அவளுக்கு சேராது என்று தெரிந்தபின்
அந்த மழை பொழியவே இல்லை…
என்றாவது பெய்யும் மழையால்
அவள் காய்ச்சல் கொண்டால் கூட
அந்த மழைக்கு பின்னான வானவில்
சாயம் இல்லாமல் தான் இருந்தது…
# o # o #
சாரல் துளியின் கணம் தாளாமல்
உதிரும் என்று தெரிந்தும்
அந்த மலர் மழை ரசித்து கொண்டிருந்தது
உதிர்வதின் வலி சுகம் என்பது
மலர் தவிர்த்து யாருக்கு புரியும்…
# o # o #
போன முறை
அவன் ரசித்துகொண்டிருக்கையில்
சட்டென்று நின்ற மழை
இந்த முறை மீண்டும் வந்திருந்தது
ஆனால் ரசிக்க அவன் இல்லை அங்கே
அவன் இருக்க போவதில்லை எங்கயும்…
# o # o #
நிமிடத்தில்
அந்த குழந்தை சிரிப்பை எடுத்துக்கொண்டு
ஓடிப் போக போகிற
அந்த மழை
ஓங்கி பெய்து கொண்டிருந்தது…
இது தெரியாமல் அந்த குழந்தை
சிரித்து விளையாடிகொண்டிருந்தது மழையில்
# o # o #
மேகத்தில் பிறக்கிற “அதே மழை”
மண்ணிற்கு வருவதில்லை
என் இருதய வார்த்தைகளும் கூட…
# o # o #
நான் மழை.
நீங்கள்
என் கண்ணீரை ரசிக்கும் வரம் பெற்றவர்கள்
No comments:
Post a Comment