தோற்றுப் போகும் அலாரம்.
உதடு சுட்ட தேனீர் குவளை.
ஈரத்துணியுடன் அறுந்து விழும் கொடி.
சோப்பு போடுகையில் தண்ணீர் நின்ற குழாய்.
பக்கத்து வீட்டுக் குழந்தையின் முத்தம்.
முறைத்துப் போகும் இரட்டைசடை தேவதை.
அன்று குறுஞ்செய்தி அனுப்பாத நீ.
அன்றும் சுவாசிக்காத நான்.
மொட்டை மாடி.
கூடு தொலைத்தலையும் பறவை
ரயில் விட்டுசென்ற அழுகுரல்.
பறிக்க மறந்து, செடி மிஞ்சிய மல்லிகை.
பசித்தழும் குழந்தை.
கல்லெறி பட்ட நாயின் வேதனை.
காலியான சாலை.
அன்றும் உன்னிடம் தர மறந்து
பையில் கணக்கும் அந்த காதல்.
12 மணிக்கு ஆறிப் போன தோசை.
யாரை நினைத்தோ விழித்திருக்கும் நிலா.
நீ என்றோ அனுப்பிய "ஸ்வீட் ட்ரீம்ஸ்"
ஹெட்போன் உளரும் இசை.
போர்வைக்குள் நுழைந்த கொசு.
தூக்கத்தில் நடக்கும் கடிகாரம்.
உறங்காமலும் எனக்குள் கணவாய் நீ.
குப்பைத்தொட்டி நிறைய கசங்கிய காதல்.
இன்னும் ஒரு குவளை "நீ". நான்.
இன்னுமொரு நாள் வாழ்வதற்கு
இதை விட காரணம் வேண்டுமா என்ன?
இன்னுமொரு நாள் உன்னோடு.
No comments:
Post a Comment