இடி மட்டும்
விழுந்து கொண்டே இருந்தது
மழை வரவும் இல்லை…
இடி தாக்கிய மரம் மீண்டும் தளிர்க்கவும் இல்லை
o + o + o
ஓங்கி பெய்த மழை ஓய்ந்ததும்
எல்லோரும் நகரத் துவங்கினர்…
அவர்கள் விட்ட குடை
அவர்கள் நினைவிற்கு வரவே இல்லை…
அடுத்த மழை வரும் வரை
o + o + o
வானவில்லும் வேண்டுமென்கிறாய்.
மழையையும் பிடிக்காதென்கிறாய்!
o + o + o
எந்த மேகம் மழை மேகமென்று
அந்த மயிலுக்கு மட்டும் தெரிகிறது..
என்னை சரியாய்
மொழிபெயர்த்துவிடுகிற அவளை போல…
பல நேரங்களில்
தோகை விரித்த மயில்
ஏமாந்து போகிறது… ஏமாற்றப்படுகிறது.
அந்த பொய்யை நம்புவது தான்
மயிலுக்கு நல்லதென்கையில்
மேகம் மயிலை ஏமாற்ற யோசிப்பதே இல்லை
o + o + o
மழை நிற்கபோகிறதென
தெரிந்த பிறகு
மழையை ரசிக்க பயமாய் இருக்கிறது…
நாளை மழை கேட்டு அடம்பிடிக்கும்
என்னை எதை காட்டி ஏமாற்றுவது…
o + o + o
மழை வர காத்திருந்தவர்கள்
இன்று நிற்க காத்திருக்கிறார்கள்…
No comments:
Post a Comment