தைக்கு
மேடையில் கதருடைகள் பேசும்
குழந்தைகள் தினம் எதுவும் காதில் ஏறவே இல்லை.
o
பூக்கால்களை ஷூவுக்குள் திணித்துக்கொண்டு
அம்மாவின் தோசையை வாய்க்குள் திணித்துக்கொண்டு
சொல்லிக்கொடுத்த நேருவின் வரலாறை
மூன்றாவது முறையாக ஒப்புவித்துவிட்டு
ரோசா குத்தி பள்ளியில் போய்
முதல் பரிசை வாங்கிவந்துபிறகு
எல்லா வேசத்தையும் கலைத்துவிட்டு,
களைப்பில் குழந்தையாய் உறங்கிக்கொண்டிருக்கிறான்.
அம்மா சீரியல் டைட்டில் சாங்
ராகத்தில் தட்டிக்கொடுத்துக்கொண்டிருகிறாள்.
என்னைப்போன்ற குழந்தைகளுக்கு குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment